தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஆவணம்-பெரிய நாயகிபுரம் வழியாகப் பாயும் காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய்க் கரையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மரங்கள் வெளி நாட்டுக்குக் கடத்துவதற்காக வெட்டப்பட்டதையும், அதற்கு வனத்துறையினரே உதவியது குறித்தும் 10.6.2020 மற்றும் 14.6.2020 தேதியிட்ட ஜூ.வி இதழ்களில் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் தங்கள்மீதுள்ள தவற்றை மறைக்க வனத்துறையினர் மேலும் பல தவறுகளைச் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஆவணம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், ‘‘வனச்சரகர் இக்பால், வனக்காப்பாளர் கணபதி செல்வம், வனவர் ராமதாஸ் ஆகியோர் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மர வியாபாரிகளான கணேசன், பழனிவேல், கண்ணையா, குமரேசன் ஆகிய நால்வர்தான் மரங்களை வெட்டியது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅவர்களைக் கையும் களவுமாக நாங்கள் பிடித்துக் கொடுத்தோம். ஆனால், அவர்களில் கணேசனை மட்டுமே இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மற்றவர்களைத் தப்பிக்கவைத்துவிட்டு இந்தச் சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத ராஜேந்திரன், சண்முகநாதன் ஆகிய இருவரை வழக்கில் சேர்த்துள்ளனர். மரங்களை வெட்டுவதற்கு 36 தொழிலாளர்களையும், கிரேன், ஜே.சி.பி., லாரி, டிப்பர் லாரிகள் உள்ளிட்ட இயந்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர். `அந்த இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை அதைச் செய்யவில்லை.

வெட்டப்பட்ட மரங்கள் ஒன்பது லாரிகளில் தூத்துக்குடிக்குக் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், `மூன்று லாரிகள்தான்’ என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றியுள்ளனர். அதுமட்டுமல்ல... மரங்களைக் கடத்திச் சென்ற லாரிகளுக்கு முன்பாக வனத்துறையினர்தான் பாதுகாப்புக்குச் சென்றுள்ளனர். வனவர் ராமதாஸ், வனக்காப்பாளர் கணபதி செல்வம் ஆகிய இருவரை சஸ்பெண்ட்டும், இக்பாலை டிரான்ஸ்ஃபரும் செய்துவிட்டு துறைரீதியான நடவடிக்கை எடுத்துவிட்டதாகச் சொல்லி, பிரச்னையை முடிக்கப் பார்க்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மரங்களைக் கடத்த உதவியவர்களுக்கு இந்த நடவடிக்கை போதாது. உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து விட்டு சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்த்திருப்பது பெரும் குற்றம். இந்தக் கடத்தலின் பின்னணியில் வனத்துறையைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பிருக்கிறது. ஆற்றங்கரையில் மட்டுமல்ல, ஆவணம் காட்டுப் பகுதியிலிருந்த பழைமையான தேக்கு மரங்களையும் வெட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் பசுமை தீர்ப்பாயத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறோம். பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்போகிறோம். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் வனத்துறையினரின் குட்டுகள் வெளியில் வரும்’’ என்றார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பட்டுக்கோட்டை வனச்சரகர் குமாரிடம் இது குறித்துப் பேசியபோது, ‘‘விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் தொடர்புடைய அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்த ராவிடம் பேசினோம். ‘‘உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவும், வாகனங் களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இதில் தொடர்புடைய அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.