Published:Updated:

தஞ்சாவூர் : ஒரே ஒரு டீ கடை; தடைப்படும் திருமணம் - விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட இளைஞர்கள்!

வைரலாகும் பிளக்ஸ்
வைரலாகும் பிளக்ஸ் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் திருமணம் தடைபடுவதற்காக காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி கூறி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு வைரலாகியிருக்கிறது.

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கரம்பயம். விவசாயத்தையே தொழிலாக கொண்ட ஊர். இங்குள்ள கரம்பயத்து மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

கரம்பயம் கிராமம்
கரம்பயம் கிராமம்

ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த திருமண வரன் தேடும் இளைஞர்கள் பதிவிட்டதாக கூறி, பிளக்ஸ் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில்,`` வணக்கம்,கரம்பயம் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. கரம்பயத்தில், வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும்,தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.

திருமணம் குறித்த பிளக்ஸ்
திருமணம் குறித்த பிளக்ஸ்

இப்பணியை செய்வோர் சில பெண்கள் ,சில ஆண்கள் மற்றும் ஒரே ஒரு டீக்கடை வைத்திருப்போர். தங்ளது நற்பணி மேலும் தொடர்ந்தால் இனி வரும் விளம்பரத்தில் தங்களது பெயர், புகைப்படம் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரம்பயத்து இளைஞர்களுக்கு திருமண வரன் பார்க்க வரும் பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தை பற்றி அவதூறாக கூறி அந்த வரனை சிலர் தடுத்து விடுகின்றனர். இதனால் பல இளைஞர்களின் திருமணம் தடைப்பட்டுள்ளது அந்த வலியின் காரணமாக இது போன்ற ஃபிளக்ஸை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கரம்பயம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் பேசினோம். `` ஜாதகப் பொருத்தம் உள்ளிட்ட அனைத்தும் கை கூடி வரும் வேளையில், மாப்பிள்ளை வீட்டார் குறித்து மணப்பெண் வீட்டார் தரப்பில் ஊரில் வந்து விசாரிப்பது வழக்கம். அப்படி வந்து விசாரிக்கும் போது சிலர் பொய்யான காரணத்தைச் சொல்லி அந்த திருமண வரனை தடுத்து விடுகின்றனர்.

கோயில்
கோயில்

அதனால் சில இளைஞர்களின் திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்தது. இதனால் அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இது போன்ற சம்பவங்கள் சுமார் ஆறு மாதங்களாக தொடர்கிறது. இதனால் ஏற்பட்ட வலியினால் வரன் தடைப்பட்டு போன இளைஞர்கள் சிலர் சேர்ந்து, திருமண வரன் தேடும் இளைஞர்கள் என்ற பெயரில் ஒரு அறிவிப்பை அச்சிட்டு சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். அந்த பதிவு இப்போது பரவி வைரலாகி வருகிறது. பலரும் இதனை காமெடியாக நினைத்து பரப்பி வருகின்றனர். ஆனால் இது எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது." என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு