Published:Updated:

கொரோனா தடுப்பு மருந்து: `ஜனவரி முதல் ஜூன் வரை; முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை’ - மத்திய அரசு

கோவிட் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசி

கொரோனா தடுப்பு மருந்துக்கு முழு அனுமதி கிடைத்ததும், முதற்கட்டமாக மூன்று கோடி மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதில் சுமார் 70 லட்சம் மருத்துவர்களும், துணை மருத்துவர்களும் அடக்கம்.

கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தத் தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. நாட்டு மக்களிடம் நேற்று பிரதமர் மோடி பேசும்போதும், விரைவில் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், ``கொரோனா தடுப்பு மருந்துக்கு முழு அனுமதி கிடைத்ததும், முதற்கட்டமாக மூன்று கோடி மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதில் சுமார் 70 லட்சம் மருத்துவர்களும், துணை மருத்துவர்களும் அடக்கம். மேலும் இதில் இரண்டு கோடி முன்களச் சுகாதார ஊழியர்களும் அடங்குவார்கள்” என்றார்.

`சிறு தவறும் நமது இயக்கத்தை நிறுத்திவிடும்..!’ - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

தொடர்ந்து பேசியவர், ``மூன்று கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. தடுப்பு மருந்தை நிர்வகிப்பது குறித்து தேசிய நிபுணர்குழுவுடன் ஆலோசித்து, ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறோம். அடுத்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளின் அளவைக் கொண்டு, யாருக்கு முதலில் வழங்கலாம் என்ற முன்னுரிமைப் பட்டியலை தயாரிக்கிறோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தற்போது சோதனையிலிருக்கும் மருந்துகள் திட்டமிட்டப்படி வெற்றிபெற்றால், முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் கிடைத்துவிடும்’’ என்றார். மேலும் அவர் ``கொரோனா தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள் குறைக்க முடியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு