Published:Updated:

ஆரணி: வெடித்துச் சிதறிய சிலிண்டர்; தரைமட்டமான வீடு! - 3 பேர் பரிதாப பலி

ஆரணி சிலிண்டர் வெடித்து விபத்து
ஆரணி சிலிண்டர் வெடித்து விபத்து

ஆரணி குடியிருப்புப் பகுதியில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் புதுகாமூர் சாலையிலுள்ள வீட்டில் முக்தா என்ற மூதாட்டி தனது வளர்ப்பு மகள் மீனா என்பவருடன் வசித்துவருகிறார். இவர்களது வீட்டில் ஜானகிராமன் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் சுரேஷ், ஹேமநாத் ஆகிய இரு மகன்களுடன் வசித்துவருகிறார்.

சிலிண்டர் விபத்து
சிலிண்டர் விபத்து

நேற்று இரவு சமையல் செய்த மூதாட்டி முக்தா, கவனக்குறைவாக சிலிண்டரை அணைக்காமல் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்று அடுப்பை பற்றவைத்திருக்கிறார். அப்போது அறை முழுவதும் சிலிண்டரிலிருந்த எரிவாயு பரவியிருந்ததால் பயங்கர சத்ததுடன் சிலிண்டர் வெடித்தது. அதில் அந்த வீடு தரைமட்டமானதுடன், கான்கிரீட் சுவர்களும் சுக்கு நூறாக நொறுங்கின.

அதில் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆரணி தீயணைப்பு துறையினர் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கியிருந்த ஹேமநாத், காமாட்சி சந்திரம்மாள் உள்ளிட்ட 7 பேரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் காமாட்சி, சந்திரம்மாள் மற்றும் ஹேமநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதையடுத்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு