Published:Updated:

காந்தியின் அரையாடைப் புரட்சியின் நூற்றாண்டை உற்சாகமாகக் கொண்டாடிய மதுரை மக்கள்!

100 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 21-ம் தேதி மதுரைக்கு ரயிலில் வந்தபோது, வருகிற வழியில் கிராமங்களில் தென்பட்ட மக்களில் பலர் அரையாடையுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாத்மா காந்தி, அரையாடையை மட்டும் தன் உடையாக மாற்றிக்கொண்டு இயங்கக் காரணமான நிகழ்வின் 100 ஆண்டுகள் நிறைவை உணர்ச்சிமயமாகவும், பெரும் உற்சாகத்தோடும் மதுரை மக்கள் இன்று கொண்டாடினார்கள்.

காந்தி தங்கிய வீட்டில் அமைச்சர், அதிகாரிகள் மரியாதை
காந்தி தங்கிய வீட்டில் அமைச்சர், அதிகாரிகள் மரியாதை

விடுதலைப் போராட்டத்தில் மக்களிடம் உரையாற்ற ஐந்து முறை மதுரைக்கு வருகை தந்த மகாத்மா காந்தி, 100 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 21-ம் தேதி மதுரைக்கு ரயிலில் வந்தபோது, வருகிற வழியில் கிராமங்களில் தென்பட்ட மக்களில் பலர் அரையாடையுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வறுமையால்தான் இப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டவர், அன்று இரவு மதுரை மேலமாசி வீதியிலுள்ள கட்சி நிர்வாகியின் வீட்டில் தங்கியபோது யோசித்து ஒரு முடிவெடுத்தார்.

காந்தி பொட்டல்
காந்தி பொட்டல்

மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர், தான் அணிந்திருந்த விலையுயர்ந்த குஜராத்தி ஆடையை எறிந்துவிட்டு, ஏழை விவசாயிகள் அணியும் சாதாரண கதர் வேட்டி, துண்டுடன் சட்டை இல்லாமல் மக்கள் முன் தோன்றினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதிக்காலம் வரை அதுவே அவருடைய தோற்றமாகிப்போனது. இந்த நிகழ்வின் மூலம் மதுரை, காந்தியின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துவிட்டது. அதனால் மதுரை மக்கள் காந்தி மீது அதிக ஈர்ப்புடன் இருப்பார்கள்.

காந்தி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா
காந்தி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா
மதுரையில் மகாத்மா காந்தி அரையாடை புரட்சி செய்த நூற்றாண்டு தினக் கொண்டாட்டம் #VikatanPhotoStory

காந்தியின் மறைவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் மதுரையில்தான் அவருக்கு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

காந்தியின் அரையாடை அணிந்த நிகழ்வின் நூற்றாண்டு விழாவை மதுரை காந்தி அருங்காட்சியகமும், மாவட்ட நிர்வாகமும், காந்திய சிந்தனையாளர்களும் நடத்தினார்கள். இதற்காகப் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தநிகழ்வில் காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்துகொண்டார்.

காந்தியின் முகம் பதித்த முகமுடியை அணிந்து குழந்தைகள்
காந்தியின் முகம் பதித்த முகமுடியை அணிந்து குழந்தைகள்

முதல் நாளே மதுரைக்கு வந்தவர், ``இங்கு வந்ததில் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பதுபோல இருக்கிறது. இந்த மகத்தான நிலத்துக்கு எனது மரியாதையைக் காணிக்கை ஆக்குகிறேன். விவசாயிகளின் தோற்றம் காந்தியின் ஆடை மாற்றத்துக்கு ஒரு காரணமானது. காந்தி ஒன்றும் ஆடையை மாற்றிக்கொண்டு இமாலயாவுக்கு சந்நியாசம் போகவில்லை. இங்கே இந்த ஏழை மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்’’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதையொட்டி காந்தியுடன் தொடர்புடைய காந்தி தங்கியிருந்த வீடு (தற்போது அங்கு காதி கிராஃப்ட் ஷோரூம் இருக்கிறது) காந்தி சிறப்புரை ஆற்றிய காமராஜர் சாலையிலுள்ள காந்தி பொட்டல், காந்தி அருங்காட்சியகம் என அனைத்து இடங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தாரா காந்தி பட்டாச்சார்யா
தாரா காந்தி பட்டாச்சார்யா

இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி., கலெக்டர் உட்பட அதிகாரிகள் இந்த இடங்களுக்குச் சென்று மரியாதை செய்தனர்.

எஸ்.எஃப்.ஐ சார்பில் காந்தி வேடமிட்ட 100 மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்துகொண்டார்.

காந்தி முகமூடியை அணிந்த குழந்தைகளுடன் எம்.பி சு.வெங்கடேசன்
காந்தி முகமூடியை அணிந்த குழந்தைகளுடன் எம்.பி சு.வெங்கடேசன்

மாலையில் உலகத் தமிழ்ச் சங்க அரங்கத்தில் நினைவு நூல், தமிழறிஞர்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

காந்தியின் நினைவைப் போற்றும் தொடர் நிகழ்ச்சிகளால் மதுரையெங்கும் இன்று காந்தியின் பெயரே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு