Published:Updated:

2K kids: தோட்டத்துக் கிணறு... தலைமுறைகளின் கொண்டாட்டம்!

தோட்டத்துக் கிணறு
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்துக் கிணறு

கணேஷ் கிருஷ்ணா

2K kids: தோட்டத்துக் கிணறு... தலைமுறைகளின் கொண்டாட்டம்!

கணேஷ் கிருஷ்ணா

Published:Updated:
தோட்டத்துக் கிணறு
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்துக் கிணறு

‘2கே கிட்ஸுக்கு மாலும் மொபைலும்தான் தெரியும்... கிணறு பத்தியெல்லாம் என்ன தெரியும்?’ என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ஆனால், இன்றும் தோட்டத்துக் கிணறு, முங்கு நீச்சல் என வளரும் 2கே கிட்ஸும் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். நானே சாட்சி. மனசெல்லாம் சில்லெனக் கிடக்கும் அந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...

‘`ஏலேய் மூக்கய்யா... கெணத்துப் பக்கம் போவாத...’' என்று, கிணறு நோக்கிச் செல்லும் கால்களை எல்லாம் ஏதோ ஒரு குரல் அதட்டிக்கொண்டே இருக்கும். அப்படி என் 13 வயதில் நான் என் வீட்டு ஆண்களுடன் ‘தொத்திக்கொண்டு’ கிணற்றுக்குச் சென்ற போது, என்னை நோக்கியும் வந்தது அந்தக் குரல். ‘`கணேஷு... கேணிகிட்ட போவாத..!’' கேட்ட நொடியில் என் கால்களின் வேகம் குறைந்துவிட்டது. ஆனால் என் அப்பா, ‘`அட அதெல்லாம் பயமில்ல வாடா... நாங்க இருக்கோம்ல...’' என்று என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார். இழுத்துச் சென்றார் என்றும் சொல்லலாம்.

2K kids: தோட்டத்துக் கிணறு... தலைமுறைகளின் கொண்டாட்டம்!

ஆரம்ப நாள்களில், மெதுவாக கேணிக்குள் எட்டிப் பார்ப்பேன். அந்தப் பச்சை தண்ணீர் திரையில், மேலே வானில் மேகங்கள் மிதந்து கொண்டிருக்கும் படம் ஓட, அதை ‘ச்சத்தக்’ என்று உள்ளே குதித்துக் கலைப்பார்கள் சிறுவர்களும் இளைஞர்களும். ‘உன் வயசுப் பையன் எல்லாம் எப்படி நீச்சல் அடிக்கிறான் பாரு...’ என்று அப்பா சொல்ல, ‘படியில இறங்கி வாடா நீச்சல் பழகலாம்...’ என்று அழைப்பார்கள் கிணத்துக்குள் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும் அண்ணன்கள். அப்பா தைரியம் கொடுத்து, கிணற்றின் ஒவ்வொரு படியிலும் என்னை இறக்கி தண்ணீரை நோக்கி அழைத்துச் செல்லும் நொடிகளில், என் இதயம் துடிப்பது வெளியில் கேட்கும் எனக்கு. மெள்ள மெள்ள அப்பா எனக்குக் கிணற்று நீச்சல் கற்றுக் கொடுத்தார்.

அன்று கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்தேன். `‘குதிடா...’' என்றார் அப்பா. ‘அய்யோ பயமா இருக்கு...’ என்றேன். அருகில் வந்தவர், குதிப்பதற்குப் பின்பற்ற வேண்டிய லாகவங்களை நிதானமாக விளக்கினார். தைரியத்தை மனசில் திரட்டி, பாதங்களைத் தரையில் இருந்து பறக்கவிட்டு தண்ணீர் நோக்கி காற்றில் மிதந்து சென்று கொண்டிருந்த நொடிகள்... அடிவயிற்றில் ஆறு ஓடுவதுபோல இருந்தது.

2K kids: தோட்டத்துக் கிணறு... தலைமுறைகளின் கொண்டாட்டம்!

‘ச்சத்தக்’... தண்ணீரைக் கிழித்துக்கொண்டு தலை உள்ளே சென்ற அதே வேகத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே வந்தபோது... ஒரு குட்டி மறுபிறப்பு போல இருந்தது. சுற்றி நின்றிருந்த அனைவரும் ‘ஹேய்ய்ய்ய்ய்’ என்று உற்சாகக் குரல் எழுப்ப, என் முகத்தில் பெருமையும் லேசான வெட்கமும் வழிந்தது.

அடுத்த நான்கு வருடங்களில், நீச்சலில் என் அப்பாவுக்கே போட்டியாகும் அளவுக்கு கிணறு எனக்குப் பழகிப்போனது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ‘கெணத்துக் குளிக்கப் போவோர் சங்கம்’ பரபரப்பாகிவிடும். வீட்டில் அம்மாவை நச்சரித்து, சோறு கட்டி எடுத்துக்கொண்டு, தெருவில் இறங்கி வீடு வீடாகச் சென்று ‘கெளம்புங்க கெளம்புங்க...’ என்று அழைத்துக்கொண்டு, வரப்பில் வரிசையாக சாரல் காற்றைக் குடித்தபடி நடந்து கிணற்றை அடைவோம். நாங்கள் செல்லும் நேரம் அங்கே பெண்கள் ஏற்கெனவே குளித்துக்கொண்டிருந்தால், அவர்கள் செல்லும்வரை தூரத்தில் காத்திருப்போம். ‘என்ன இதெல்லாம் உங்களாலதான் முடியுமா...’ என்று கேட்பதைப்போல, சிறுமிகள் முதல் அக்காக்கள், அத்தைகள் வரை கிணற்றில் சல்சல்லென்று குதித்து விளையாடும் அவர்களின் அந்தப் பொழுதில் உற்சாகம் பொங்கி வழியும்.

பெண்கள் கிளம்பிச் சென்ற பிறகு, கிணறு எங்கள் வசம். கிணற்றின் மேலே வரிசையாக நின்றுகொள்வோம்; ஒவ்வொருவராகக் குதிக்க ஆரம்பிப்போம். மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறிக் கிடந்து, கண்கள் சிவக்க சிவக்க ஆசை தீர ஆட்டம் போட்டுவிட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவோம். இதற்கிடையே, கிணற்றுக்குள் அனைவரும் குதூகலித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவன் மட்டும் கள்ளத்தனமாக மேலே ஏறி, கட்டி வந்த சோறு, துவையலை சில கவளங்கள் உள்ளே தள்ளிவிட்டு, தலையைக் காயவிட்டபடி நிற்பான். அந்த ஒருவன் சில தினங்களில் நானாகவும் இருந்திருக்கிறேன். பின்னர் அனைவரும் மேலே வர, அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு நடையைக் கட்டுவோம்.

2K kids: தோட்டத்துக் கிணறு... தலைமுறைகளின் கொண்டாட்டம்!

தண்ணீரில் ஆடிய அசதியில் வந்து படுத்தால், அடித்துப் போட்டது போல இருக்கும் அந்தத் தூக்கம். 80’ஸ், 90’ஸ் கிட்ஸுக்குக் கிடைத்த இந்த அனுபவம் 2கே கிட் ஆன எனக்கும் கிடைத்ததில் செம்ம ஹேப்பி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism