Published:Updated:

5 மாநில கடத்தல்காரர்கள் முற்றுகையிடும் நாகைக் கடற்கரை! - காலியாகக் கிடக்கும் என்.ஐ.பி கூடாரம்...

2012 முதல் இன்று வரை வேதாரண்யம் காவல் நிலைய எல்லையில் மட்டும் 20 கிலோவுக்கு மேற்பட்ட 10 கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பிரீமியம் ஸ்டோரி

இலங்கையை ஒட்டியுள்ள, நாகை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கடத்தல்காரர்கள் இங்கு முற்றுகையிடும் நிலையில், கடத்தலைக் கட்டுப்படுத்த வேண்டிய டெல்டா சரக போதைப்பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறையின் (என்.ஐ.பி) கூடாரமே காலியாக இருப்பதால், கடத்தல் தொழிலைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை!

இந்தியாவிலிருந்து கஞ்சா, அபின், பிரௌன் சுகர் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடல்வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு, அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. இலங்கையிலிருந்து பெரும்பாலும் தங்கக்கட்டிகளே இங்கு கடத்தப்படுகின்றன. இது பற்றி உள்விவரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம்... “இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு நிறுவனம்தான், கஞ்சா கடத்தலில் முன்னணி வகிக்கிறது. இலங்கையிலுள்ள அரசியல் புள்ளிகள் சிலரும் இந்தத் தொழிலின் பின்னணியில் இருக்கிறார்கள். சுங்கவரி மிச்சம் என்பதால், இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகள் வந்து இறங்கிய கையோடு கடத்தல்காரர்களுக்குப் பல லட்சம் ஹாட் கேஷ் கொடுக்கப்படுகிறது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்தும் கடத்தல்காரர்கள் இங்கு குவிகிறார்கள்.

5 மாநில கடத்தல்காரர்கள் முற்றுகையிடும் நாகைக் கடற்கரை! - காலியாகக் கிடக்கும் என்.ஐ.பி கூடாரம்...

இதையெல்லாம் மாநில அரசின் போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு (என்.ஐ.பி), மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ), தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு (என்.சி.பி) ஆகிய அமைப்புகளே கண்காணித்து தடுக்க வேண்டும். அதேசமயம் காவல்துறை, கடலோர காவல் குழுமம், க்யூ பிராஞ்ச் ஆகிய போலீஸார் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்கும்போது 20 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிபட்டால், என்.ஐ.பி-யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள்தான் வழக்கு தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும். ஆனால், அந்தப் பிரிவில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா சரகத்தில் ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., ஒரு எஸ்.எஸ்.ஐ., நான்கு போலீஸார் அடங்கிய டீம் மட்டுமே இருப்பதால், கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல... கடத்தலைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை...” என்றவர்கள், அது தொடர்பான சில தரவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள்.

‘‘2012 முதல் இன்று வரை வேதாரண்யம் காவல் நிலைய எல்லையில் மட்டும் 20 கிலோவுக்கு மேற்பட்ட 10 கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. என்.ஐ.பி இந்த வழக்குகளைக் கிடப்பில் போட்டுவிட்டது. 2011-ல் வேதாரண்யம் அருகே முனீஸ்வரன் என்பவரிடமிருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை நபர்கள் உட்பட ஆறு பேரை போலீஸார் பிடித்து என்.ஐ.பி-யிடம் ஒப்படைத்தார்கள். இந்த வழக்கை என்.ஐ.பி சரியாக நடத்தாததால், அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். 2018-ல் க்யூ பிராஞ்ச் போலீஸார், 692 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினார்கள். 2020-ல் வேதாரண்யம் அருகே நாலுவேதி மீனவ கிராமத்தில் 38 கிலோ கஞ்சாவைப் புதைத்துவைத்திருந்த போஸ் என்பவரைக் கைது செய்தார்கள். கடந்த தீபாவளி அன்று புஷ்பவனம் கிராமத்தில், மணிகண்டன் என்பவரின் படகிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கடத்தவிருந்த மூன்று மூட்டை கஞ்சா பிடிபட்டது. மேற்கண்ட மூன்று வழக்குகளும் என்.ஐ.பி-யில் தூங்குகின்றன.

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, வேதாரண்யத்தைச் சேர்ந்த குணசேகரனுடன் இணைந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் கடத்திய 300 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றி என்.ஐ.பி-யிடம் ஒப்படைத்தனர். அப்போது தப்பிய இருவரும் தொடர்ந்து கஞ்சா கடத்திவருகிறார்கள். 2021, ஜனவரியில் கும்பகோணத்தில் 28 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட மார்சல் டெரன்ஸ் ராஜா, சமீபத்தில் 250 கிலோ கஞ்சாவை ஆம்பூலன்ஸில் கடத்தியபோது பிடிபட்டார். சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரன் விஜயமூர்த்தி என்பவன் வந்த படகு பழுதாகி, நாலுவேதபதி கரையோரம் ஒதுங்கியது. விஜயமூர்த்தியை க்யூ பிராஞ்ச் போலீஸார் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால், அவனைச் சரியாக விசாரிக்காத போலீஸார், அவன் தவறுதலாக இந்தியப் பகுதிக்கு வந்துவிட்டதாகத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். தற்போது டெல்டா சரக என்.ஐ.பி பணியிடங்கள் பலவும் காலியாக இருப்பதால், அந்தப் பிரிவின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிவிட்டன. கடத்தல் தொழில் படுஜோராக நடக்கிறது” என்றார்கள் விரிவாக.

பரத் சீனிவாசன்
பரத் சீனிவாசன்

டெல்டா சரக என்.ஐ.பி-யின் டி.எஸ்.பி பரத் சீனிவாசனிடம் இது பற்றியெல்லாம் விளக்கம் கேட்டோம். ‘‘ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் கஞ்சா, பல செக்போஸ்ட்டுகளைத் தாண்டித்தான் வேதாரண்யத்துக்கு வருகிறது. பிறகு, இங்கிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுகிறது. நான் இந்தப் பதவிக்கு வந்த ஓராண்டுக்காலத்தில், கடத்தலை தடுப்பதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டேன்... ஆனாலும், பலனில்லை. எங்கள் பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நான்கு போலீஸார் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். நானும் தற்போது உடல்நலம் சரியில்லாமல் விடுப்பில் இருக்கிறேன். இந்த டீமை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்? எனக்கே வருத்தமாக இருக்கிறது...” என்றார் ஆதங்கத்துடன்!

கடத்தலைத் தடுக்கவேண்டிய காவல்துறையின் முக்கியப் பிரிவே இப்படிப் பரிதாபகரமாக இருப்பது வேதனை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு