Published:Updated:

கோவிட் மையங்களாக மாறிய வீடுகள்!

FOLLOW UP
பிரீமியம் ஸ்டோரி
FOLLOW UP

FOLLOW UP: தவிக்கும் கரையோர மக்கள்...

கோவிட் மையங்களாக மாறிய வீடுகள்!

FOLLOW UP: தவிக்கும் கரையோர மக்கள்...

Published:Updated:
FOLLOW UP
பிரீமியம் ஸ்டோரி
FOLLOW UP
`அபேஸ் ஆகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்! ஊழல் கறையான்களின் அட்டகாசம்!’ என்ற தலைப்பில் 30.9.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். சென்னையில் கூவம் கரையோரம் வசித்துவந்த மக்களுக்கு பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை போலி ஆதார் மூலம் முறைகேடாக விற்பனை செய்வது குறித்து அதில் விவரித்திருந்தோம். அதைத் தொடர்ந்து தற்போது இந்த ஊழலுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து சி.பி.எம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வாவிடம் பேசினோம். ``குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கணக்கின்படி, பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 745 வீடுகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் 2,245 வீடுகள், சத்தியவாணி முத்து நகரில் 693 வீடுகள் என 3,683 வீடுகள் ஆக்கிரமிப்பு வீடுகள் எனக் கணக்கிடப்பட்டன. இவற்றில், 2019 டிசம்பர் 12-ம் தேதி 1,112 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குடிசை மாற்று வாரிய ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பெயரைச் சொல்லி போலியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தான் உங்கள் இதழ் அம்பலப்படுத்தியிருந்தது.

கோவிட் மையங்களாக மாறிய வீடுகள்!

இன்னொரு விஷயம்... நேரு ஸ்டேடியம் அருகில், கேவசப்பிள்ளை பூங்கா பகுதியிலிருந்த 864 வீடுகளுக்கு மாற்று வீடுகளைத் தருவதாகச் சொன்னார்கள். அவர்கள் பெரும்பாக்கத்திலுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு நடுவில் தகர ஷீட்களை அமைத்து வசித்துவருகின்றனர். தற்போது 864 வீடுகளையும் கட்டி முடித்துவிட்டனர். ஆனால், இந்த வீடுகளை கோவிட் மையமாக மாற்றிவிட்டனர். சமூக நலக்கூடங்கள், தனியார் இடங்கள் என எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது வீடற்றவர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளையா கோவிட் மையமாக மாற்றுவார்கள்? இது குறித்து, கடந்த வாரம் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரைச் சந்தித்துப் பேசினோம்.

அவர் எங்களிடம், `கோவிட் மையமாக உள்ள 864 வீடுகளை இப்போதைக்கு ஒதுக்க முடியாது. பக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் 1,056 வீடுகளில் ஒதுக்கச் சொல்கிறேன்’ என்றார். ஆனால், இப்போது அங்கும் ஆதாரில் முகவரியை மாற்றி, போலி பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. இது தொடர்பாக, ஏராளமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். இந்த ஊழலுக்கு எதிராக நவம்பர் 4-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டமும் நடத்தினோம். விரைவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்” என்றார்.

இது குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரிடம் பேசினோம். ``பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டது குறித்து ஆய்வு நடந்துவருகிறது. போலியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை ரத்து செய்வதற்கான பணிகளையும் தொடங்குவோம்” என்றார்.

சென்னை நகரத்தின் வளர்ச்சியில் உடல் உழைப்பு தொழிலாளர்களின், நூற்றாண்டுக்கால உழைப்பு இருக்கிறது. அவர்களுக்கான நியாயமான பங்கைக் கபளீகரம் செய்வதை இந்த அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?