Published:Updated:

‘`எனக்கு 65 வயசு, என் ஆட்டத்துக்கு 52 வயசு!” - திருநங்கை தருமம்மா

திருநங்கை தருமம்மா
பிரீமியம் ஸ்டோரி
திருநங்கை தருமம்மா

அப்புடியே இந்தப் பக்கம் எழவுக்குப் போனா... ஒப்பாரி, மார் அடி பாட்டு, செத்தவர் பெரும, முறைக்காரவுக பெருமனு பாடணும்.

‘`எனக்கு 65 வயசு, என் ஆட்டத்துக்கு 52 வயசு!” - திருநங்கை தருமம்மா

அப்புடியே இந்தப் பக்கம் எழவுக்குப் போனா... ஒப்பாரி, மார் அடி பாட்டு, செத்தவர் பெரும, முறைக்காரவுக பெருமனு பாடணும்.

Published:Updated:
திருநங்கை தருமம்மா
பிரீமியம் ஸ்டோரி
திருநங்கை தருமம்மா

“ரேடியோ, டிவி எல்லாம் எங்க ஊருப்பக்கம் வராத காலம் அது. நைட்டுக்கு கூத்தும், ஆட்டமும்தான் பொழுதுபோக்கு.

1965 இல்ல 66 இருக்கும்... சைக்கிள் சுத்துறவுக எங்க ஊருல மூணு நாளு கொட்டக போட்டு சுத்த ஆரம்பிச்சாக. அதுல, இடையில இடையில ஆம்பளைக பொம்பள வேசம் போட்டு ஆடுவாக. அங்க போன நான், முதல் நாள் முழுக்க வேடிக்கை பாத்துக் கிட்டே, தண்ணி தூக்கிக் கொடுத்து ஒத்தாச பண்ணி அந்தக் கொட்டகைக்குள்ளயே கெடந்தேன். ரெண்டாவது நாள் ஒரு முடிவோட, அம்மாவோட சேல, சட்டைய போட்டுக்கிட்டு, மூஞ்சிக்கு போடுற பவுடர்ல குங்குமத்த சேத்து ரோஸ் பவுடரா பூசிக்கிட்டு, சோத்துப் பானை கரில தேங்காய் எண்ணெயக் கலந்து கண் மை ஆக்கித் தடவிக்கிட்டு, கொட்டகைக்குள்ள போனேன். பொம்பள வேசம் போட்டு ஆடுன ஆம்பளைங்களுக்கு நடுல, ‘பொம் பளையே ஆட வந்திருக்கேன் பாருங்க’னு ஆட ஆரம்பிச்சேன். ரெண்டாவது பாட்டப்போ பாதியில வந்த எங்கம்மா வெளக்கமாத்த எடுத்து என்னை அடிச்சு தெருத் தெருவா துரத்துச்சு” - பெரும் சிரிப் புடன் தனது கலையின் ஆரம்பத்தையும், பாலின மாறுதலுக்கான தனது ஆசை வெளிப்பட்ட ஆரம்ப தருணத்தையும் சொல்கிறார், மதுரை யின் முதல் திருநங்கை நாட்டுபுறக்கலைஞர் தருமம்மா.

‘`எனக்கு 65 வயசு, என் ஆட்டத்துக்கு 52 வயசு!” - திருநங்கை தருமம்மா

``1975-ல இருந்து 85, 90 வரைக்கும் சுத்து வட்டாரத்துல ‘அழகம்மா தருமம்மா’ கோஷ்டி ஆட்டத்துக்கு அம்புட்டு ஃபேமஸ். அழகம்மா வும் என்னை மாதிரியே ஒரு திருநங்கை. ரெண்டு பேரும் நிக்க நேரமில்லாம ஆடிக் கிட்டு இருந்தோம். புக் பண்ண வர்றவுக எங்களைப் பார்க்கக் கூட முடியாது. ஏதாவது ஆட்டத்துக்குப் போய்க்கிட்டே இருப்போம். அவுக பக்கத்து வீட்டுல பணத்தைக் கொடுத் துட்டு, காலண்டர்ல நாளும் விலாசமும் எழுதிட்டுப் போயிருவாக. அவ்வளவு பிஸி. ஏன் தெரியுமா? அந்தக் காலகட்டத்துல எல்லாம் திருநங்கைகள் பெரும்பாலும் தங்களை வெளிப்படுத்திக்காம, சாகுறவரை ஆம்பளயாவே வாழ்ந்து முடிச்சிடுவாக. வெளிய தெரிஞ்ச கொஞ்ச பேர்லயும் நானும் அழகம்மாவும்தான் ஆட்டக்காரவுக. அத னால எங்களுக்கு அந்த மவுஸு’’ எனும்போது பெருமை சேர்ந்துகொள்கிறது தருமம்மாவுக்கு.

‘`அப்போல்லாம் கூத்துல ஆம்பளைங்க தான் பொம்பள வேஷம் கட்டுவாங்கங்கிறதால, எங்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கும். ஆனா, பிரச்னைகளும் இருக்கும். நடு ராத்திரி ஆட்டத்தை முடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது வம்பு பண்ணுவாக. ஒரு தடவை உசிலம்பட்டிகிட்ட ஒரு ஊர்ல, என் டிரஸ்ஸ எல்லாம் கிழிச்சுவிட்டு அசிங்கப்படுத்தி, உயிர் பொழச்சதே பெருசுனு ஆகிடுச்சு. ஆனாலும் ஆட்டத்த விடலை. இதுல கெடைக்குற கைதட்டு அந்தக் கசப்பையெல்லாம் இனிப்பா மாத்திடும்’’ - பேசிக்கொண்டிருக்கும்போதே அருகேயுள்ள கோயிலிலிருந்து திருவிழா கொண்டாட்டக் குரல்கள் ஒலிக்க, சற்றே காது கொடுத்த தருமம்மா, பெருமூச்சுடன் தொடர்ந் தார்.

‘`எனக்கு 65 வயசு, என் ஆட்டத்துக்கு 52 வயசு!” - திருநங்கை தருமம்மா

``ரெக்கார்டு டான்ஸு, மேடையில நடக்குற ஆட்டம்பாட்டமெல்லாம் வந்த பொறகு, எங்க மவுசு மட்டுமில்ல... பொழப்பும் கொறஞ்சி போயிட்டுது. நானெல்லாம் வேசங்கட்டி கரகம் வச்சிக்கிட்டு பாட ஆரம்பிச்சா, 40 வரிசை தாண்டி‌, ‘சத்தம் கம்மியா இருக்கு, இன்னும் சத்தமா பாடு’னு கத்துவாங்க. அவ்வளவு சவுண்டா பாடிக்கிட்டே ஆடுவோம். கோயில் திருவிழாவுக்குப் போனா... நாட்டாம பாட்டு, ஊர் பெரியவர் பாட்டு, கும்மிப் பாட்டு, சாமி துதினு பாடணும். நைட்டு நாட கத்துல வள்ளி திருமண நாடகம், அரிச்சந்திர மயானம்னு வரிசையா கூத்துக் கட்டணும்.

அப்புடியே இந்தப் பக்கம் எழவுக்குப் போனா... ஒப்பாரி, மார் அடி பாட்டு, செத்தவர் பெரும, முறைக்காரவுக பெருமனு பாடணும். இதுபோக கொழந்த பொறந்த வீட்டுல தாலாட்டு, நடவு காலத்துல நடவுப் பாட்டுனு... இம்புட்டையும் எங்க ஆசானுங்க எழுதிக்கொடுக்க, நாங்க மனப்பாடம் பண்ணி, அவுகவுக சொந்த மெட்டுப் போட்டு பாடிக் கிட்டே ஆடுவோம்’’ என்று வியக்கவைத்தார் தர்மா.

‘`இப்போதான் திருவிழான்னாலே சினிமா பாட்டு, டான்ஸுன்னு ஆயிப்போச்சு. ஒரு சில எழவு வீட்லயும், கட்சி மீட்டிங்குலயும் தனி ஆளு பெரும பாடக் கூப்பிடுவாக, அதனால எங்க பொழப்பும் ஒடுது. நான் ஆட ஆரம்பிச்சு எட்டு, பத்து வருசத்துல வகுப்பு எடுக்க ஆரம்பிச் சிட்டேன்.

‘`எனக்கு 65 வயசு, என் ஆட்டத்துக்கு 52 வயசு!” - திருநங்கை தருமம்மா

எனக்கு 65 வயசாகுது, என் ஆட்டத்துக்கு 52 வயசு. என்னை மாதிரி ஆட ஆசைப்பட்டு வந்த திருநங்கைகளுக்கும், ஆட்டத்து மேல ஆசப்பட்டு வந்த ஆம்பள, பொம் பளைகளுக்கும் என்னோட பாட்டு, ஆட்டம் எல்லாத் தையும் சொல்லிக் கொடுத்திருக்கேன். சில பள்ளி, கல்லூரிகள்ல வகுப்பு எடுத்திருக்கேன். ஆனா கொரோனாவுக்கு அப்புறம், அதெல்லாம் சுத்தமா நின்னு போச்சு. திருவிழா கூட்டத் துக்கு எல்லாம் தடை வந்த தால என்கிட்ட படிச்சதுக எல்லாம் இப்போ சித்தாள், சமையல் வேலைனு போகுதுக’’ என்றவர், தனது 10க்கு 20 வீட்டின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த தன் வெற்றிக் கேடயங்களை எடுத்துக் காட்டுகிறார்.

‘`நான் கத்துக்கிட்டத மத்தவுகளுக்கு சொல்லிக்கொடுக்கவும், என் 52 வருஷ கலை வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கிடைக்குற மாதிரியும் தமிழக அரசு எனக்கு ஏதாச்சும் ஒரு அங்கீகாரம் கொடுக்கணும். திருநங்கையின்னு இரக்கப் பட்டு தர வேண்டாம், என் திறமைக்குக் கொடுங்கனு தான் கேக்குறேன். அது, இன்னும் பலர் என்கிட்ட கலை கத்துக்க வரக் காரண மாவும் அமையும். சாகுறதுக்குள்ள இந்த நாட்டுப்புற பாட்டு, ஆட்டத்தையெல்லாம் நெறையா‌ பேருக்கு சொல்லிக் கொடுத்துடணும்’’

- கலைஞர்களுக்கேயான அதே தவிப்போடு முடித்தார் தருமம்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism