Published:Updated:

``அட்வான்ஸ்லாம் திரும்பக் கேட்கிறாங்க... குடிக்கிற கஞ்சியும் போச்சு!" - கலங்கும் கலைஞர்கள்

தமிழ் மண்ணின் அடையாளம் என நாம் பல இடங்களில் பெருமை அடித்துக்கொள்ளும் பாரம்பர்யக் கலைகளை நம்பியுள்ள கலைஞர்கள் பலர், சாப்பாட்டுக்கே சிரமப்படுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த விளைபொருள்களை மாட்டுக்கும் பன்றிகளுக்கும் போடும் அவலம் ஒருபுறம் என்றால், பசியால் அடுத்தவேளை உணவுக்கு அல்லாடும் மக்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தமிழ்நாட்டில் திருவிழாக்கள் களைகட்டும். தை மாதத்தில் அறுவடையை முடித்த விவசாயிகள், தங்கள் காவல் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திருவிழாக்களை நடத்துவது தமிழ்நாட்டின் பாரம்பர்யம். அவ்வாறு நடத்தப்படும் திருவிழாக்களில் கடவுளின் மனது குளிர்கிறதோ இல்லையோ, திருவிழாக்களையே நம்பி இருக்கும் கலைஞர்களின் வயிறு நிரம்பிவிடும்.

கரகாட்டம்
கரகாட்டம்

தை தொடங்கி வைகாசி வரை நடத்தப்படும் திருவிழாக்களை நம்பியே, வாழ்நாள் திட்டங்களை அமைத்துக்கொள்ளும் கலைஞர்களின் கனவை கொரோனா ஊரடங்கு மொத்தமாகச் சுருட்டிக்கொண்டுவிட்டது. மேளமும், நாதமும் முழங்க வேண்டிய இந்தத் திருவிழா மாதங்களில், திரும்பும் திசையெல்லாம் மனசைப் பதறவைக்கும் ஆம்புலன்ஸ் சத்தம் காதைக் கிழிக்கிறது. தமிழ் மண்ணின் அடையாளம் என, நாம் பல இடங்களில் பெருமை அடித்துக்கொள்ளும் பாரம்பர்யக் கலைகளை நம்பியுள்ள கலைஞர்கள் பலர் சாப்பாட்டுக்கே சிரமப்படுகின்றனர். அம்மாதிரியான கலைஞர்கள் சிலரிடம் கொரோனா ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து பேசினோம்.

``ஐந்து தலைமுறையா நையாண்டி மேளம்தான் எங்களோட குடும்பத்தொழில். ஒரு காலத்தில் மக்கள், கலைஞர்களைத் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு கைத்தட்டுவாங்க. ஆனா, கடந்த பத்து வருஷமா வருமானம் குறைஞ்சு போச்சு. கலை ஆர்வலர்களும் குறைஞ்சுட்டாங்க. ஆனாலும் நாங்க கலைஞர்கள்னு சொல்லிக்கிற பெருமை போதும்னு கஷ்டத்தை வெளிய காட்டிக்காமதான் வாழ்ந்துட்டு இருந்தோம்" என்று நையாண்டி மேளக் கலைஞர்களின் ஒட்டு மொத்த குரலாகப் பேசத் தொடங்கினார் நாதஸ்வரக் கலைஞர் ரவிச்சந்திரன்.

நாதஸ்வரக் கலைஞர்
நாதஸ்வரக் கலைஞர்

``நையாண்டி மேளத்தின் பிறப்பிடம் தஞ்சாவூராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, அதைச் சுற்றியுள்ள 150 நையாண்டிக் கலைஞர்களின் குடும்பங்கள் இருக்கு. முன்பெல்லாம் திருவிழா இல்லாத மாதங்களில்கூட, நல்லது கெட்டதுனு எதாவது நிகழ்ச்சிகள் இருக்கும். கிடைக்குற ஆர்டர்களை நாங்களே பிரிச்சு எடுத்துப்போம். ஆனா, இப்போ மக்கள் நையாண்டி மேளத்தைவிட கேரள கலையான செண்டை மேளத்தைத்தான் விரும்புறாங்க. அதனால் சாதாரண சூழலிலேயே எங்களோட வருமானம் குறைஞ்சு போச்சு. நம்ம தமிழர்கள், கேரளக் கலையையும், கலைஞர்களையும் கொண்டாடுறாங்க. ஆனா, கேரளால இருக்கவங்களுக்கு நம்ம கலைகளோட பேராவது தெரியுமா... அவங்க வீட்டு விஷேசங்களில் தமிழகக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்களா... சொல்லுங்க? வந்தாரை வாழ வைக்கும் தமிழகங்கிறதை ஏத்துக்கிறோம். ஆனா, இங்க இருக்க கலைஞர்கள் வாழ்வாதாரம் இல்லாம இருக்கோமே! சிலர் திருமணத்துக்குனு புக் பண்ண வருவாங்க. அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா முகூர்த்த நேரத்துக்கு மட்டும் வந்து சாஸ்திரத்திரத்துக்கு வந்து பத்து நிமிஷம் நாதஸ்வரம் வாசிச்சுட்டு போங்க. 500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் வாசிக்கக் கூப்பிடுவாங்க. அந்த நேரம் மனசு வலிக்கும். ஆனா அந்தக் காசு இருந்தா ஒரு வார பொழைப்ப ஓட்டிறலாம்னு போயிட்டு வந்துட்டு இருக்கோம். மத்த மாசங்கள் எப்படியிருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் மாசியிலிருந்து, வைகாசி வரை நிறைய ஊர்களில் திருவிழானு எங்களை புக் பண்ணுவாங்க. ஆனா, இந்த முறை ஊரடங்கு அறிவிச்சதால், எங்கேயும் திருவிழாக்கள் நடக்கல. ஏற்கெனவே புக் பண்ணவங்க கூட ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க. குழந்தைகளை வெச்சுக்கிட்டு பால் வாங்கவும், சாப்பாட்டுக்கும் அல்லாடிகிட்டு இருக்கோம். அரசு கொடுத்த உதவிப் பணமும் பொருளும் எத்தனை நாளுக்கு வரும். கலைஞர்களை மண்ணின் மைந்தர்கள்னு சொல்லுவாங்க. ஆனா இந்த மண்ணுல வாழுற தகுதியை மக்கள் எங்களுக்குக் கொடுக்கலம்மா" என்று கண்ணீருடன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலைஞர்களுக்குக் கை நீட்டி யாசகம் கேட்குற பழக்கம் கிடையாது. அது கத்துக்கிட்ட கலைக்கு அசிங்கம்னு நினைக்கிறவங்க நாங்க.
கரகாட்ட கலைஞர் கந்தசாமி

கரகாட்ட கலைஞர் கந்தசாமி பேசுகையில், ``அட, மத்த நாளெல்லாம் சந்தோஷமா வாழ்ந்த மாதிரி இப்ப, சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்கனு எல்லாரும் கேட்குறாங்க. என்னைக்கும் எங்க ஜனங்களுக்கு அரை வயிறு சாப்பாடுதான். இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு! ஆடுற எங்களுக்கு காலு ஒருநாளும் வலிச்சது இல்ல. ஆனா மனசு வலிக்குதும்மா. எங்கள் மாதிரி கரகாட்ட கலைஞர்களைக் கலைஞர்களாக இல்ல, மனுஷங்களாக்கூட இங்க யாரும் மதிக்கிறது இல்ல. என்னத்தம்மா சொல்ல? ஆசைப்பட்டு கத்துக்கிட்ட கலை இது. நாங்க ஆண்டவனா பாக்குற அந்தக் கலையை, எங்ககூட இருக்கும் ஜனங்களே அவமானமா பாக்கும்போது மனசு ரணமா வலிக்குது. வயித்த நிரப்பத்தான் ஆடுறோம். ஆனா மத்தவங்ககிட்ட இருந்து எங்ககூட ஆடுற பொண்ணுங்களோட மானத்தை காக்கவே எங்களால முடியல. கூட ஆடுறது எங்க தங்கச்சியா இருக்கும். ஆனா, ஆட்டம் பார்க்க வர்றவங்க பத்து ரூபாயைக் கொடுத்துட்டு... சொல்லவே சங்கடமா இருக்குமா" என ஓரிரு நிமிடம் மெளனமாகி, பேச்சைத் தொடர்ந்தார். "எதிர்த்துக் கேள்வி கேட்டா கூலியைத் தரமாட்டாங்க. துணி மாத்த இடம் கொடுக்க மாட்டாங்க. பாத்ரூம்ல போயி மாத்துங்கனு சொல்லுவாங்க. ஒரு ராத்திரி முழுக்க ஆடியிருப்போம் பத்துப் பேருக்கு சேர்த்து 10,000 ரூபாய் கொடுப்பாங்க. ஆனா, இதைத்தவிர வேற பொழப்பும் தெரியாததால் இதுதான் வாழ்க்கைனு வாழ்ந்துட்டு இருக்கோம்.

