Published:Updated:

ட்விட்டருக்கு எதிராக நடவடிக்கை... கானல் நீராகிறதா கருத்து சுதந்திரம்?

கானல் நீராகிறதா கருத்து சுதந்திரம்?
பிரீமியம் ஸ்டோரி
News
கானல் நீராகிறதா கருத்து சுதந்திரம்?

‘‘ட்விட்டரில் ஒரு தவறான கருத்து பதியப்பட்டால், அதற்கு ட்விட்டர் நிர்வாகத்தைக் குற்றம்சாட்ட முடியாது; தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் முடியாது.

‘‘ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை மத்திய அரசு முடக்கப்போகிறது’’ - கடந்த சில நாள்களாக சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அலையடிக்கும் செய்தி இதுதான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு வகுத்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு, மே 25-ம் தேதியுடன் முடிவடைவதால் ஏற்பட்டிருக்கும் பரபரப்பு இது. இதன் பின்னணி என்ன?

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுத்த மத்திய அரசு, ‘மூன்று மாதங்களுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்’ என்று அறிவித்தது. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட 50 லட்சம் பயனாளர்களைக்கொண்ட அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ் வரும். புதிய விதிமுறைகளின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு தலைமை இணக்க அதிகாரியையும், ஒரு தொடர்பு அதிகாரியையும், குறைதீர் அதிகாரியையும் நியமிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் தெரிவிக்க வேண்டும். இந்தப் புதிய விதிகளை அமல்படுத்தாத நிறுவனங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

ஸ்ரீராம் சேஷாத்ரி - ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஸ்ரீராம் சேஷாத்ரி - ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த ஃபேஸ்புக் நிறுவனம், ஒரு சில விஷயங்கள் குறித்து மத்திய அரசுடன் பேசவிருப்பதாகத் தெரிவித்திருந்தது. தவறான கருத்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தது ட்விட்டர் நிர்வாகம். இதற்கிடையே, ‘கொரோனாவை மோடி வைரஸ் என்று விமர்சனம் செய்யுங்கள்’, ‘கும்பமேளாதான் கொரோனா 2-வது அலைக்குக் காரணம் என்று தொடர்ந்து சொல்லுங்கள்’ என்று தமது கட்சியினருக்கு காங்கிரஸ் கட்சி வழிகாட்டியதாகவும், அது தொடர்பாக ‘டூல்கிட்’ ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியதாகவும் பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டினார்கள். இதுதொடர்பாக பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் சாம்பித் பாத்ரா மே 21-ம் தேதி ட்வீட் செய்ய, அவரது ட்வீட்டை ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தனர்.

ஆனால், காங்கிரஸோ, அந்த ‘டூல்கிட்’ போலியானது; மத்திய அரசுக்கு எதிராக எந்தவொரு ஆவணத்தையும் நாங்கள் தயாரிக்கவில்லை என்று மறுத்ததுடன், இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் தெரிவித்தது. பா.ஜ.க-வினர் குறிப்படும் ‘டூல்கிட்’ ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு சந்தேகம் எழவே, சாம்பித் பாத்ராவின் ட்வீட்டை ‘சித்திரிக்கப்பட்டது’ (Manipulated) என்று டேக் செய்தது ட்விட்டர் நிர்வாகம். மேலும், ராஜ்யசபா எம்.பி வினய் சஹஸ்ரபுத்தே, பா.ஜ.க தேசிய சமூக ஊடகப் பொறுப்பாளர் பிரதி காந்தி, ஆந்திர மாநில பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் சுனில் தியோதர், பா.ஜ.க டெல்லி செயலாளர் குல்ஜீத் சிங் சாஹல் உள்ளிட்டோரின் ட்வீட்களையும் ‘சித்திரிக்கப்பட்டவை’ என்று டேக் செய்தது ட்விட்டர் நிர்வாகம். இதையடுத்து, மே 24-ம் தேதி இரவு டெல்லி மற்றும் ஹரியானாவிலுள்ள ‘ட்விட்டர் இந்தியா’ அலுவலகங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து ட்விட்டர் முடக்கப்படலாம் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகள் சரிதான் என்கிறார் வலதுசாரி கருத்தாளர் ஸ்ரீராம் சேஷாத்ரி. அவர் நம்மிடம், ‘‘ட்விட்டரில் ஒரு தவறான கருத்து பதியப்பட்டால், அதற்கு ட்விட்டர் நிர்வாகத்தைக் குற்றம்சாட்ட முடியாது; தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் முடியாது. ஏனென்றால், அவை ட்விட்டர் நிறுவனத்தின் கருத்துகள் அல்ல. ஆனால் இப்போது, ஒருவர் தவறான கருத்தை வெளியிட்டால் அவரது கணக்கை முடக்குவது, அவதூறு கருத்து என்று குறிப்பிடுவது போன்ற நடவடிக்கைகளை ட்விட்டர் நிர்வாகம் எடுக்கிறது. அப்படியென்றால், எடிட்டோரியல் என்ற எல்லைக்குள் ட்விட்டர் வந்துவிடுகிறது. எனவேதான், புதிய விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. இதன் மூலமாக, ட்விட்டரில் ஒருவர் தவறான கருத்துகளைப் பதிவுசெய்தால், அவரோடு ட்விட்டர் நிறுவனத்தையும் சேர்த்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும். இது, முறைப்படுத்துவதற்குத்தானே தவிர கருத்துச் சுதந்திரத்தைக் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல’’ என்றார்.

ட்விட்டருக்கு எதிராக நடவடிக்கை... கானல் நீராகிறதா கருத்து சுதந்திரம்?

பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனோ, ‘‘ட்விட்டர்மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது. ஒரு ட்வீட்டை ‘சித்திரிக்கப்பட்டது’ என்று குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் இருந்தபோது, சித்திரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். அதை ‘சித்திரிக்கப்பட்டது’ என்று ட்விட்டர் டேக் செய்தது. அதைக் கண்டு ட்ரம்ப் ஆத்திரமடைந்தாலும், ட்விட்டர்மீது அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தைச் செய்தியாக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. போராட்டக் களத்துக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல முடியவில்லை. ஆனால், சமூக ஊடகங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வெளி உலகத்துக்குக் கொண்டுசென்றனர். அதையடுத்துதான், சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு கொண்டுவந்தது. ஆகவே இதை பிளாக்மெயில் அரசியலாகத்தான் பார்க்கிறேன்” என்றார் சூடாக!

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 26-ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளது. தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய விதிமுறைகள் இருப்பதாகவும், ‘எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்’ விதிகளை முறியடிக்கும் வகையில் புதிய விதிகள் இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிர்வாகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் இனி கானல்நீர்தானோ?!