Published:Updated:

கலைகளைக் கைவிட்டு கலங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்! - ஊரடங்கு துயரங்கள்!

நாட்டுப்புறக் கலைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுப்புறக் கலைஞர்கள்

கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் நாகஸ்வரமும் மேளவாத்தியமும் நிச்சயம் உண்டு

கலைகளைக் கைவிட்டு கலங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்! - ஊரடங்கு துயரங்கள்!

கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் நாகஸ்வரமும் மேளவாத்தியமும் நிச்சயம் உண்டு

Published:Updated:
நாட்டுப்புறக் கலைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுப்புறக் கலைஞர்கள்

கொரோனாவின் தாக்கம், தமிழ் மண்ணின் பாரம்பர்யக் கலைகளைப் பாதுகாத்துவரும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையையும் விட்டுவைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் ஒரு தவம்போலப் பழகி வளர்த்த கலைகளை விடுத்து, கண்ணீரோடு கிடைத்த வேலைகளுக்கும், கூலிக்கும், சூழலுக்கும் தங்களை மாற்றிக்கொண்டு வாழத் தயாராகிவிட்டார்கள்!

கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், நாகஸ்வரம், மேளவாத்தியம், தெருக்கூத்து என்று தமிழ் மண்ணின் கலைகளை நிகழ்த்தக்கூடிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனாவால் நொடிந்துகிடக்கிறார்கள். திருமணம், காதுகுத்து போன்ற குடும்ப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்கள் ஆகியவைதான் இவர்களின் வாழ்வாதாரம். ஓஹோ என்று சொல்லும்படி இல்லையென்றாலும், கலைகளின் மூலமாக ஓரளவு வருமானம் கிடைத்துவந்தது. இன்று கொரோனாவால், வருமானமே இல்லாமல் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சுப்பிரமணி, தேன்மொழி, ராஜேந்திரன்
சுப்பிரமணி, தேன்மொழி, ராஜேந்திரன்

கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் நாகஸ்வரமும் மேளவாத்தியமும் நிச்சயம் உண்டு. கொரோனா பிரச்னையால் கோயில் விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதால், நாகஸ்வரம் மற்றும் மேளவாத்தியம் இசைக்கும் கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தென்காசியைச் சேர்ந்த நாகஸ்வர கலைஞர் சுப்பிரமணியிடம் பேசினோம். “சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி என நாலு மாசம்தான் எங்களுக்கு சீஸன். திருமணம், கோயில் கொடைவிழா எனப் பல நிகழ்ச்சிகளுக்கு நாகஸ்வரம், பம்பை, தவில் என ஏழெட்டுப் பேர் ஒரு குழுவாகப் போவோம். அப்போது கிடைக்கிற வருமானத்தைவெச்சுத்தான் வருஷம் முழுக்கக் குடும்பத்தை ஓட்டுவோம். கடந்த ரெண்டு வருஷமா எந்த நிகழ்ச்சியும் இல்லை. கையில காசு இல்லாம நாங்க படுற பாடு கொஞ்ச நஞ்சமில்ல. ஆரம்பத்துல, நகை நட்டுகளை வித்து சமாளிச்சோம். இப்போ வட்டிக்குக் கடன் வாங்கிக் காலத்தை ஓட்டுறோம். அரசுகிட்டருந்து எந்த உதவியும் இல்லை. கொரோனா நிவாரணமா நாட்டுபுறக் கலைஞர்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் அறிவிச்சாங்க. அந்தப் பணம்கூட பல கலைஞர்களுக்குக் கிடைக்கலை” என்றார் வேதனையுடன்.

கலைகளைக் கைவிட்டு கலங்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்! - ஊரடங்கு துயரங்கள்!

கலைமாமணி விருதுபெற்ற கரகாட்டக் கலைஞரான தஞ்சாவூர் தேன்மொழி ராஜேந்திரன், “கொரோனாவுக்கு முன்னாடியே கஜா புயல் பாதிப்புல இருந்தோம். சுத்தமா நிகழ்ச்சிகளே இல்லை. அதுக்கப்புறம் கொரோனா வந்துருச்சு. தொடர்ச்சியா வருமானம் இல்லாட்டி கஞ்சிக்கு என்ன பண்றது? வேற வழியே இல்லாம திறமையான பல கலைஞர்கள் சித்தாள் வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க. பிரமாதமான நாகஸ்வரக் கலைஞர் ஒருத்தர், ஓட்டல்ல சப்பாத்தி போட்டுட்டு இருக்காரு. மண்ணின் கலைஞர்களோட நிலைமை ரொம்ப பரிதாபத்துல இருக்கு” என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தேன்மொழியும், அவரின் கணவர் ராஜேந்திரனும் கரகாட்டப் பயிற்சி மையம் ஒன்றை தஞ்சாவூரில் ஆரம்பித்தனர். அதற்காக, ரூ.5 லட்சம் செலவில் கலைக்கூடம் ஒன்றையும் அமைத்தனர். அதில் மாணவர்கள் சேர ஆரம்பித்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பித்துவிட்டது.

இது குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், “கரகம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கணும்னுதான் கலைக்கூடம் ஆரம்பிச்சோம். இப்போ அதை மூட வேண்டியதாப்போச்சு. எங்களுடைய ‘தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்க’த்துல 200 கலைஞர்களுக்கு மேல இருந்தாங்க. அதுல ஐம்பது பேருக்கு மேல கலைத்தொழிலே வேணாம்னு போயிட்டாங்க. கொரோனாவுக்கு முன்னாடி, எங்க வயித்தைக் கழுவிக்கிற அளவுக்குக் கொஞ்சம் வருமானம் வந்துச்சு. இப்போ, கலைகளோட சேர்ந்து நாங்களும் அழிஞ்சுக்கிட்டு வர்றோம்” என்றார் சோகத்துடன்.

மாநில அளவில் நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் நலன்களுக்காகச் செயல்பட்டுவரும் மாற்று ஊடக மையத்தின் இயக்குநரும், சென்னை லயோலா கல்லூரி கலை இலக்கியப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் இரா.காளீஸ்வரனிடம் பேசினோம்.

“கொரோனா வந்த பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாழ வழியில்லாமல் பல கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 27 பேரின் பட்டியலே என்னிடம் இருக்கிறது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாகால நிவாரணமாக 2,000 ரூபாயைத் தமிழக அரசு அறிவித்தது. அதுவே பலருக்குக் கிடைக்கவில்லை. பல லட்சம் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கும் தமிழகத்தில், வெறும் 48,000 பேர்தான் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் வாரியத்தில் உறுப்பினராகச் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.காளீஸ்வரன்
இரா.காளீஸ்வரன்

இயல் இசை நாடக மன்றத்தின் பவள விழாவுக்காக ரூ.1.45 கோடி நிதி அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த நிதியை, கொரோனா காலத்தில் மரணமடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களுக்கும், நலிந்த கலைஞர்களின் குழந்தைகளுடைய உயர் கல்விப் படிப்புச் செலவுக்கும் வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் ‘பூங்காவில் பூங்காற்று’, சென்னையில் ‘கடற்கரை சங்கமம்’, பள்ளிக்கூடங் களில் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற பயிற்சிகள், இந்து அறநிலையத்துறை கோயில் களில் நாகஸ்வரம், மேள இசை ஆகியவற்றை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால், விழுந்துகிடக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மெல்ல எழுந்துவருவார்கள்” என்றார்.

மனித மனதின் துக்கத்தைத் துடைத்து ஆற்றுப்படுத்துவது கலை. அப்படியான கலையை, அதை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்களின் வாழ்வை அரசு உடனடியாக மீட்க வேண்டும்!