கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

உணவு வழங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு வழங்கல்

வீட்ல சும்மா இருக்கோமேன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃபேஸ்புக் பக்கத்துல ‘யாருக்காவது உணவு வேணும்னா சொல்லுங்க’ன்னு ஒரு பதிவு போட்டேன். இவ்வளவு பேருக்குத் தேவை இருக்கும்னு அப்போ யோசிக்கல

வெயில்காலத் தூறலென இந்த இறுக்கமான சூழலிலும் அன்பினால் உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் பலர். லேசான கொரோனா அறிகுறிகள், வீட்டில் தனிமைப்படுத்துதல் என நான்கு சுவர்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, வீட்டில் தயாரித்து ஆரோக்கியமான உணவு வழங்கும் அன்பு உள்ளங்களைப் பற்றிய பதிவு இது.
இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

‘பக்கத்து வீட்டு அக்கா குழம்பு குடுத்தாங்க’, ‘மேல் வீட்டுல ரசம் குடுத்தாங்க’ என நெருக்கமாகப் பழகும் அக்கம்பக்கத்தினர் நகர வாழ்க்கையில் மிகவும் குறைவுதான். ஆனாலும் இங்கு அன்புக்குக் குறைவில்லை. ‘பக்கத்து வீட்டில் இல்லையென்றால் என்ன? உங்களுக்கு உணவு வேண்டுமா, ஒரு போன் செய்யுங்கள், ஆரோக்கிய உணவு மூன்று வேளையும் உங்களைத் தேடி வரும்’ என நூற்றுக்கணக்கானவர்கள் அன்புக் கரம் நீட்டியிருக்கிறார்கள். எங்கோ இருக்கும் முகம் தெரியாத உறவுகளுக்கு பரபரவென உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிலர் வீடுகளுக்கு நேரடி விசிட் அடித்தோம்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

மளிகைக் கடைபோல வீடு முழுக்கக் குவிந்துகிடந்த பொருள்களுக்கு மத்தியிலிருந்து புன்னகையோடு வரவேற்றார் லதா துபே. ‘`மன்னிச்சிடுங்க, சமையல் வேலை பாத்துட்டே உங்ககிட்ட பேசுறேன். இன்னைக்கு நாலு வீட்டுக்கு சாப்பாடு அனுப்பணும்’’ எனப் பேசிக்கொண்டே வேலையில் இறங்கினார். ‘`எங்க அம்மா அந்தக் காலத்துல பயன்படுத்தின பெரிய பெரிய பாத்திரங்களையெல்லாம் பரண்ல இருந்து இறக்கி வெச்சிருக்கேன். அதுலதான் சமாளிக்க முடியுது. அப்படியும் மூன்று, நான்கு முறை குக்கர்ல அரிசி வெச்சாதான் எல்லாருக்கும் சரியாப் போகும்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

லாக்டௌன் நேரம், வேலையிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைச்சது. வீட்ல சும்மா இருக்கோமேன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃபேஸ்புக் பக்கத்துல ‘யாருக்காவது உணவு வேணும்னா சொல்லுங்க’ன்னு ஒரு பதிவு போட்டேன். இவ்வளவு பேருக்குத் தேவை இருக்கும்னு அப்போ யோசிக்கல. ஆனா உதவின்னு கேட்டவங்களுக்குச் செய்யணும் இல்லையா? காலைல 4.30 மணிக்கெல்லாம் சமையல் வேலை ஆரம்பிச்சிடும். மத்தியானம் முடிப்பேன். லஞ்ச், டின்னர் ரெண்டும் கொடுக்குறேன். எங்களுக்கு வீட்டுக்குச் சமைக்கிற மாதிரி அதே பக்குவத்தோடதான் எல்லோருக்கும் பண்ணுறேன். தனியா இருக்கிற ஒரு முதியவர், ‘எனக்கொரு மகளா நீ கிடைச்சிருக்கம்மா’ன்னு சொல்லும்போது எல்லாக் கஷ்டமும் ஓடிப்போய்டுது. ஸ்விக்கி, டன்ஸோ மாதிரி உணவு டெலிவரி நிறுவனங்களை டெலிவரி செய்யப் பயன்படுத்திக்குறேன். முடிஞ்சவங்கள டெலிவரி சார்ஜ் மட்டும் ஏத்துக்கச் சொல்றேன். சீக்கிரம் எல்லாம் குணமாகணும். அதான் வேண்டுதல்’’ என்கிறார். ஒரு நாளில் குறைந்தது 30 பேருக்கு இருவேளை உணவு வழங்குகிறார் லதா. இப்போது அவரைப்போலவே சில தோழிகளும் ஒன்றிணைந்து செய்யவிருப்பதாக நற்செய்தி பகிர்கிறார்.

சுமார் 150 பேரை சென்னை முழுவதும் ஒன்றிணைத்து ‘மீல்ஸ் ஃபார் மெட்ராஸ்’ என்று தன்னார்வக் குழு மூலம் உணவு வழங்கும் தோழிகள் தீப்தி மற்றும் ஹர்ஷினி இருவரையும் சந்தித்தோம். தீப்தி நம்மிடம் பேசினார். ‘`முதலில் ஹர்ஷினிதான் ரெண்டு ஃபேமிலிக்கு சமைக்கப் போறேன்னு ஆரம்பிச்சா. ‘சரி, எங்க ஏரியாவுல நானும் பண்ணுறேன்’னு நான் சொன்னேன். அன்னைக்கு இரவுக்குள்ள இப்படி எங்க தோழிகள் 12 பேர் சேர்ந்தோம். அடுத்த நாளில் இருந்து தேவைப்படுறவங்களுக்கு சமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஏப்ரல் 22 ஆரம்பிச்சது, இன்னைக்கு 150 பேருக்கு மேல இருக்கோம். ஒரு நாள்ல உதவி கேட்டு கால் பண்ணுற பலர் இருந்தாங்க. அத்தனை போனையும் அட்டெண்ட் பண்ணி ஒருங்கிணைக்கவே சிரமமா இருந்தது. நான் உதவி பண்ணுறேன்னு நிதி வந்தாங்க. பிரத்யேகமா ஒரு மொபைல் ஆப் தயார் பண்ணினாங்க. உதவி தேவைப்படுறவங்க எந்த ஏரியா, எந்த வேளை உணவு வேணும், எத்தனை பேருக்குன்னு விவரங்களை ஆப்ல பதிவேற்றணும். அந்த ஏரியாவுல இருக்கிற எங்க வாலன்டியர் போன்ல பேசி உறுதி செஞ்சுகிட்டு சமைச்சு அனுப்பிடுவாங்க. விதவிதமான ஆரோக்கியமான உணவு, வாழையிலைப் பேக்கிங்னு எல்லோருமே முழு மனசோட அவங்க உறவுகளுக்குச் செய்யுற மாதிரிதான் உணவு செஞ்சு கொடுக்குறாங்க’’ என்றார்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

பெசன்ட் நகரைச் சேர்ந்த தீபிகா தன்னோடு 400க்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொண்டு சென்னை முழுக்க தேவைப்படுவோருக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்குகிறார். இப்படி இன்னும் நிறைய பேர். தனிநபர்கள் தாண்டிப் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இந்த சேவையில் இறங்கியிருக்கிறார்கள். அனிருத்தா ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு ‘நளபோஜனம்’ எனும் திட்டத்தின் பெயரில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள்.

