சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அரியர் அரசியல்... என்ன ஆகும் மாணவர்களின் எதிர்காலம்?

அரியர் அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
News
அரியர் அரசியல்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ரியர் பாஸா, பெயிலா? - தமிழகக் கல்லூரி மாணவர்கள் மனதில் தொக்கிநிற்கும் கேள்வி இதுதான்.

கொரோனாப் பேரிடர் காரணமாக, கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான பருவத் தேர்வுகளிலிருந்து மாணவர்களுக்கு விலக்களித்த தமிழக அரசு, அரியர் வைத்துள்ள மாணவர்கள், தேர்வுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தாலே தேர்ச்சி என்று அறிவித்திருக்கிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, தொழில்நுட்பக் கல்வியை ஒருங்கிணைக்கும் ஏ.ஐ.சி.டி.இ (அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்) அமைப்பின் தலைவர் அனில் டி சஹஸ்ரபுதே ஆகியோர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் அதிக உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றான தமிழகத்தில், ஒவ்வோராண்டும் உருவாகும் 80,000 இன்ஜினீயர்களில் வெறும் 10% பேர்தான் உரிய வேலை வாய்ப்பைப் பெறு கிறார்கள். இந்தச் சூழலில், அரியர் வைத்துள்ள மாணவர்களைத் தேர்வே இல்லாமல் தேர்ச்சிய டையச் செய்வது அவர்களது எதிர்காலத்தை மேலும் பாதிக்கவே செய்யும் என்பது கல்வியாளர்களின் கவலை.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவருடனான உரையாடலில் அழுத்தமான கேள்விகளை முன் வைக்கிறார்.

அரியர் அரசியல்... என்ன ஆகும் மாணவர்களின் எதிர்காலம்?

“சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தன்னாட்சி பெற்ற அமைப்பாகவே பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்துக்குத் தனித்தனியாக சட்டமே உண்டு. அதன்படிதான் பல்கலைக்கழகம் இயங்கும். அதை நிர்வகிக்க சிண்டிகேட், செனட் என இரண்டு அமைப்புகள் உள்ளன. இதில் சிண்டிகேட்தான் உயர்பீடம். கல்வியாளர்கள், உயர்கல்வித்துறை, நிதித்துறை செயலாளர்களெல்லாம் சிண்டிகேட்டில் உறுப்பினர்களாக இருப்பார்கள். பல்கலைக்கழகங்கள் குறித்த எந்த முடிவாக இருந்தாலும் இந்த சிண்டிகேட்டின் ஒப்புதலின்படி துணைவேந்தர்தான் எடுக்கவேண்டும்.

பாடத்திட்டம், தேர்வுகள், கேள்வித் தாள் உருவாக்கம், தேர்ச்சி பற்றியெல்லாம் அரசாணை வெளியிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. நிதி சார்ந்த விஷயங்கள், சட்டம் ஒழுங்கு, இட ஒதுக்கீடு சார்ந்துமட்டுமே அரசு ஆணை பிறப்பிக்கலாம்.

சிண்டிகேட் கூட்டத்தில் உயர்கல்வித்துறைச் செயலாளர், ‘அரியர் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யலாம்’ என்று தன் கருத்தைத் தெரிவிக்கலாம். அதை சிண்டிகேட் ஏற்றுக்கொண்டால், துணைவேந்தர் அறிவிக்கலாம். அப்படிச் செய்யாமல், உயர்கல்வித்துறைச் செயலாளரே, தேர்வு ரத்து என்று அரசாணை வெளியிடுவது வேறெங்கும் நடக்காத அவலம்.

ஒரு மாணவன் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கூடப் பெறாமல் தேர்வில் பெயிலாகிறார் என்றால், அவரால் குறைந்தபட்சமாகக்கூட அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றுதான் பொருள். அவகாசம் எடுத்து நன்றாகப் படித்துத் தேர்வெழுதித் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசம் தரப்படுகிறது. பெயிலாகிவிட்ட ஒரு மாணவனை ‘நீ தேர்வே எழுத வேண்டாம். தேர்ச்சி பெற்றுவிட்டாய்’ என்று சொல்வது வேடிக்கையானது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 4.5 லட்சம் மாணவர்கள் அரியர் வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களையும் கணக்கிட்டால் மொத்தம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் பாஸாகி அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவார்கள். இது மாணவர்களுக்குத்தான் பாதிப்பை உருவாக்கும். ஆய்வகம் செல்லாமல் செயல்முறைத் தேர்வுகள் செய்யாமல் தேர்ச்சிபெறும் ஒரு பொறியியல் மாணவர் நாளை பில்டிங் கட்டுவார், பாலம் கட்டுவார்... நிலை என்னாகும்? ஒரு சட்ட மாணவர் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று கோர்ட்டுக்குப் போய் என்ன வாதாடுவார்?

பாலகுருசாமி, கே.பி.அன்பழகன்
பாலகுருசாமி, கே.பி.அன்பழகன்

தமிழக அரசு, கல்வியில் அரசியலைக் கலக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது. அமைதியாக இருப்பதன்மூலம் துணைவேந்தர்கள் அதற்குத் துணைபோகிறார்கள். பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் கவர்னர், துணைவேந்தர்கள்மீது விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம்...” என்கிறார் பாலகுருசாமி.

“ஓட்டுக்காகவா..?”

“அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்குப் பின்னால் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறதா?”

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டேன்.

“அரியர் மாணவர்கள் பற்றி வெளியிடப்பட்ட அரசாணையில், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிமுறைகளின்படி இந்த முடிவு எடுக்கப்படுவதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். பல்கலைக்கழக மானியக்குழு இந்த விஷயத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சூரப்பா தவிர பிற துணைவேந்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பெரும்பாலான கல்லூரிகளை மருத்துவ முகாம்களாக மாற்றியிருக்கிறோம். மாணவர்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்.”

“எதிர்ப்புகள் அதிகரிக்கும் நிலையில் மீண்டும் அரியர் மாணவர்களுக்குத்க் தேர்வு நடத்தும் திட்டம் இருக்கிறதா?”

“அப்படி எந்தத் திட்டமும் இல்லை. வழக்கில் தீர்ப்பு வரட்டும். பார்க்கலாம்.”

“20 லட்சம் பேரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவு... உயர்கல்வி அமைப்புகளிடம் ஒப்புதல் பெறாமல் அறிவித்தது சரியா?”

“ ‘யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) என்ன விதிமுறைகள் வகுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்று ஏஐசிடிஇ சொன்னது. யுஜிசி விதிமுறைகளின்படிதான் நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். யுஜிசியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஏஐசிடிஇ மட்டும் எதிர்ப்பதன் நோக்கம் தெரியவில்லை,”

“பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது சரியா?”

“பேரிடர் காலத்தில் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழல்... 21 பல்கலைக்கழகங்களிலும் சிண்டிக்கேட்டைக் கூட்டிப் பேச அவகாசமில்லை.”

“தேர்வு இல்லாமல் அரியர் மாணவர்களைத் தேர்ச்சியடைய வைப்பது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதா?”

“இந்த விஷயத்தை எல்லோரும் மேலோட்டமாகப் பார்த்துப் பேசுகிறார்கள். இதற்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறோம். முன்னர் நடந்த தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்து அதன்படிதான் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதில் தேர்ச்சியடைந்தால் உண்டு. இல்லாவிட்டால் பெயில்தான். இதிலும் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்று மாணவர்கள் நினைத்தால் அடுத்த பருவத்தில் தேர்வு எழுதவும் எந்தத் தடையும் இல்லை.”

“அரசு - துணைவேந்தர் ஈகோ யுத்தம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதா?”

“அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, தன்னைத் தனிமைப்படுத்திக் காட்டப் போராடுகிறார். இந்தச்சூழலைப் பயன்படுத்தி விளம்பரம் தேடுவதற்காக சிலர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் நலன் கருதித்தான் இந்த நடவடிக்கை. நான் இதை ஈகோவாகவோ மோதல் போக்காகவோ எடுத்துக்கொள்ளவில்லை.”

“அரியர் மாணவர்கள் எண்ணிக்கை பெரிது. அவர்களின் ஓட்டுக்காகவா இந்த நடவடிக்கை?”

“வாக்குக்காக நாங்கள் எதையும் செய்யமாட்டோம். லேப்டாப், சைக்கிள், ஊக்கத்தொகையெல்லாம் பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கிறோமே, அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்றா? கல்லூரிகளில் இப்போது தேர்வு நடத்தமுடியாது. விதிமுறைகளை முழுமையாகப் பரிசீலித்துதான் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.”

கொரோனா ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. வேலையிழப்பு, பொருளாதாரச் சிக்கல்கள் என ஏற்கெனவே பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை அரசு மேலும் பதற்றத்தில் ஆழ்த்தக்கூடாது. குறிப்பாக, மாணவர்கள் சார்ந்து எடுக்கும் முடிவுகளைத் தொலைநோக்கோடு, நிபுணத்துவம் பெற்றவர்களோடு கலந்தாலோசித்து எடுக்கவேண்டும். எந்தச் சூழலிலும் மாணவர்களின் நம்பிக்கையைக் குலைத்துவிடக்கூடாது.