அலசல்
அரசியல்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

பூரிக்கட்டை அடி வாங்குவதையும் தவிர்க்கலாம்.

திடீர் திடீரென விலையேறி பகீர் கிளப்பும் வெங்காயம், இந்த முறையும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரிடம் இதுபற்றிக் கேட்டால், `எங்க வீட்ல வெங்காயம் யூஸ்பண்றதில்லை’ என்று சொல்லி, வெங்காயத்தைவிட அதிகமாய் கண்ணீர் விடவைக்கிறார். `நல்லவேளை உப்பு விலை ஏறலை. இல்லைன்னா அதையும் அந்தம்மாகிட்ட கேட்கப்போய், நாங்க உப்பெல்லாம் சாப்பிடுறதில்லைனு பதில் சொல்லியிருப்பாங்க’ என, தனக்குத்தானே துன்பம் வருங்கால் நகைத்துக்கொண்டிருக்கிறான் தமிழன். வேறு எப்படியெல்லாம் நகைக்கலாம்...

  • செய்திகளில் தங்கம், வெள்ளி விலை நிலவரங்கள் வாசிக்கும்போது, வெங்காய விலை நிலவரத்தையும் சேர்த்து வாசிக்கத் தொடங்கிவிட்டன செய்தி சேனல்கள். இதை அப்படியே பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களில் வெண்கலத்துக்குப் பதிலாக வெங்காயத்தைச் சேர்க்கச் சொல்லி கோயம்பேடு மார்க்கெட்டில் குட்டியாய் ஒரு போராட்டம் நடத்தலாம்.

  • வீட்டுக்கு லேட்டாகப் போகும் கணவர்மார்கள், குடித்துவிட்டு கொய்யா இலையை மென்னுத்துப்பிவிட்டு போகும் மதுபிரியர்கள், கையோடு இரண்டு கிலோ வெங்காயம் வாங்கிக்கொண்டு செல்லலாம். வீட்டுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதுடன், பூரிக்கட்டை அடி வாங்குவதையும் தவிர்க்கலாம்.

  • ‘ஏன் வெங்காயம் வாங்கிட்டு வரலை?’ என்று கேட்கும் மனைவிமார்களிடம் வெங்காயத்தை உரித்து `உன் கண்ணீல் நீர் வழிந்தால்... என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!’ என்று பாடல் பாடி சமாளிக்கலாம்.

  • முன்பெல்லாம் கல்யாணம் ஆரம்பித்து காதுகுத்து வரை எல்லா விழாக்களிலும் கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தை கடிகாரக்கடை போட்டுப் பிழைத்துக்கொள்ள வழியமைத்துக்கொடுப்பான் தமிழன். இன்றைய தேதிக்கு வெங்காயம் வாங்கித் தரலாம். நமக்கும் விலைமதிப்பற்ற பரிசு கொடுத்த திருப்தியில் புன்முறுவல் ஏற்படும்.

ஐடியா அய்யனாரு!
ஐடியா அய்யனாரு!
  • பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதுபோல், எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என்றெல்லாம் பேசுகிறார்கள் அரசியல்வாதிகள். இந்த நேரத்தில், `எகிப்து வெங்காயம் என்பது பிரமிடுகளுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது. இது இலுமினாட்டிகளின் வெங்காயம். விழித்துக்கொள் தமிழா!’ என மீம்ஸ் போட்டு ஜாலியாக இருக்கலாம்.

  • வெங்காயம் பிரச்னை தீர செல்லூர் ராஜு என்ன ஐடியா கொடுப்பார், திண்டுக்கல் சீனிவாசன் வெங்காயத்துக்கு புதிதாக என்ன பெயர் சூட்டுவார் எனச் சிந்தித்துப்பார்த்துச் சிரித்து உருளலாம். உருளலாம்னு சொன்னதுக்காக உருளைக்கிழங்கு விலையையும் ஏத்திறாதீங்க!