Published:Updated:

12,000 பேரிடம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் அடித்துக் கொலை? - பணத்தை முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி

ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதந்தோறும் 10,000 ரூபாய் கொடுப்பதுடன், ஓராண்டுக்குப் பின்னர் முழுத் தொகையையும் திருப்பித் தருவதாகச் சொன்னார்கள்.

மோசடி நிறுவனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தபோதிலும் பொதுமக்கள் போலியான நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துவிட்டு ஏமாறும் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவருகிறது.

கோவை: `சச்சின் போட்டோ விளம்பரம்; 10% வட்டி... 8,200 பேர் முதலீடு!’ - அதிர வைத்த மோசடி

அதிக வட்டி தருவதாகக் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை நம்பவைத்த ஜி கேர், கிரீன் டெக், திருச்சி சௌத் இந்தியா பயோ டெக் போன்ற நிறுவனங்களின் பெயரில் அனிஸ் அகமது என்பவரும் அவருக்குத் தொடர்புடைய சிலரும் சேர்ந்து முதலீடு திரட்டியிருக்கின்றனர்.

ஜி கேர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதங்களுக்கு மாதந்தோறும் 10,000 வீதம் வட்டி வழங்கப்படுவதுடன், ஓராண்டுக்குப் பின்னர் முழுத் தொகையையும் திருப்பித் தந்துவிடுவதாக ஆசைவார்த்தை கூறியிருக்கின்றனர். அவர்கள் தெரிவித்த நிறுவனங்களின் கிளைகள் ஹாங்காங், மலேசியா, துபாய், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 12,000 பேரிடம் பணத்தைப் பெற்றிருக்கின்றனர்.

பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மதுரை மக்கள்
பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மதுரை மக்கள்

ஆனால், பணத்தைத் திருப்பித் தராததால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை காவல்துறையில் புகாரளித்தனர். இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் அனிஸ் அகமது உள்ளிட்ட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றனர். மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற அனிஸ் அகமது 18-ம் தேதி காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி புகாரளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதி நிறுவனத்தில் பணத்தைக் கட்டி ஏமாற்றமடைந்த யாரோ சிலர், அனிஸ் அகமதுவை கடத்திச் சென்றிருப்ப்பார்கள் என்கிறார்கள். அவரை தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியில் வைத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தாகவும், பலத்த காயமடைந்த அவரை நேற்று (19-ம் தேதி) தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

உயிரிழந்த அனிஸ் முகமது
உயிரிழந்த அனிஸ் முகமது

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அனிஸ் அகமது சில மணி நேரத்திலேயே மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கிடையே, அனிஸ் அகமது மதுரையிலிருந்து கடத்திவரப்பட்டதைக் கண்டுபிடித்த போலீஸார், அவுரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில், உயிரிழந்த அனிஸ் அகமது சொந்த ஊர் பாளையங்கோட்டை என்பதால் அவரது உடல் ஐகிரவுண்டு பகுதியிலுள்ள எம்.ஓ.சி பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடந்தது.

அனிஸ் அகமது உயிரிழந்துவிட்டதால் அவரிடம் ரூ.500 கோடி அளவுக்கு இழந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் பணம் திரும்பக் கிடைக்கும் வழி தெரியாமல் முதலீடு செய்தவர்கள் தவித்துவருகிறார்கள். இதற்கிடையே, அனிஸ் அகமதுவைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு