Published:Updated:

விழுப்புரம்: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள்! - தத்தளிக்கும் மக்கள்

வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்
வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்துவரும் வரும் தொடர் கனமழை காரணமாக, பல கிராமங்களில் ஏரிகள் மற்றும் தரைப்பாலங்கள் உடைந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தற்போதுவரை நீடித்துவருகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை பருவமழை கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவுக்குக் கைகொடுக்காத நிலையில், இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துவருகிறது. நவம்பர் 25-ம்தேதி `நிவர்’ புயலின்போது விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 3,500 மி.மீ மழை பதிவானது. விழுப்புரம் நகரில் மட்டும் ஒரேநாளில் 279 மி.மீ மழை பெய்ததால் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

விழுப்புரம் கனமழை
விழுப்புரம் கனமழை

ஒரு வாரத்துக்கும் மேலாக புதிய பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதந்தது. மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்த நிலையில், அடுத்து வந்த புரெவி புயலின்போதும் பரவலாக மழை பெய்தது. அதனால் பம்பை, சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல வீடுர் அணை முழுக் கொள்ளவை எட்டியதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டுவருகிறது.

அணையின் கரையோரம் அமைந்திருக்கும் கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்யாமல் இருந்த மழை நேற்று முன்தினம் முதல் பெய்யத் தொடங்கியிருக்கிறது. கடந்த இரு நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகள் மேலும் நிரம்பத் தொடங்கியிருக்கின்றன. பல இடங்களில் ஏரிகள் உடைந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்திருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நிரம்பிவழியும் அணை
நிரம்பிவழியும் அணை

சாலாமேடு ஏரி முழுமையாக நிரம்பியதால் அதன் கரை உடைந்து அபிதா கார்டன், சிங்கப்பூர் நகர் உள்ளிட்ட பகுதியிலுள்ள சுமார் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. அதனால் அந்தப் பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல் காணைகுப்பம்-அகரம் சித்தாமூர் செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் சூரப்பட்டு, கெடார் உள்ளிட்ட 25 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே நிவர் புயலின்போது வெள்ளப்பெருக்கால் சேதமடைந்திருந்த இந்தப் பாலத்தில் தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இந்தப் பாலத்தை தடைசெய்யப்பட்ட பகுதி என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.

Vikatan

அதேபோல கண்டாச்சிபுரத்தை அடுத்திருக்கும் கணையம், விக்கிரவாண்டியை அடுத்திருக்கும் புதுப்பாளையம், செஞ்சிக்கு அருகேயிருக்கும் சில கிராமங்களிலும் ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதனால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துகொண்டு கிராமங்களில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஊரக வளர்சசித்துறைக்குக் சொந்தமான 779 ஏரிகளில், 460 ஏரிகள் 100 சதவிகிதமும், 300 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. அதேபோல், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 560 ஏரிகளில், 50 சதவிகித ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு