Published:Updated:

2K kids: “கூத்துதான் எங்க சொத்து!” - நாட்டுப்புறக் கலைஞர்களின் அனுபவங்கள்

கூத்து
பிரீமியம் ஸ்டோரி
News
கூத்து

- நா. நரேந்திர குமார்

நாட்டுப்புறக் கலைகள் கிராம மக்களின் இன்பம் துன்பங்களை ஆற்றிக்கொள்ளவும், ஒரு சாராரின் துயரை பிறர் உணரச் செய்யவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் எனப் பல தளங்களிலும் பயன்படுத்தப்படுபவை. இதில் அரசியல் பேசுபவர்களும் உண்டு, ஆன்மிகம் பேசுபவர்களும் உண்டு, புலம்பல்களைப் பேசுபவர்களும் உண்டு, வரலாறு பேசுபவர்களும் உண்டு.

கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துவரும் இந்தக் கலைகளை இன்றும் பல இளம்கலைஞர்கள் தங்கள் வாழ்வாக வரித்துக் கொண்டுள்ளார்கள், மூச்சாக நினைத்து வளர்த்து வருகிறார்கள். அப்படி சிலரிடம் பேசினோம்...

2K kids: “கூத்துதான் எங்க சொத்து!” - நாட்டுப்புறக் கலைஞர்களின் அனுபவங்கள்

சியாமளா, கிராமியப் பாடகி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்

‘`எங்க தாத்தா கிராமியக் கலைஞர். சின்ன வயசுல, எங்க ஊரு ராணிப்பேட்டை பக்கம் கிராமியப் பாடல்களைக் கேட்டேதான் வளர்ந்தேன். இதுதான் நமக்கும் எதிர்காலம்னு முடிவு பண்ணி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரில சேர்ந்து கிராமியக் கலையில பட்டப்படிப்பு (BFA - Bachelor of folk arts) படிச்சு முடிச்சேன். கலைமா மணி மதுரை முத்து ஆசான்கிட்ட கிராமியக் கலைகள் கத்துக்கிட்டு தொடர்ந்து இந்தத் துறையிலேயே இயங்கிட்டு இருக்கேன். முன்னெல்லாம் ஜேஜேனு நிகழ்ச்சிகள் இருக்கும். அப்புறம் ஸ்பீக்கர்ல பாட்டு போடுற டிஜெ (DJ) கலாசாரம் வந்ததுக்கு அப்புறம் எங்க வாய்ப்புகள் சுருங்கிப்போச்சு. ஆனாலும், நாங்களும் ஒருபக்கம் எங்க மேடை நிகழ்ச்சிகளை நடத்திட்டேதான் இருக்கோம்.

2K kids: “கூத்துதான் எங்க சொத்து!” - நாட்டுப்புறக் கலைஞர்களின் அனுபவங்கள்

டெல்லியில நடந்த கலை மாநாடுல இந்தியா முழுக்கயிருந்து வந்திருந்த 10,000-க்கும் மேற்பட்ட கலைஞர்களோட தமிழ்நாடு சார்பா எங்க கல்லூரி மாணவர்கள் கலந்துக்கிட்டோம். அத்தனை கலைகளை, கலைஞர்களை ஒரே இடத்துல பார்த்த அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. எங்களை மாதிரி பெண் கலைஞர் களுக்கு, நிகழ்ச்சிக்குப் போகும் இடங்கள்ல சில ஆண்களோட தவறான பார்வை பெரிய பிரச்னையா இருக்கும். தைரியமா எல்லாத்தையும் சமாளிச்சுதான் இதில் பயணிச்சுட்டு இருக்கோம். நான் மைக் பிடிச்சு பாட ஆரம்பிச்சா பேய் மாதிரி பாடுவேன்னு சக கலைஞர்கள் சொல்வாங்க. சில ஊர்கள்ல நான் சாமிப் பாட்டு பாடும்போது பலர் சாமி வந்து ஆடுவாங்க. நம்ம பாட்டு அவங்களை அந்தளவுக்குத் தூண்டுறதைப் பார்க்கும்போது புல்லரிச்சுப் போயிடும். கைதட்டல் போதைக்கு முழுசா அடிமையானதால, எங்களால வேற வேலைக்குப் போறதைப் பத்தி நினைச்சுக்கூட பார்க்க முடியல. நான் மேடையில பாடிட்டு இருக்கும்போதே என் உயிர் போகணும்ங்கிறதுதான் என் ஆசை.''

2K kids: “கூத்துதான் எங்க சொத்து!” - நாட்டுப்புறக் கலைஞர்களின் அனுபவங்கள்

தீபக், ஒப்பாரி பாடல் கலைஞர், வியாசர்பாடி, சென்னை

‘`வியாசர்பாடி பையன் நான். பதினொன்றாம் வகுப்புப் படிச்சிட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்தே எங்க ஏரியாவுல ஒப்பாரி பாட்டு கேட்டு வளர்ந்து, இப்போ நானும் ஒப்பாரி கலைஞன் ஆகிட்டேன். எங்க சுத்து வட்டாரத்துல சாவு விழுந்தா என்னை வந்து கூட்டிட்டுப் போவாங்க. ஒப்பாரி, சாவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய கலை இல்ல. அரசியல் பேச, உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒப்பாரி பாடலாம். ‘ஹிப்ஹாப்’ கலையும் ஒரு வகையில ஒப்பாரி தான். அவங்களும் தங்களோட வலியைத்தான் பாடுறாங்க, நாங்களும் எங்க வலியைத் தான் பாடுறோம்.

ஒப்பாரி ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே இருக்குற கலைனு சொல்றாங்க. “இழிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே”னு தொல்காப்பியர் சங்ககாலத்துலயே ஒப்பாரி பத்தி சொல்லியிருக்காரு. அந்தக் கலையை நானும் கத்துக்கிட்டது பெருமையா இருக்கு. சில இடங்கள்ல ஒப்பாரிக் கலையை ரசிக்கிற அளவுக்கு அந்தக் கலைஞர்களை மதிக்கமாட்டாங்க. வியாசர்பாடி எங்களை மாதிரி கலைஞர் களை கொண்டாடுற, வளர்க்குற ஏரியா. படங்கள்லயும், மற்றவங்க பேச்சுலயும் எங்க ஏரியா பத்தி இருக்குற தரக்குறைவான பிம்பத்தை முதல்ல துடைக்கணும். அந்த சமூக நீதிக்கும் ஒரு ஒப்பாரி பாடுவேன்.’’

2K kids: “கூத்துதான் எங்க சொத்து!” - நாட்டுப்புறக் கலைஞர்களின் அனுபவங்கள்

யாழினி, பறை இசைக் கலைஞர், சாத்தியம் கிராமம், கடலூர் மாவட்டம்

‘`நான் ஆங்கில இலக்கியம் படிச்சிட்டு இருக்கேன். எங்கப்பா பஞ்சமுத்து ஆசிரியரா இருக்கார். நான் கரகாட்டம், வீதி நாடகம், பறை இசை போன்ற கலைகளைக் கத்துக்கிட்டிருக்கேன். குறிப்பா, பறை இசை மேல எனக்கு ஆர்வம் அதிகம். அது ஆதிகுடிகள் ஆரம்பிச்ச ஒரு கலை வடிவம். ஆரம்பத்துல, இது மிருகங்ககிட்டருந்து அவங்கள காப்பாத்திக்க உருவான ஒரு கருவியா இருந்தது. காலம் மாற மாற, அதுல இருந்து வந்த சத்தத்துக்கு இசை வடிவம் கொடுத்து, மக்கள் சந்தோஷம், துக்க தருணங்கள்ல இசைக்க ஆரம்பிச்சாங்க. காலப் போக்குல அது துக்க இசையா மாறிப்போனது துயரம். மாதவிடாய் நேரத்துல பறை இசைக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நான் அதை நம்புறதில்ல. அதேபோல, பறை தீண்டத்தகாததும் இல்ல. சாவுக்கு மட்டும்தான்னு இல்லாம மற்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் பறை அடிக்கலாம்.

பெண் பறை இசைக் கலைஞர்களோட பிரச்னை, சாவு வீட்டுல ஆம்பளைங்க எல்லாரும் குடிச்சுட்டு எங்களைத் தவறான பார்வையில பார்ப்பாங்க. சகிச்சுட்டு தான் வேலைபார்க்கணும். ஒருவேளை நாங்க எதிர்த்துக் கேட்டா, எங்க சக கலைஞர்களுக்கு அது பாதிப்பைக் கொடுக்கும். அதனால அந்தப் பார்வைகளைக் கண்டுக் காம, அந்தக் கோபத்தையும் சேர்த்து அடிச்சு இசையா அதிர விடுவோம்.’’