Published:Updated:

தூணிலும் இருப்பான்டீ... தும்மலிலும் இருப்பான்டீ...!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

கொரோனா பரிதாபங்கள்

தூணிலும் இருப்பான்டீ... தும்மலிலும் இருப்பான்டீ...!

கொரோனா பரிதாபங்கள்

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா
நம்மிடமும் நமது வாழ்விலும் பல நாள்களாக இறுக்கமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருப்பதோடு, பல்வேறு வகையான உளவியல் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது `கோவிட்-19’ என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ். இதன் மூலமாக ஏற்படும் சீரியஸ் நோயை, கொஞ்சம் ஜாலியுடன் அறிவியல்பூர்வமாக அணுகலாம் வாருங்கள்..!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே...

ஒரு காலத்தில் நடிகர் சத்யராஜின் பிரபலமான இந்த வசனம், இன்றைக்கு வெகுவாகப் பொருந்தி நிற்பது இந்தக் கொரோனாவிடம்தான்.

தூணிலும் இருப்பான்டீ... தும்மலிலும் இருப்பான்டீ...!

“நாம ஒரு ப்ளான் பண்ணா, அவன் இன்னொரு பெரிய ப்ளானோட வர்றா னேப்பா...” என மக்கள் மட்டுமன்றி, மருத்துவ, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான உலகம் தினமும் திணறிக்கொண்டிருக்க, ஐந்தாறு மாதங்களாக கொரோனாவை நாம் டீல் செய்துகொண்டிருக்கும் ஸ்டைலே அலாதிதான். நிகழ்ச்சிகள், அறிவியல் செய்திகள், நம் நம்பிக்கைகள், மீம்ஸ்கள், வாட்ஸ்அப் வதந்திகள் அப்பப்பா!

மீன் சாப்ட்டா கண்ணுக்கு நல்லது...

சாப்பிடாட்டி... மீனுக்கு நல்லது...

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த நாள்களில், ‘அசைவ உணவுகள் மூலமாக நோய் பரவுகிறது. சைவ உணவுகள் தாம் உங்களைப் பாதுகாக்கும்..’ என்ற செய்திகள்தாம் நோயைக்காட்டிலும் வேகமாகப் பரவின.

பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மனிதன் அடைந்த மாற்றத்தைப் போலவே, கொரோனா வைரஸ்களும் தங்களது தாய்வீடான வௌவால்களிடமிருந்து (இதுவும்கூட இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை), பரிணாம வளர்ச்சி பெற்று புகுந்தவீட்டில் நுழைந்திருக்கும் வடிவம்தான் கோவிட்-19.

ஆரம்பப்புள்ளி மட்டுமே வௌவால் களின் பச்சை இறைச்சி. பரவுதல் அனைத்தும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு என்கிற விஷயம் உறுதியான பிறகு, சைவத்தைப் போலவே முழுமையாகச் சமைக்கப்பட்ட மீனும், இறைச்சியும் நன்மையையே விளைவிக்கும் என்று புரிந்தது.

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...

‘சுகாதார மேம்பாட்டில் அமெரிக்கா நம்பர் ஒன். எங்கள் முன் இந்த நோயெல்லாம் எம்மாத்திரம்..?’ என்று கேட்ட அமெரிக்காவை, ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா..!’ என்று அடித்து, இப்போதுவரை `பாதிப்பில் நம்பர் ஒன்’ என்ற இடத்திலேயே அமெரிக்காவை வைத்திருக்கிறது கொரோனா. ஆரம்ப கட்டத்தில் ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை மட்டுமே பெருமளவு இது பாதிக்க, உலகெங்கும் மனிதர்களின் கருமை நிறம் பேசு பொருளானது. உண்மையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலாத நெரிசல் நிறைந்த அவர்களின் குடியிருப்புகளும், பணியிடங்களும், அவர்களுக்கு கிடைத்த மருத்துவ வசதிக் குறைபாடுகளும்தான் காரணம் என்பது விளங்க, `கொரோனா நிற ஈர்ப்புவிதி’ கைகழுவப்பட்டது.

அந்த வேதனை இருக்கே வேதனை...

வெந்நீர் தெரபி... கொரோனாவை நமது தொண்டையிலே வைத்து அதன் தொண்டையை நெறிக்கும் கொலைத்திட்டம்.

‘15 நிமிடங்களுக்கு ஒருமுறை நல்ல வெந்நீர் குடித்தால், தொண்டையில் இருக்கும் கோவிட்-19 வைரஸ்கள் வயிற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, வயிற்றின் அமிலத்தன்மையால் அழிக்கப்படும்’ என்ற புதிய புரளிக்குப் பின், அமிலத்தன்மையை அதிகரிக்க வெந்நீருடன் கொஞ்சம் வினிகரும் சேர்த்துப் பருக, ‘வாட்ஸ்அப்’ யுனிவர்சிட்டி பரிந்துரைத்தது. காய்ச்சலின்போது நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெந்நீர் குடிப்பது நல்லதுதான். அதற்காக வெந்நீரை விடாமல் விழுங்குவது, கொரோனாவைக் கொன்றொழிக்காது. அதிலும், வினிகர் சேர்ப்பது வேதனையிலும் வேதனை என்று மக்களுக்குப் புரிவதற்குள், ஒரு மாதம் கடந்திருந்தது.

தூணிலும் இருப்பான்டீ... தும்மலிலும் இருப்பான்டீ...!

அது போன மாசம்... நான் சொன்னது இந்த மாசம்...

நோய்த்தொற்று வயதானவர்களுக்கு மட்டுமே வரும், அதிலும் நீரிழிவு, ரத்த அழுத்தம், பருமன், இதய நோய், நாட்பட்ட நுரையீரல் நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்கள் இதன் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன என்ற அறிவியல் உண்மையுடன், கூடவே அது குழந்தைகளையும், இளைஞர்களையும் பாதிப்ப தில்லை என்ற செய்தி சடுதியில் பொய்யானது. கொரோனாவை எதிர்கொள்ள உடலின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளதே தவிர, வயதோ, இளமையோ அதற்கு ஒரு பொருட்டேயில்லை என்பது இளைஞர்களையும், குழந்தைகளையும் இந்நோய் பாதித்தபோது புலனானது.

கடுப்பேத்தறார் மை லார்ட்...

மாஸ்க் அணிவதால் பயன் எதுவும் இல்லை. தொடர்ந்து மாஸ்க் அணிவதால், கார்பன் டை ஆக்ஸைடு சுவாசிப்பது அதிகமாகி, ஆக்ஸிஜன் குறைவதால் மூச்சுத் திணறல், தலைவலி, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகக்கூட முடியும் என்று பரவிய அந்தச் செய்தியிலிருக்கும் ஒரே உண்மை, உடற்பயிற்சியின் போதும், அறையில் தனியாக இருக்கும்போதும் மாஸ்க் அணிவதைத் தவிர்த்தால் போதுமானது என்பதைத் தெரிந்துகொண்டதே.

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

கொரோனா உண்மையில் ஒரு வைரஸே அல்ல... அது ஒரு பாக்டீரியா. அதனால்தான், கொரோனா சிகிச்சையில் ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்று, சர்ச் இன்ஜின்களை உபயோகித்து சகலத்தையும் அறிந்துகொள்வதுடன், டாக்டருக்கே டஃப் கொடுக்கும் இந்த கூகுள் குறுக்குச்சந்து ‘குபீர் டாக்டர்’களால் உருவாக்கப்பட்ட இந்த ஷாக்கிங் நியூஸ் கொஞ்ச காலம் வலம் வந்தது. ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்துவது கொரோனாவுக் காக அல்ல. நோயாளிகளுக்கு செகண்டரி இன்ஃபெக்‌ஷன் என்ற அதிகப்படியான நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவே என்பதை இவர்களுக்குப் புரியவைப்பது, கொரோனாவைக் குணப்படுத்துவதைவிட கொடுமையாக இருந்தது என்பது வேறு விஷயம்.

ப்படி பல்வேறு ஸ்டாண்டப் காமெடிகளுக்கு நடுவே... ஆராய்ச்சியாளர்கள் தம் கடமையே கண்ணாக இருந்தனர். லேட்டஸ்ட்டாக, நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உள்ளவர்களை அதிகம் பாதிக்காது கொரோனா என்ற கருத்தில் சிறு வேறுபாடாக, ஒருவரின் அதீத நோய் எதிர்ப்பு ஆற்றல், அவர்களுக்கு சைட்டோக்கைன் ஸ்டார்ம் (Cytokine Storm) எனப்படும் நிலையை ஏற்படுத்தி மரணம்வரை கொண்டு செல்லக்கூடும் என்பது அறிய வந்ததும், அதற்கான சிகிச்சை முறையாக Tocilizumab மற்றும் ஸ்டீராய்டுகளை பயன்பாட்டில் கொண்டு வந்து, உயிரிழப்புகளைப் பெருமளவு குறைத்து வருகிறோம்.

இதே நேரத்தில், `கோவிட்-19 காற்றில் பரவவும் வாய்ப்பிருக்கிறது’ என்ற தகவலையும், `Herd Immunity என்ற கூட்டு நோய் எதிர்ப்பு’ இதில் பயனளிக்காது என்பதையும் கவலையுடன் கவனித்து வருகிறது அதே ஆராய்ச்சி உலகம்.

யோசித்துப் பார்த்தோமே யானால், ‘தூணிலும் இருப்பான்டீ... தும்மலிலும் இருப்பான்டீ...’ என உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த கொரோனாவின் கேரக்டரைப் புரிந்துகொள்வது நம் அனைவருக்கும் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.

தான் உயிர்வாழ வேண்டி, தன்னைத் தானே மாற்றிக்கொண்டு சூழலுக்குத் தகுந்த மாதிரி வாழும் இந்த வைரஸை, அதைவிட பன்மடங்கு பெரிதான மனிதன், தானும் சிறிது மாற்றிக்கொண்டு வெல்ல முடியாதா என்ன... என்ற கேள்விக்கான பதிலும் நம்மிடம்தாம் உள்ளது.

`நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே...’ என்று சொல்லியபடி கொரோனா நம்மை விட்டு ஓடும் காலம் வெகு அருகில்தான் உள்ளது.

அதுவரை... தனி மனித இடைவெளி, முகக்கவசம் மற்றும் முறையாகக் கைகளைக் கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றியபடி நாம் காத்திருப்போம்.

ஏனெனில்... இந்த உலகில் எந்தத் துன்பமும் நிரந்தரமில்லை... கொரோனா உட்பட!