Published:Updated:

“காந்தி இப்போது கூடுதலாகத் தேவைப்படுகிறார்!”

காந்தி
பிரீமியம் ஸ்டோரி
காந்தி

ஓவியம்: ஆதிமூலம்

“காந்தி இப்போது கூடுதலாகத் தேவைப்படுகிறார்!”

ஓவியம்: ஆதிமூலம்

Published:Updated:
காந்தி
பிரீமியம் ஸ்டோரி
காந்தி

“மேலாடையைத் துறந்து அவர் சன்னியாசம் செல்லவில்லை; எளிய மக்களுக்காகவே வாழ்ந்து அர்ப்பணித்தார். வெண்மையான ஆடையைத் தேர்வு செய்தாரே தவிர காவியைத் தேர்வு செய்யவில்லை” என்று நிதானமும் தெளிவுமாகப் பேசுகிறார் 85 வயதான தாரா காந்தி பட்டாச்சார்யா.

டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகம் மற்றும் அறக்கட்டளையின் பொறுப்பாளராக இருந்து பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜி பேத்தியான தாரா காந்தி பட்டாச்சார்யா மதுரை வந்திருந்தார்.

காந்தி அரையாடைப் புரட்சி செய்த நிகழ்வின் நூறாண்டு நிறைவை கடந்த 22-ம் தேதி காதி இயக்கங்களும், காந்திய தொண்டர்களும் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அதிலும் குறிப்பாக மதுரை மக்களோ கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். காரணம், காந்தி ஆடைப் புரட்சி செய்தது மதுரை நகரில் என்பதால். அப்போதிருந்தே மகாத்மா காந்திக்கும் மதுரைக்குமான பந்தம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. மதுரை மேலமாசி வீதியில் காந்தி தங்கியிருந்த வீடு, மக்கள் முன் உரை நிகழ்த்திய காந்தி பொட்டல், அவர் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அருங்காட்சியகம், உலக தமிழ்ச்சங்கம் எனப் பல இடங்களிலும் இரண்டு நாள்கள் பல்வேறு அமைப்பினர் காந்தியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த தாரா காந்தி, மதுரை மக்களின் உற்சாகத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோனார். காந்தி அருங்காட்சியகத்தில் மாலை அணிவிக்க வந்தபோது அங்கு வரவேற்ற மக்களைப் பார்த்து “இது என் நிலம், என் தாயின் வீட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன்” என்று கலங்கினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கலந்துகொண்டு, ‘‘நான் எந்தவொரு அரசியல் கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. நம் எல்லோருக்கும் உணவளிப்பவர்கள் விவசாயிகள். நான் எப்போதும் உண்மைக்கு ஆதரவளிப்பேன், நாட்டின் வயதான மூத்த குடிமகள் என்ற முறையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்தேன்’’ என்று விவசாயிகளின் நியாயங்களை எடுத்துப் பேசியவர் தாரா.

“காந்தி இப்போது கூடுதலாகத் தேவைப்படுகிறார்!”

“ஆனந்த விகடன்” என்று நம்மை அறிமுகப்படுத்தியதும் முகம் மலர்ந்தவர், “சின்ன வயதில் நான் வாசித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

“காந்தி அரையாடைப் புரட்சியை இங்கிருந்து தொடங்கியது பற்றி?”

“எளிய விவசாயியைப்போல அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டது மதுரையில்தான். நாடு விடுதலையடைந்த பின்னும் தன் அரையாடை விரதத்தை காந்திஜி கடைசிவரை கைவிடவில்லை. அதே உடையுடன்தான் டெல்லி போன்ற குளிர் நிறைந்த நகரங்களிலும் வாழ்ந்தார். இதற்கு வித்திட்டது மதுரையும் மக்களும்தான்.”

“கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் காந்தியின் தத்துவங்கள், காந்திய வாழ்வியல், காந்தியப் பொருளாதாரத்தின் தேவை உள்ளதா?”

“கொரோனா காலத்தில் காந்தியடிகளின் சிந்தனைகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. எளிமையான, அன்பான வாழ்க்கை முறையின் மூலம் இதுபோன்ற பெருந்தொற்றுகளைக் கடந்துவிடலாம். அவருடைய சிந்தனைகளுக்கு இப்போதும் தேவையுள்ளது. அதை நாம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்” என்றார்.

முதல் நாள் காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுப் பேசியவர், “மகாத்மா உடுத்திய வெண்மை நிறம், உண்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. அவர் உடை மாற்றத்திற்குக் காரணமாக இருந்த மதுரை மக்களுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன். காந்தியின் பேத்தியாகிய நீங்கள், அவரைப்போல அல்லாமல், அதிக உடை அணிகிறீர்களே எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் காந்தி அல்ல. அவரிடம் இருந்து மாறுபட்டவள். ஆனால், காந்தி அணிந்திருந்த வெண்மையில் பல நிறங்களைக் கண்டிருக்கிறேன்” என்றார்.

“காந்தி இப்போது கூடுதலாகத் தேவைப்படுகிறார்!”

22-ம் தேதி அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், “மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகத்தைப் புனரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறேன். காந்தியச் சிந்தனையை மக்களிடம் கொண்டு செல்லும் தமிழக அரசின் முயற்சி பாராட்டுக்குரியது.

தமிழக அரசு, பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். சமூக நீதி என்பது அரசால் மட்டுமே செயல்படுத்தக்கூடிய பணி அல்ல. அனைவருக்குள்ளும் சமூக நீதிச் சிந்தனை பிறக்க வேண்டும். இந்திய நாட்டிற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவையும், மீனாட்சியின் அருளாசியையும் நான் மதுரையிலிருந்து எடுத்துச் செல்வதில் பெருமை கொள்கிறேன்’’ என்றார்.

நுகர்வுக்கலாசாரமும் மதவாதமும் செல்வாக்குப் பெற்றுவரும் சூழலில் காந்தியின் தேவையை மதுரை மட்டுமல்ல இந்தியாவே உணரவேண்டும்.