எங்க புள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்குதுனா அது ஜனவரில இருந்து மே மாசம் வரைக்கும்தான். ஏன்னா, அந்த நேரம்தான் எல்லா ஊருலேயும் திருவிழா நடக்கும். இந்த அஞ்சு மாசத்துல எப்படியும் 50,000 ரூவா வரை சம்பாதிச்சுருவோம். அடுத்த ஏழு மாசம் இதை வெச்சுதான் எங்க பொழப்பு ஓடும். ஆனா இந்தக் கொரோனா வியாதி வந்து, எங்க வயித்துல அடிச்சுருச்சு. எந்த ஊர்லேயும் திருவிழா கிடையாது. அட்வான்ஸ் கொடுத்தவங்க காசைத் திருப்பிக் கேட்டுட்டு இருக்காங்க. ஆனா அதை வெச்சுதான் போன மாச பொழப்பு ஓடுச்சு. கையில ஒரு பைசா காசு இல்ல. அரசாங்கம் கலைஞர்களுக்கு அறிவிச்ச காசை வாங்க நிறைய கலைஞர்கள்கிட்ட கலைஞர்களுக்கான பதிவுகார்டும் இல்ல. அரசாங்கத்தில் மனு கொடுத்து உதவிகேட்டா, அதான் ஏற்கெனவே அரிசி கொடுத்தோம்லனு சொல்றாங்க. 20 கிலோ அரிசி எத்தினி நாளைக்குமா தாங்கும். நாங்க என்ன எங்களுக்கு சொத்து பத்து கொடுங்கன்னா கேட்கிறாம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு உதவுங்கனுதானே சொல்றோம். கலைஞர்களுக்குக் கை நீட்டி யாசகம் கேட்குற பழக்கம் கிடையாது. அது கத்துக்கிட்ட கலைக்கு அசிங்கம்னு நினைக்கிறவங்க நாங்க. அப்படி ஒரு நிலை கலைஞர்களுக்கு வந்தால், அதுக்கு இந்த மண்ணும், மக்களும்தான் அசிங்கப்படணும்" எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படையாக ஆவேசமாகப் பேசுகிறார் கந்தசாமி.

பறையிசைக் கலைஞர் சிவபஞ்சவன், ``பறையை வாசிக்கும்போது எங்க மனசு முழுக்க சந்தோஷம் பரவிக்கிடந்தாலும், எங்க வாழ்க்கை என்னவோ இன்னும் சோகத்தில்தான் மூழ்கி இருக்கு. பறை இறுதிச் சடங்குகளில் வாசிக்கும் ஒரு கருவினு ஒதுக்கி வெச்சுட்டாங்க. இப்போதான் மக்கள் மனதில் சில மாற்றங்கள் வர ஆரம்பிச்சுருக்கு. எங்களுக்கு இந்த மாசம் வருமானம் வரும், இந்த மாசம் வருமானம் இருக்காதுனு சொல்ல முடியாது. யாராவது இறந்தா, விழிப்புணர்வு ஊர்வலம், அரசாங்க நிகழ்ச்சிகள் நடந்தா எங்கள கூப்பிடுவாங்க. ஆனா, இப்போ ஊரடங்கு அறிவிச்சுருக்கதால் வீட்டை விட்டு எங்கேயும் போக முடியல. குழந்தைகளுக்கு மூணு நேரமும் கஞ்சிய கொடுத்துட்டு நாங்க ரெண்டு நேரம், ஒரு நேரம்னு அரைவயித்து கஞ்சியைக் குடிச்சுட்டு நாள்களைக் கழிச்சுட்டு இருக்கோம்.

ஊரடங்கு... வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பாரம்பரிய கலைஞர்கள்... #LockDown வீடியோ ஒருங்கிணைப்பு - சு.சூர்யா கோமதி

Posted by Vikatan EMagazine on Tuesday, April 28, 2020

பதிவு அட்டை வெச்சுருந்த கலைஞர்களுக்குக் கொடுத்து வந்த சலுகைகள் எல்லாம் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நிறுத்திட்டாங்க. அப்புறம் திரும்பிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இந்தக் குழப்பத்திலேயே நிறைய கலைஞர்கள் பதிவு அட்டை வாங்காம விட்டுட்டோம். இப்போ பதிவு அட்டை வெச்சுருந்தா ரெண்டாயிரம் காசு தர்றோம்னு சொல்றாங்க. கொரோனாவுக்குப் பயந்து வீட்டுலயே இருந்து, பசிக்கு உயிரைப் பணயமாக்கிருவோம்னுதான் பயமா இருக்கு. கலைஞர்களை இந்தச் சமுதாயம் ஆடவெச்சு பார்த்துச்சு, பாட வெச்சு பார்த்துச்சு. இப்போ அழவெச்சும் பார்த்துருச்சு. கலைஞர்களுக்குத் தன்மானமும், திமிரும் இருக்கணும்னு சொல்லுவாங்க. எங்க புள்ளைங்க பசியில அழும் போதும் அதெல்லாம் மறந்து போயிருது. எங்க புள்ள குட்டிகளும் வாழணும் உதவி பண்ணுங்க" என்று கண்ணீர் மல்க உடையும் அவரின் குரல் மனதை கனக்கச் செய்கிறது.

``நாற்பது வருஷமா விரலில் துணி கட்டி ஒயிலாட்டம் ஆடுறேன். அப்போ நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு மரியாதை இருந்துச்சு. ஆனா, இப்போ அதையெல்லாம் எதிர்பார்க்கல. ஆட்டத்துக்குக் கூலி கொடுத்தா போதும். ஒயிலாட்டம் இப்போ பள்ளி ஆண்டுவிழாக்களில் மட்டுமே ஆடப்படும் கலையாக மாறிருச்சு. அரசு நிகழ்ச்சிகளில் முதல் பகுதி, நாட்டுப்புறக் கலைஞர்களுடையதுனு பெருமையா நோட்டீஸ்ல போடுவாங்க. ஆனா அந்த நேரம் யாருமே வந்திருக்க மாட்டாங்க. கலைஞர்களுக்கு வருமானத்தைவிட கைத்தட்டி ரசிக்கிற கூட்டம்தான் மனசை நிறைய வைக்கும். ஆனா, இப்போ அப்படியான கூட்டமும் இல்ல, கலைஞர்களுக்கு வருமானமும் இல்ல. மாசி மாசம் வந்துருச்சுனா பொதுவா எல்லா கலைஞர்களும் ஒவ்வொரு ஊரில் புக் ஆயிருவோம். திருவிழா நடக்கும் இந்த அஞ்சு மாசத்தை நம்பிதான் எங்களோட மத்த மாசங்கள் ஓடும். கடனை வாங்கிச் செலவு பண்ணிருப்போம்.

ஒயிலாட்டம்
ஒயிலாட்டம்

சில நேரம் கடனைத் திரும்பிக் கொடுக்க முடியாது. அப்போ அவங்க கொடுக்குற பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு அடுத்த ஒரு வருஷத்துக்கு காசு வாங்காம அவங்களுக்கு நிகழ்ச்சி பண்ணிக்கொடுப்போம். இப்போ அப்படியான கடன்கள் நிறைய இருக்கு. இந்த மாசம் எல்லாக் கடனையும் அடைச்சிரலாம்னு நினைக்கும் போது ஊரடங்கு அறிவிச்சுட்டாங்க. எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நின்னு போச்சு. நாங்க இன்னும் அடுத்த ஒரு வருஷத்துக்கு என்ன பண்ணப்போறோம்னு தெரியல. இந்த ஊரடங்குச் சூழலில் எல்லாருமே எதாவது ஒரு சிக்கலில்தான் இருக்காங்க. அதனால் அரசாங்கம்தான் உதவணும். கொரோனா வந்து இந்த வருஷத்துக்கான எங்களோட பொழைப்பைக் கெடுத்திருச்சு. இப்போ மக்க இருக்க நிலையில் அடுத்த சில மாசத்துக்கு நல்ல விஷேசங்கள் எதுவும் இருக்காது. நாங்களும் எங்க புள்ள குட்டிகளும் என்ன பண்றதுனு தெரியாம நிக்கிறோம். இது ஊரடங்கு பிரச்னை மட்டுமல்ல, அடுத்த ஒரு வருஷத்துக்கான பிரச்னை. அரசு கொடுத்த 20 கிலோ அரிசியை வெச்சு. அடுத்த ஒரு வருஷத்தைக் கழிக்க முடியுமா? சொல்லுங்க... மத்தவங்களோட மனசை நிறைக்குற கலைஞர்கள் வயிறு நிறைய உதவி பண்ணுங்க" என்று விடைபெறுகிறார்கள்.

கலைஞர்களுக்குக் கைகொடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு