Published:Updated:

சீர்காழி: மீனவர்களுக்கான கிசான் அட்டை வழங்குவதற்கு லஞ்சம்... சிக்கிய மீன்வளத்துறை அதிகாரி!

மீனவர்கள்
மீனவர்கள்

மீனவர்களிடம் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் பணம் பெற்றுள்ள ஊழல் தினமும் வெளிவந்தபடி உள்ளது. இந்நிலையில் சீர்காழி மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் சங்கர் மீனவர்களுக்கான கிசான் அட்டை வழங்க நபர் ஒருவருக்கு  தலா ரூ.100 வசூல் செய்ததாகப் புகார் எழுந்ததையொட்டி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சங்கரிடம் இருந்த ரூ.18,080 பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அலுவலகம்
அலுவலகம்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனை வாங்க மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மீன்வளத்துறை சார் ஆய்வாளர் பரிந்துரை செய்வார். இவ்வாறு பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இதன்மூலம் மீனவர்கள் பயனடைவார்கள்.

நாகை மாவட்டம், சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சங்கர். இவர் கீழமூவர்கரை மீனவர் கிராமத்திலுள்ள மீனவர்களிடமிருந்து பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 162 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளார். இந்த விண்ணப்பங்களை வங்கிக்குப் பரிந்துரை செய்ய தலா ரூ.100 வீதம் மீனவர்களிடம் லஞ்சமாக வசூலித்ததாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் சங்கரிடம் இருந்த ரூ.18,080 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர் மற்ற மீனவ கிராமங்களிலும் இதுபோல வசூல் செய்துள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு