Published:Updated:

“கடல் வெறும் தண்ணி மட்டும் இல்ல சார்!”

பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
பாளையம்

பூவரச மரத்த வெட்டி, நாலஞ்சு மரத்த வரிசையா கட்டி, ஆறேழு ஆளுங்கள சம்பளத்துக்குப் பிடிச்சு, அந்த மரங்கள கடல்ல ஒரு குறிப்பிட்ட எடத்துல கொண்டுபோய் நிறுத்துவோம்.

“கடல் வெறும் தண்ணி மட்டும் இல்ல சார்!”

பூவரச மரத்த வெட்டி, நாலஞ்சு மரத்த வரிசையா கட்டி, ஆறேழு ஆளுங்கள சம்பளத்துக்குப் பிடிச்சு, அந்த மரங்கள கடல்ல ஒரு குறிப்பிட்ட எடத்துல கொண்டுபோய் நிறுத்துவோம்.

Published:Updated:
பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
பாளையம்

சென்னை ஊரூர்க் குப்பத்திலிருக்கும் மீனவரான பாளையத்தின் வீட்டிலிருந்து நாங்கள் நடக்க ஆரம்பித்தபோது கிழக்கு வெளுக்கக் தொடங்கியிருந்தது. அடையாற்று முகத்துவாரம் நோக்கிக் கடற்கரையோரமாக நாங்கள் நடக்கலானோம். அலைகளின் ஓசைக்குப் பதிலளிக்கும்விதமாக, அவற்றின் லயத்துக்குத் தலையாட்டிக்கொண்டே வந்த பாளையம், ஒன்றிரண்டு முறை ஏதோ சொல்ல வாயெடுத்து, பிறகு நிறுத்திவிட்டார். கடலுடனான அவருடைய மௌன உரையாடலைக் கலைக்க விரும்பாமல், அமைதியாக நானும் அவரோடு நடந்துகொண்டிருந்தேன்.

57 வயதாகும் பாளையம், சென்னையின் பூர்வகுடிகளில் ஒன்றான மீனவர்களின் பாரம்பரிய அறிவை இன்னும் சுமந்துகொண்டு அலையும் வெகு சிலரில் ஒருவர்; சிறுவனாக இருந்த காலகட்டத்திலேயே கடலுக்குள் சென்றுவிட்ட பாளையம், அனுபவங்களால் கடலைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார். தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கடலில் கழித்துவிட்ட பாளையத்தின் உடலும் நினைவும் கடலாகவே மாறிப்போயிருக்கிறது. பாளையத்தின் கடல் பற்றிய அறிவு, நவீன தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் மீறி நிற்கிறது!

நாங்கள் முகத்துவாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற படகு ஒன்று கரைக்கு வந்துகொண்டிருப்பது தூரத்தில் தெரியவே, பாளையத்தின் பார்வை அதில் குத்திட, நடையில் வேகமிழந்து அப்படியே நின்றுவிட்டார். அவரது எண்ணற்ற அனுபவங்களில் ஏதோ ஒன்றை அவரது நினைவு துழாவிக்கொண்டிருப்பதை வெளிப்படையாகக் காணமுடிந்தது.

“இன்னிக்கு தொட்டா தெரியிற ஜிபிஎஸ் பாயின்ட் மாதிரி எந்த வசதியும் அன்னிக்குக் கெடையாது சார்... நான் கடல்ல எறங்குன காலத்துல பரங்கிமலையும் எல்.ஐ.சியும் தான் எனக்கு ஜிபிஎஸ் பாயின்ட்டு. கரைல இருந்து கடல் மேலா போற நேர்விலங்குக்குப் பரங்கிமலைதான் புள்ளி... கடல்ல இருந்து கரைக்கு வர்ற வடாவிலங்குக்கு எல்.ஐ.சி கட்டடம்தான் புள்ளி.

“கடல் வெறும் தண்ணி மட்டும் இல்ல சார்!”

வங்காள விரிகுடால கரையிலிருந்து மேலா போனா மேமெரி; மேலிருந்து கரைக்கு வந்தா ஒலினின்னு ரெண்டு வெள்ளம் இருக்கு... தெக்குல இருந்து வடக்கா போனா தெண்டி; வடக்கால இருந்து தெக்கா வந்தா வன்னின்னு ரெண்டு நீரோட்டமும் இருக்கு. ஒரு மீனவனுக்கு இந்த நாலு பாடமும் எப்பயும் மனசுல இருக்கணும். நீரோட்டம் எப்படி இருக்கு, எந்த நீரோட்டத்துல, ஆங்கர எங்க வைக்கணும், இரைய எங்க போடணுங்கிறதெல்லாம் தெரியணும்.” பாளையம் தொடர்ந்து பேசினார்...

“என் காலத்துல எல்லாம் கைமரம்தான்... நான் தான் கோல் தாங்குவேன். சவுக்குக் கோல் தாங்கி படக செலுத்துவோம்... நீரோட்டத்துக்குத் தகுந்த மாதிரி கோல் போடணும். பலத்த வெச்சுத் தாங்குனாதான் நாம போயி, அலையை எதிர்கொள்ள முடியும். இல்லனா அலை நம்மள தூக்கிக் கவுத்திரும். கவுத்தாத அளவுக்கு நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். எத்தனையோ முறை கோல் எல்லாம் உடைஞ்சிருக்கு. கவுத்தியும் போட்டிருக்கு. தலைப்பாக்கல்லு, மொட்ரிக்கல்லு, டேங்கு, தாளைக்கல்லு, கருக்கு, வங்காள்பார், பாப்பத்தி அம்மா கோயில், பசுவாக்கல், கட்டிப் பெருங்கல், துண்டுகல், ஆலியாபார், கிணத்துக்கல்லுன்னு பன்னெண்டு கல்லா கடலு உள்ள போகப் போக ஆழத்தக் கணக்குப் பண்ணுவோம்!

பூவரச மரத்த வெட்டி, நாலஞ்சு மரத்த வரிசையா கட்டி, ஆறேழு ஆளுங்கள சம்பளத்துக்குப் பிடிச்சு, அந்த மரங்கள கடல்ல ஒரு குறிப்பிட்ட எடத்துல கொண்டுபோய் நிறுத்துவோம். இன்னைக்கு பவளப் பாறைகள கொண்டு கடல்ல விடலயா... அதுமாதிரி மீன்கள் வசிக்கிறதுக்கு ஒரு வீடு மாதிரியான ஏற்பாடா இந்தப் பூவரச மரம் இருக்கும். அங்க வர்ற சின்ன மீனுங்கள இரையா வெச்சு பெரிய மீனுங்களப் புடிப்போம்... பசியில்லாத சாப்பாடு கெடைக்கும். என்னாண்ட பத்து போட்டு இருந்தா மீனும், பணமும் தன்னால வந்துடாது. புத்தி பயன்படணும் சார்.” பேசிக்கொண்டே சென்றார் பாளையம்.

நாங்கள் அடையாற்று முகத்துவாரத்தில் நின்றோம்; விடிந்திருந்தது!

ஆறு ஒன்று கடலில் சேரும் இடமாக அல்லாமல், சென்னையின் ஒட்டுமொத்தக் கழிவும் வந்துநிற்கும் இடமாக அது மாறியிருக்கிறது. பின்னே எம்.ஆர்.சி நகரில், சூழலுக்குப் பொருந்தாமல் எழுந்துநிற்கும் கடல்பார்த்த கட்டடங்களோடு முகத்துவாரத்தின் தன்மையே ஒட்டுமொத்தமாக சிதைந்து கிடக்கிறது. கழிசடையாக மாறிப்போன ஆற்றைத் தன்னிடம் சேர வேண்டாம் என எதிர்ப்பதுபோல் முகத்துவாரத்தில் வீசுகிறது கடலலை.

“அம்பது, அறுவது வருஷத்துக்கு முன்னாடி, அடையாறு ஆறும் முகத்துவாரமும் ரொம்ப அகலமா இருக்கும்... தண்ணி எல்லாம் ரொம்ப ஃபோர்ஸா போகும். கடல் தண்ணி உள்ள கோட்டூர்புரம், சைதாப்பேட்ட லெவலுக்குப் போவும். இந்த நீலத்தண்ணி உள்ள போனா சுறா, ஓலா, மாவலாசி, கிளிஞ்சான், காலா, வஞ்சிரம்னு எல்லா மீனும் இங்க கரைல நீந்தும்; அடையாறு ரிவர்ல, கரைல இருந்தே புடிப்போம். மீனுங்க மட்டும் இல்லாம, நிறைய பறவைகளும் வரும். நீ எதுக்கு வேடந்தாங்கலுன்ற, பல ஆயிரம் வெளிநாட்டுப் பறவைங்க வாழ்ந்த எடம் நம்ம அடையாறு... பழைய நினைவுகள் வந்தாலே கண்ல தண்ணி கட்டிருது சார்” காலை வெயிலில் பளபளக்கின்றன பாளையத்தின் கண்கள்.

“ஆறுன்றது தாய்... கடலோட கருவறை சார் அது. குட்டி, குழந்தை, குஞ்சு எல்லாம் பிறக்கிறது ஆத்துலதான். அதுல வளர்ற குட்டி, குழந்தைங்கள வளத்து ஆளாக்குறது கடல்தான். இன்னிக்கு அதோட நெலமையப் பாருங்க. ஒரு குஞ்சு, குழந்தை இல்ல... நான் சின்ன வயசுல இருந்த காலத்துலகூட எறா முட்ட, நண்டு முட்ட, மீனு முட்டன்னு முட்டைகளாச்சும் பாத்தோம்.

இன்னிக்குப் பாருங்க... காவாத் தண்ணி, ஆஸ்பிடல் தண்ணின்னு எல்லாத் தண்ணியும் ஆத்துல விட ஆரம்பிச்சாங்க, எல்லா மீனையும் அழிய வெச்சாங்க. அடையாறு இன்னிக்கு ஆறாவா இருக்குது? இந்த நெலமையப் பாக்க வயிறு எரியிது சார் எனக்கு... இன்னிக்கு மீன்கள் இல்ல; கஷ்டப்பட்டு வல வாங்கிப் போட்டாலும் தொழில் இல்ல. அரசாங்கம் தர்ற நிவாரணமும் பத்தல... டீசல் விலையும் ஏறிட்டே போகுது... பொழைக்க வழிதெரியாம நிக்கிறோம்!” ஆமோதிப்பதைப் போல் பொங்கியது ஓர் அலை.

குடும்பத்துடன் பாளையம்
குடும்பத்துடன் பாளையம்

வெயில் ஏறத் தொடங்க, திரும்பி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம். உடல்நலப் பிரச்னைகளால், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது கடலுக்குள் இறங்க முடியாத கட்டாயத்தில் இருக்கிறார் பாளையம். இருந்தாலும், மீனவர் நலன் சார்ந்து இயங்கும் நிறுவனம் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பாளையம், கடல் சார்ந்த தன்னுடைய அறிவை, அனுபவத்தைப் புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

“கடல ரொம்ப மிஸ் பண்றேன் சார்... மண்ணா இருந்தாக்கூட மூடிடலாம், ஆனா கடலை மூட முடியுமா? ஜனங்க கடலப் பாத்து ரசிக்கிறாங்க, ஆனா கடல்ல என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியல. அது வெறும் தண்ணி மட்டும் இல்ல சார்! எனக்கு மைண்ட்ல கடல் தான் ஓடும், தூக்கம் அத்துப் போச்சு. இன்னிக்கும் ஆளுங்கள இட்டுனு போனாக்கூட சம்பாரிச்சுக் கொடுக்கிற டேலண்ட் இருக்கு. என்னென்ன பண்ணணும்னு உத்தி, புத்தி இருக்கு... ஆனா, கடல்ல எறங்குனா உயிருக்கு உத்தரவாதமில்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு... புள்ள குட்டிக்காரன் சார் நானு!”

பாளையத்தின் பெருமூச்சு வங்கக் காற்றில் கரைய, எனக்கு நகுலனின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.

அலைகளைச் சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism