Published:Updated:

2K kids: கணபதி பாட்டி.... கடையும் கதையும்!

கணபதி பாட்டி கடை
பிரீமியம் ஸ்டோரி
News
கணபதி பாட்டி கடை

செல்வக்குமாரி.ப

புதுச்சேரி, ஆரோவில் அருகில் உள்ளது கூரை வேயப்பட்ட அந்தக் குட்டி உணவகம். கூரையின் மேல் சோலார் பேனல், கூரைக்குள் இருந்து செமத்தியான மீன் வாசம் என அந்த காம்பினேஷனே நம்மை சுவாரஸ்யப்படுத்த, உள்ளே சென்றோம்.

மூங்கில் இருக்கைகளும் மூங் கில் கால் மர மேசைகளும் அந்த இடத்தை இன்னும் பிடித்துப்போக வைத்தது. ‘`சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியல், மீன் கொழம்பு இருக்கு... எடுத்துட்டு வரட்டுமா?'’ என்று, வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை உபசரிப்பதுபோல வாஞ்சையுடன் கேட்டார் கணபதி பாட்டி. அந்தக் கடையின் முதலாளி மற்றும் தொழிலாளி. ‘`உங்ககூட சமையலறைக்கு வரலாமா?’' என்ற நம்மை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு அனுமதித்தார்.

மிகச் சிறிய அடுப்படி. விறகடுப்பில் ஊதாங்குழல் வைத்து ஊதினார். ‘`வெளிய சோலார் பேனல்லாம் வெச்சிருக்கீங்க... இங்க விறகடுப்பா..?’' என்றோம்.

2K kids: கணபதி பாட்டி.... கடையும் கதையும்!

‘`அது ஒரு லைட், ஒரு காத்தாடிக்கு மட்டும் தான் வரும். அதுவும்கூட, பல வருஷத்துக்கு முன்னாடி வெளிநாட்டுல இருந்து வந்திருந்த ஒருத்தரு, ஒரு உதவியா எனக்கு வெச்சுக் கொடுத்துட்டுப் போனது. மழைக்காலத்துல அதுவும் கைகொடுக்காது’’ என்ற பாட்டியிடம், அவரது பின்புலம் பற்றிக் கேட்டோம்.

‘`எனக்கு சொந்த ஊரு கன்னியாகுமரி. கட்டினவர் என்னைய விட்டுட்டுப் போயிட் டாரு. பொழப்புக்காக வந்த ஊரு இது.

23 வருஷமா இங்க கடை நடத்துறேன், இப்போ எனக்கு 60 வயசாகுது. எனக்கு நாலும் பொம்பளப் புள்ளைக. நாலு பேரையும் படிக்கவெச்சு கல்யாணம் பண்ணிக்கொடுத் துட்டேன். அந்தக் கடனையெல்லாம், இந்தக் கடைய ஓட்டிதான் அடைச்சுட்டிருக்கேன். இது வாடகை இடம்தான். பொண்ணுங்க எப்பவாவது என்னைப் பார்க்க வருவாங்க. இந்தக் கிழவி கடைக்கு, ஒரு நாளைக்கு ரெண்டு கிலோ அரிசி போட்டாலே மீந்துடும். அவ்ளோதான் ஆளுங்க வருவாங்க. ஆனாலும், வர்றது வரட்டும்னு கடையை விடாம நடத் திட்டு இருக்கேன். சுத்தியிருக்குற மரம், அங்க வர்ற பறவைங்க, இந்தக் கறுப்புப் பூனை... இதெல்லாம்தான் எனக்குத் துணை’’ என்ற கணபதி பாட்டி, நமக்குத் தட்டில் மீன்குழம்புச் சோறு போட்டுக்கொடுத்தார். வாசனையும் ருசியும் ஒன்றோடு ஒன்று போட்டுபோட்டு, இரண்டுமே வென்றன. நம் வயிறும் நிறைந்து போனது.

2K kids: கணபதி பாட்டி.... கடையும் கதையும்!
2K kids: கணபதி பாட்டி.... கடையும் கதையும்!

‘`இந்த மீன் குழம்புக்காகவே இங்க பலர் வருவாங்க. இந்தத் தாயோட போராட்ட வாழ்க்கையை, என் வாடிக்கையாளர்கள் எல் லாரும்தான் காப்பாத்திவிடுறாங்க. ஒண்ணு சொல்லத் தோணுது. சாப்பாடுல இருந்து காய்கறி, துணிமணி வரை பெரிய பெரிய கடைகள்லதான் வாங்கணும்னு இல்ல. மக்கள் எல்லாரும் எங்களை மாதிரி சின்னச் சின்ன வியாபாரிங்களை, உழைப்பாளிங்களைத் தேடி வந்தா பல குடும்பங்கள் பொழைக்க உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்ல..?!”

- அடுத்த வேளை சமையலுக்கான மீனைக் கழுவி, அந்தக் கழிவுகளை காகங்களுக்குப் போட்டு, அவை கொத்திச் செல்வதை நிறை வுடன் பார்த்தவாறே சொல்கிறார் கணபதி பாட்டி.