Published:Updated:

“ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாது!”

வேதனையில் தமிழக மீனவர்கள்

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வைரஸ், மீன்பிடித் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும் முடக்கிப் போட்டுள்ளது. ‘`கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க விட்டமின் சி உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் உணவில் விட்டமின் சி சத்து இருப்பதால் அதைச் சாப்பிடலாம்’’ எனப் பரிந்துரை செய்கிறார்கள் சகலவிதமான மருத்துவர்களும்.

அதனால் மீன் விற்பனைக்குத் தடையில்லை. ஆனால், மீன் பிடிப்பதற்குத் தடை. ஊரடங்கு ஏப்ரல் 14 அன்று முடிவுக்கு வந்தாலும், மீனவர்களால் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியாது. மறுநாளே, மத்திய அரசு அறிவித்துள்ள இரண்டு மாதங்களுக்கான மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிடுகிறது. இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. எனவே, மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வருவாயின்றி தத்தளிக்கும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

அந்தோணி - சபீன்
அந்தோணி - சபீன்

இதுகுறித்து சி.ஐ.டி.யு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் அந்தோணி நம்மிடம் பேசுகையில், ‘‘ஏப்ரல் 15-லிருந்து இரண்டு மாதங்களுக்கு கிழக்கு கடல் பகுதியிலும், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மேற்கு கடல் பகுதியிலும் மீன் பிடிக்கத் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி வரை கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் வருகின்றன. ராஜாக்கமங்கலம் தொடங்கி நீரோடி வரை உள்ள குமரி மாவட்டத்தின் பிற பகுதிகள், மேற்கு கடல் பகுதியில் வருகின்றன.

கடல் பகுதியில் இந்தச் சமயங்களில் பலமான சூறைக்காற்று வீசுவதால், அது மீன்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்த காலமாக இருக்கும். அந்தச் சமயத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடைக்காலத்தில் கரையோரத்தில் நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் போன்றவற்றில் மீன் பிடிக்கலாம்.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24-ம் தேதியில் இருந்தே சுமார் ஒரு மாத காலம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கேரளத்தில் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வரும் நாட்டுப்படகுகளுக்கு, சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில், கொரோனா காலத்தில் கரையோரமாக மீன் பிடிக்கவும் அனுமதி அளிக்கவில்லை.

படகுகள்
படகுகள்

கொரோனா தடை, அதை தொடர்ந்து மீன்களின் இனப்பெருக்கத் தடை என தமிழக மீனவர்கள் மூன்று மாதங்களாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள் தொடர்ந்து வெயிலிலேயே இருப்பதாலும் இயக்கப்படாத தாலும் பழுதடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே வட்டிக்குக் கடன் வாங்கி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், கொரோனா காரணமாக பாதியில் கரை திரும்பியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தால், தொடர் நஷ்டத்தால் கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, மத்திய - மாநில அரசுகள் கலந்துபேசி இரண்டு மாதங்களாக இருக்கும் மீன்பிடி தடைக்காலத்தை இந்த ஆண்டு மட்டும் குறைத்து, குறைவான நாள்கள் தடைவிதிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன் கூறுகையில், ‘‘மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக மீனவர்களுக்கு கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த நிவாரணத்தொகையை 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் விவரங்களை டிஜிட்டல்மயமாக்கும் விதமாக கைவிரல் ரேகைப் பதிவு உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர். ஆன்லைன் பதிவேற்றத்தை இப்போது நிறுத்தி வைத்துள்ளதால், பதிவுசெய்யாத மீனவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குமரி மாவட்டத்திலேயே ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விவரங்களை இன்னும் ஆன்லைனில் பதிவுசெய்யாமல் உள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது. எனவே, அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கொரோனா ஊரடங்கு தொடருமானால், கரையோரங் களில் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தமிழக மீன்வளத் துறை செயலர் கோபாலிடம் பேசினோம். ‘‘மீன்களின் இனப்பெருக்கம் இந்தக் காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. `கொரோனா காரணமாக மார்ச் 23-ம் தேதியே மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்தச் சமயத்தையும் மீன்பிடி தடைக்காலக் கணக்கில் எடுக்க வேண்டும்’ எனவும், `ஜூன் 14 நிறைவடையும் மீன்பிடி தடைக்காலத்தை 15 நாள்களுக்கு முன்னதாகவே நிறைவுசெய்து மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்’ எனவும் தலைமைச் செயலாளர் மூலமாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். இனி, மத்திய அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசை வலியுறுத்துமாறு பிற கடலோர மாநிலங்களின் அரசுச் செயலர்களிடம் நான் பேசியிருக்கிறேன்’’ என்றார்.

மத்திய அரசு மனமிரங்குமென்று நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு