Published:Updated:

`மழைநீர்...மூங்கில் கம்பு...நடுக்கடலில் 5 நாள்கள்! - திக்..திக் அனுபவம் பகிர்ந்த மீனவர்

மலையரசு

ஐந்து நாள்களாக கடலில் தத்தளித்த இந்திய மீனவரைக் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்துள்ளனர் வங்கதேச மீனவர்கள்.

மீனவர்கள்
மீனவர்கள்

மேற்குவங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தின் நாராயண்பூரை சேர்ந்தவர் ரபிந்திரநாத் தாஸ். மீனவரான இவர் சக மீனவர்கள் 11 பேருடன் கடந்த 4ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இரண்டு மூன்று நாள்களாக கடலில் தங்கி மீன் பிடித்துவந்துள்ளனர். இதற்கிடையே கடந்த 6ம் தேதி கனமழை பெய்யதொடங்கியுள்ளது. நாள் முழுவதும் பெய்த மழையால் மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது. படகு மூழ்கிய போது மூன்று மீனவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கடலில் கிடைத்ததை பிடித்துக்கொண்டு நீந்திக்கொண்டே இருந்துள்ளனர்.

மீனவர்கள்
மீனவர்கள்

தாஸும் கையில் கிடைத்த மூங்கில் கம்பைப் பிடித்துக் கொண்டு நீந்திவந்துள்ளார். இதற்கிடையே நாள்கள் கடக்க ஒவ்வொருவரும் தாக்குப்பிடிக்க முடியாமல் நீரில் மூழ்கி உயிரை விட்டுள்ளனர். ஆனால் மீனவர் தாஸும், அவரது மருமகனும் மூங்கிலைப் பிடித்தபடியே உயிருக்காகப் போராடி வந்துள்ளனர். ஐந்து நாள்கள் தண்ணீரிலேயே மிதக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரது மருமகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த சில மணி நேரங்களில் வங்கதேச கடற்படையினர் தாஸ் நீரில் மிதப்பதை பார்த்து அவரை மீட்டுள்ளனர்.

அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை கண்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து அவரை உயிர்பிழைக்க வைத்துள்ளனர். இதற்கிடையே, முழு நினைவு திரும்பியுள்ள தாஸ் செய்தியாளர்களிடம் நடந்த சம்பவம் குறித்து இன்று பேசினார். அதில், தனக்கு கடலில் ஏற்பட்ட திகிலான அனுபவங்களை பகிர்ந்தார். அதில், ``கனமழையால் படகு தண்ணீரில் மூழ்கிய போது மூங்கில் கம்பை நான் பிடித்துக்கொண்டு லைஃப் ஜாக்கெட்டை எனது மருமகனுக்குக் கொடுத்தேன். அந்த ஐந்து நாள்களும் பெய்யும் மழை நீரைக் குடித்துக்கொண்டே உயிர் வாழ்ந்தோம்.

ரபிந்திரநாத் தாஸ்
ரபிந்திரநாத் தாஸ்

ஆனால், கடற்படையினர் காப்பாற்றுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக அவன் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டான். நானும் உயிரிழந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், தொலைவில் கடற்படையின் கப்பலை பார்த்த பிறகுதான் நம்பிக்கை வந்தது" எனக் கூறியுள்ளார் தாஸ். மனவலிமையால் ஐந்து நாள்கள் கடலில் போராடி மீண்டுள்ள தாஸுக்கும், அவரை மீட்ட வங்கதேச கடற்படையினருக்கும் இணையத்தில் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.