Published:Updated:

FOLLOW UP: “இதையெல்லாம் கனவுலகூட நாங்க நெனச்சுப் பார்த்ததில்லை!”

வேலூர்
பிரீமியம் ஸ்டோரி
வேலூர்

- வெளிச்சம் பாய்ச்சிய ஜூ.வி... துயர் துடைத்த வேலூர் ஆட்சியர்

FOLLOW UP: “இதையெல்லாம் கனவுலகூட நாங்க நெனச்சுப் பார்த்ததில்லை!”

- வெளிச்சம் பாய்ச்சிய ஜூ.வி... துயர் துடைத்த வேலூர் ஆட்சியர்

Published:Updated:
வேலூர்
பிரீமியம் ஸ்டோரி
வேலூர்

ஏழு ஆண்டுகளாக, சுடுகாடே கதியெனக் கிடந்த நாடோடி இன மக்களின் வாழ்க்கையில் புது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது ஜூ.வி. பொதுச்சமூகத்துக்குள் அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்துதர நடவடிக்கை எடுத்திருக்கிறது வேலூர் மாவட்ட நிர்வாகம்!

‘‘பொணம் மட்டும்தான் எங்களைத் தொந்தரவு செய்யறதில்லை!’’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி இதழில், கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அடர்ந்த முட்புதர்களுக்கு நடுவில், கிழிந்த தார்ப்பாய் போர்த்திய சிறிய கொட்டகைகளில், ஏழு ஆண்டுகளைக் கடத்திய நாடோடி மக்களின் பெருந்துயர வாழ்க்கையை அதில் பதிவுசெய்திருந்தோம். இதழ் வெளியான ஆகஸ்ட் 11-ம் தேதி காலையிலேயே, மாவட்ட நிர்வாகத் தரப்பிலிருந்து உடனடி ரியாக்‌ஷன்!

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடோடி மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட... வேலூர் தாசில்தார் செந்தில், அணைக்கட்டு தாசில்தார் பழனி, வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி, வேலூர் மண்டலத் துணை தாசில்தார் சங்கீதா, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ், கிராம உதவியாளர் ராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுடுகாட்டுப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

மொத்தம் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர். அவர்களுக்குத் தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு மூட்டை அரிசி, மளிகைப் பொருள்களை அணைக்கட்டு தாசில்தார் பழனி உடனடியாக வழங்கினார். அரசின் சலுகைகளைப் பெறுவதற்கான அடையாளச் சான்றுகள் எதுவுமே அவர்களிடம் இல்லாததால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

FOLLOW UP:  “இதையெல்லாம் கனவுலகூட நாங்க நெனச்சுப் பார்த்ததில்லை!”

நம்மிடம் பேசிய தாசில்தார்கள், ‘‘இதுக்கு முன்னாடி உதவிகள் கேட்டு அவங்க எந்த பெட்டிஷனும் கொடுக்கலை. அதற்கான சூழ்நிலையிலும் அவங்க இல்லைங்கறது புரியுது. சிறுவர்கள்லருந்து பெரியவங்க வரை எல்லாருமே கைநாட்டுதான் வெச்சாங்க. குடிக்க சுகாதாரமான தண்ணீர்கூட கிடைக்காம கஷ்டப்பட்டிருக்காங்க. இதுல பெரிய கொடுமை என்னன்னா... வாழ்நாள்ல ஒரு நாள்கூட அவங்க மூணு வேளை உணவையும் சரியா சாப்பிட்டதில்லைன்னு சொன்னதுதான். அந்த வார்த்தை எங்க மனசை உலுக்கி எடுத்துடுச்சு. ஒரு வாரத்துக்குள்ள ரேஷன் கார்டு, வீட்டுமனைப் பட்டா வழங்கிடுவோம். விரைவில் அவர் களுக்கு வீடு கட்டித் தரப்படும். இடையில் ஒரு நாள் மருத்துவ முகாமும் அமைச்சு, அவங்க உடல்நலம் பரிசோதிக்கப்படும். அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பணிகளை உடனடியாக முடித்து ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். இந்த அப்பாவி மக்களின் துயரத்தை வெளியில் கொண்டுவந்ததுக்கு ஜூனியர் விகடனுக்குத்தான் முதல்ல நன்றி சொல்லணும்’’ என்றார்கள்.

கண்களில் கண்ணீர் பொங்க நன்றியோடு நம்மைப் பார்த்த அந்த மக்கள், ‘‘இதுவரைக்கும் எங்க குரல் வெளியே கேட்டதே இல்லை. முதன்முறையா எங்களை வந்து பார்த்தது நீங்கதான். மத்தவங்க மாதிரி நாங்களும் கல்லு வீட்டுல வாழப்போறோம், மூணு வேளை சாப்பிடப்போறோம்னு நெனைக்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க பசங்களும் படிக்கப் போவாங்கனு அதிகாரிங்க சொல்றாங்க. இதையெல்லாம் கனவுலகூட நாங்க நெனைச்சுப் பார்த்ததில்லை. எங்க வாழ்க்கைய மாத்தின விகடன் பத்திரிகைக்கும், மாவட்ட ஆட்சியர் ஐயாவுக்கும் நன்றி’’ என்றார்கள். அவர்களின் கண்களில் அவ்வளவு நம்பிக்கை!