அலசல்
Published:Updated:

எல்லோருக்கும் நன்றி! - நெகிழும் ரவிச்சந்திரன்

வாணிஸ்ரீயுடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
வாணிஸ்ரீயுடன்...

ஃபாலோ அப்

கோவையைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரனை ஆந்திர போலீஸார் பொய் வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவரை வெளியில் கொண்டுவர அவரின் மனைவி வாணிஸ்ரீ நடத்திவந்த சட்டப்போராட்டம் குறித்தும் 18.3.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘அரிசிக் கடத்தல் வழக்கில் அப்பாவி தமிழர்! ஆந்திர போலீஸ் மீது அதிரடி குற்றச்சாட்டு!’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம். இதையடுத்து, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ரவிச்சந்திரன்.

ஜூ.வி-யில் செய்தி வெளியாவதற்கு முன்பு, இரண்டுமுறை ரவிச்சந்திரனின் ஜாமீன் மனு ரத்துசெய்யப்பட்டிருந்தது. ஜூ.வி-யில் செய்தி வெளியான பிறகு, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மூன்றாவது ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

வாணிஸ்ரீயுடன்...
வாணிஸ்ரீயுடன்...

‘‘ஜூ.வியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட போலீஸாரை பல்வேறு தரப்பிலிருந்து அழைத்துப் பேசியுள்ளனர். முக்கியமாக, நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான ரோஜாவும் அவரின் கணவர் ஆர்.கே.செல்வமணியும் போலீஸிடம் பேசியிருக்கின்றனர். அதன் பிறகே, எனக்கு ஜாமீன் கிடைத்தது’’ - பேராபத்திலிருந்து தப்பி வந்த மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார், ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள ரவிச்சந்திரன்.

‘‘நம்ம மேலதான் தப்பே இல்லையே எதுக்கு பயப்படணும்னு, ஆந்திர போலீஸ்காரங்க கூப்பிட்டதும் கிளம்பிப் போனேன். ஆனா, அங்க போனதும் நான் சொல்றதையே காதுல வாங்காம விடாம அடிச்சாங்க. ‘உனக்கு எல்லாம் தெரியும். உண்மையை ஒப்புக்கோ’னு மிரட்டினாங்க. மிளகாய் பொடி தூவினாங்க. ‘தப்பு பண்ணியிருந்தாதானே சார் சொல்ல முடியும்? எனக்கு எதுவும் தெரியாது’னு சொன்னேன். அவங்க அதையெல்லாம் கேட்கவேயில்லை. `என்கவுன்ட்டர் பண்ணிருவோம்’னு மிரட்டினாங்க. நான் வெளியில வருவேங்கிற நம்பிக்கையே போயிடுச்சு. இப்போ மறுபிறவியெடுத்த மாதிரி இருக்கு. எங்களுக்கு உதவிய எல்லோருக்கும் என் ஆயுசுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்’’ என்றார் ரவிச்சந்திரன். அவரின் மனைவி வாணிஸ்ரீயும் அதையே கண்ணீருடன் வழிமொழிகிறார்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணியிடமிடம் பேசியபோது, ‘‘நடிகர் சத்யராஜ் சார்தான் என்னை அழைத்து, முதலில் இந்த விஷயத்தைச் சொல்லி ‘சரியான நபர்களாக இருந்தால் உதவுங்கள்’ என்றார். வாணிஸ்ரீயும் அவரின் வழக்கறிஞரும் எங்களை நேரில் சந்தித்தனர். அதையடுத்து, ஜூ.வி-யிலிருந்தும் அழைத்துப் பேசினீர்கள். அதன் பிறகே, ரவிச்சந்திரன் ஒப்பந்த அடிப்படையில் லாரி வாங்க உதவிய புரோக்கர்தான் அரிசித் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பது உறுதியானது. இதையடுத்தே, ‘ரவிச்சந்திரனை விடுவிக்கிறோம். விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும்’ என்று போலீஸ் தரப்பில் கேட்டுக்கொண்டனர். நாம் உறுதியளித்ததால் ஜாமீனும் கிடைத்துவிட்டது. எங்களால் ஆன சிறு உதவி இது’’ என்றார்.

ஜூ.வி 18-3-2020 இதழ் செய்தி
ஜூ.வி 18-3-2020 இதழ் செய்தி

‘சிறிய உதவி’ என்று தன்னடக்கத்துடன் ஆர்.கே.செல்வமணி சொன்னாலும், உண்மையில் இது பேருதவி. ‘விசாரணை’ திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்த உண்மை புரியும். ரவிச்சந்திரன் உயிர்பிழைத்து வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம். இதற்காக துணைநின்ற நடிகர் சத்யராஜ், எம்.எல்.ஏ-வான ரோஜா மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோருக்கு நன்றிகள்.

மனிதம் தழைக்கட்டும்!