சத்ய சாய் சேவா அமைப்பினர், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஒரு திருமணக்கூடத்தில் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சமையல் வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள். உணவை நேர்த்தியாக பேக் செய்து, 11 மணியளவில் டெலிவரி செய்யத் தொடங்குகிறார்கள். மதிய உணவும், இரவு உணவும் ஒரே நேரத்தில் கொடுக்கப்படுகின்றன. தன்னார்வலர்களே கொண்டு சென்று வீடுகளில் கொடுக்கிறார்கள். சென்னையில் மட்டும் மூன்று இடங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. சத்ய சாய் சேவா தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த், ‘`உடல்நலம் குன்றி வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்குச் சுத்தமான ஆரோக்கியமான உணவு தருவது எங்களின் பாக்கியம். இது காலத்தின் தேவை. உணவு சமைப்பவர்கள் மாஸ்க் அணிவது முதல், டெலிவரி செய்யும்போது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது வரை அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்கிறோம். விரைவில் மக்கள் குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உணவோடு சேர்த்து எங்கள் பிரார்த்தனைகளையும் மக்களுக்கு அனுப்புகிறோம்’’ என்கிறார்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

தமிழ்நாடு முழுவதும் இந்த சேவையை சத்ய சாய் சேவா சமிதி செய்கிறது. இதன் கோவை நிர்வாகிகளிடம் பேசியபோது, “கோவை முழுவதும் 18 சமிதி இருக்கின்றன. எங்கள் சமிதியைச் சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் சமைத்துக் கொண்டு வந்து, பகுதிவாரியாக தேவைப்படுவோருக்குக் கொடுத்துவிடுவோம். தினசரி 500, 600 பேருக்கு மதிய உணவு கொடுக்கிறோம். முடிந்த அளவுக்கு புரத சக்தி அதிகம் இருக்கும் உணவுகளை வீடு தேடி வழங்கி வருகிறோம்” என்றனர்.

பணம் இருப்பவர் உதவி செய்வார், இல்லாதவர் பெறுவார் என்ற பொதுப் புரிதலை உடைத்திருக்கிறது இந்தச் சூழல். ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு பெரும் பங்களாவுக்குள் செல்கிறது. இங்கு பணம் பிரதானம் இல்லை, உதவி செய்யும் மனம் மட்டுமே.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

இன்னொரு பக்கம் இயலாதவர்களுக்கு உதவி செய்யவும் பல கரங்கள் நீண்டிருக்கின்றன. புதுச்சேரியில் வள்ளலார் சபையை நடத்திவரும் 85 வயது கணேசன், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக சேவையாற்றிவருகிறார். இவர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்கள், அவர்களின் உறவினர்களுக்குப் பல ஆண்டுகளாக உணவு வழங்கி வருகிறார். ஒருவேளைக்கு சுமார் 1,000 பேருக்கு என மூன்று வேளையும் தரமான உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். கொரோனா முதல் அலையின்போது இந்த சபையின் சேவையைப் பார்த்த புதுச்சேரி அரசு, இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. அப்போது ஒரு வேளைக்கு 3,500 பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இந்த இரண்டாவது அலையிலும் புதுச்சேரி முழுவதும் தேடிச்சென்று உணவை வழங்கி வருகிறார்கள் சபையின் தன்னார்வலர்கள். நாளொன்றுக்கு சுமார் 350 கிலோ அரிசியை சமைத்து உணவு கொடுக்கும் இவர்கள், வாழை இலையில் மட்டுமே உணவைப் பரிமாறுகிறார்கள்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

வேலூர் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் சரவணன் என்ற இளைஞர், கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தின்போது, சுமார் பத்தாயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியிருக்கிறார். இப்போதும் அவர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளின் மருத்துவத் தேவைக்கு இலவச ஆட்டோ சேவையைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து, வாழ்வாதாரம் இழந்து உணவுக்கு வழியில்லாத குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார். ‘`நம்மள சுத்தி இருக்கிறவங்களை நாம பார்த்துக்கலைன்னா, வேற யாரு பார்த்துப்பாங்க? எல்லோரும் என் அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி மாதிரிதான். என்னால என்ன முடியுமோ அதைச் செய்றேன். சீக்கிரமா கொரோனாவுல இருந்து நாம மீண்டு வரணும்’’ என்கிறார் இவர்.

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி கண்ணன், ஏ.சி மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மாரியம்மன் கோயில் பகுதியில் தன் நண்பர்கள் உதவியுடன் தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கிவருகிறார். தன் பணிக்காகத் தொடங்கப்பட்ட செயலியை உணவு கொடுப்பதற்காகவும் பயன்படுத்துகிறார். கொரோனா பாதிப்புக்கு ஆளாகி குவாரன்டீனில் இருப்பவர்கள் போன் செய்தாலோ, அல்லது செயலியில் பதிவிட்டாலோ, மூன்று வேளையும் வீட்டு வாசலுக்கு வந்து உணவு கொடுக்கிறார்கள். ‘`தன்னார்வலர்கள் பலர் இந்த சேவையில் உதவுகிறார்கள்’’ என்கிறார் பாரதி கண்ணன்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

கும்பகோணம் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘அன்புச் சுவர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். கணித மேதை ராமானுஜம் இல்லம் அருகே உள்ள இடத்தில் 100 பேருக்கு உணவு சமைத்து பொட்டலமாகத் தயார் செய்து, கூடவே தண்ணீர் பாட்டிலும் சேர்த்து வைத்து விடுகின்றனர். ‘`கொடுப்பது யாருன்னும் தெரியக் கூடாது. எடுப்பவர்கள் யாருன்னும் தெரியக் கூடாது. கேட்கத் தயங்கி பசியால் பரிதவிப்பவர்களுக்காக இப்படி அன்புச் சுவர் அமைத்து, ஆளில்லா உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம்’’ என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ்.

குளித்தலையைச் சேர்ந்த 25 இளைஞர்கள் இணைந்து ‘விதைகள் அறக்கட்டளை’ சார்பில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்கள். ‘`கடந்த வருடம் ஊரடங்கின்போது, எங்க அமைப்பு சார்பில் 20 நாள்கள் தொடர்ந்து உணவு வழங்கி மக்களின் பசியாற்றினோம். இந்த வருடமும் நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால், மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளைகளுக்கும் சேர்த்து 500 பேருக்கு உணவு சமைத்து வழங்கி வருகிறோம். ஆதரவற்றவர்கள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் என்று பலதரப்பு மக்களுக்கும் வழங்குகிறோம். எங்களால் முடிந்த பணத்தைப் போட்டு, இந்த முயற்சியைத் தொடங்கினோம். இப்ப பலரும் உதவ ஆரம்பிச்சிருக்காங்க. அதனால், திருச்சி மற்றும் கரூர் நகரங்களிலும் 1,000 பேருக்கு உணவு வழங்க முடிவெடுத்துள்ளோம்’’ என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் சந்துரு.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

தேனியில் மொபைல் போன் விற்பனைக் கடை வைத்துள்ளார் மகேஷ்ராஜ். இவர் சாலையோர மக்கள், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு இலவசமாக மூன்று வேளை உணவு வழங்கிவருகிறார். ‘`தேனி, பி.சி.பட்டி, அல்லிநகரம்னு மூன்று இடங்களில் தினமும் 200 பேருக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கிறேன். காலையில இட்லி, தோசை, சப்பாத்தி, மதியம் வெரைட்டி ரைஸ், இரவு இட்லி, தோசை, சப்பாத்தி. எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சமைக்குறதா நினைச்சுதான் என் அம்மாவும் மனைவியும் சமைப்பாங்க. யாசகர்கள், காய்கறி வண்டில வரும் லோடுமேன்கள், காவலர்கள் இப்படி ஆரம்பிச்சு கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டு வீட்ல தனிமையில் இருக்குறவங்க வரைக்கும் உணவு கொடுக்கிறேன். என் சேமிப்புல இருக்குற பணம், நண்பர்கள், உறவினர்கள் உதவிகள்தான் இதை சாத்தியமாக்குது. வீட்டுத் தனிமையில இருக்குறவுங்களுக்கு சாப்பாடு கொடுக்கும் போது சிலர் காசு கொடுக்குறேன்’னு சொல்வாங்க. நான் மறுத்துடுவேன். காசு வாங்கிட்டு சாப்பாடு கொடுக்க நான் ஹோட்டல் நடத்தலையே… என்னால முடிஞ்ச உதவிய செய்றேன். அவ்வளவுதான்” என்கிறார் புன்னகையோடு.

கோவையில் பிசினஸ் செய்யும் நண்பர்கள் இணைந்து நடத்தும் Reach India என்ற அமைப்பினர், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சத்தான அசைவ உணவு, முட்டை கொடுத்துவருகின்றனர். அந்த அமைப்பின் ஆனந்த் ஜோன்ஸ், “எங்கள் நண்பர்களே இணைந்து சமைக்கிறோம். வீட்டு சமையல் போல இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து சமைக்கிறோம். கொடுப்பதைத் தரமாகவும் சுவையாகவும் கொடுத்தால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும் என்பதால் இதைத் தொடர்கிறோம்” என்கிறார்.

ஈரோட்டில் ஜீவிதம் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பை நடத்திவரும் இளம்பெண் மனிஷா, கொளுத்தும் வெயிலில் சேவையாற்றி வரும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் என தினமும் 150 பேருக்கு ஜூஸ் வழங்கிவருகிறார். இதுபோக, சாலையோரங்களில் உணவின்றித் தவிக்கும் 250 பேருக்கு இரவு உணவு, பிஸ்கட் போன்றவற்றை வழங்கிவருகிறார். மனிதர்களுக்கு உதவுவதைப் போல சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் உணவு கொடுக்கிறார்.

தாய்மை அறக்கட்டளையைச் சேர்ந்த மேகாவும் இதேபோல உதவிவருகிறார். முதியவர்கள், ஆதரவற்றோர், நலிவடைந்த மக்கள் என தினமும் 300 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு உணவு வழங்கிவருகிறார்.

இந்தப் பொட்டலங்களுக்குள் அன்பு இருக்கிறது!

தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ‘பசியில்லா தமிழகம்’ அமைப்பினர் கொரோனா முதல் அலை பரவலின்போது சுமார் 1,500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தார்கள். இப்போதும் களத்தில் இருக்கிறார்கள். ‘`எங்கள் குழுவினர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து பணியாற்றுகிறோம். ஒரு குழு இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியையும், இன்னொரு குழு நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியையும் செய்கிறது. மற்றொரு குழு வீடுகளில் இருப்போருக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருள்களைக் கொடுக்கும் பணியைச் செய்கிறது. எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் இதற்காக பம்பரமாகச் சுழல்கிறார்கள்” என்கிறார் அமைப்பின் தலைவரான முகமது அலி ஜின்னா.

நாகர்கோவிலில் செயல்படும் அபயகேந்திரம் அமைப்பு, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கிவருகிறது. ‘`மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, மருத்துவமனை வளாகத்திலேயே சமைக்கிறோம். நோயாளிகளும், உறவினர்களும் பாத்திரங்களில் வேண்டிய மட்டும் உணவு வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாதவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் தட்டில் உணவு வழங்குகிறோம். தினமும் 600 பேரின் பசி தீர்க்கிறோம்’’ என்கிறார் இந்த அமைப்பின் நிர்வாகி பொன்குமார்.

பெருந்தொற்று காலத்தில் சின்னதொரு அன்பின் வெளிப்பாடு அத்தனை மனிதர்களையும் சென்றடைகிறது. அவரவர் சக்திக்கு உட்பட்டுச் செய்யும் சிறிய உதவிகூட, சமூகத்தில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் இந்த தேவதைகள். அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்!