Published:Updated:

எளிய தமிழில் பொருளாதாரப் புத்தகம்! - ஜி.டி.பி கணக்கீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள்
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள்

ஜி.டி.பி என்ற ஒற்றை அளவுகோலை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை கணித்துவிட முடியுமா...’ என்று கேட்டால், முடியாது!

பிரீமியம் ஸ்டோரி

ன்றைக்கு சாதாரண மனிதர்களும் அக்கறையோடு அறிந்துகொள்ள விரும்பும் ஒரு விஷயமாக இருக்கிறது ஜி.டி.பி (Gross Domestic Product) என்று சொல்லப்படும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி.

எளிய தமிழில் பொருளாதாரப் புத்தகம்! - ஜி.டி.பி கணக்கீடு

பொருளாதார வல்லுநரும், தமிழ்நாடு திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினருமான ஜி.சிதம்பரம் எழுதிய ‘நாடும் வளமும் ஜி.டி.பி’ என்ற புத்தகம் ஜி.டி.பி-யை எளிய மொழியில் எல்லோரும் புரிந்துகொள்கிற மாதிரி எழுதப்பட்டிருக்கிறது.

அண்மையில் இந்தப் புத்தகம் சென்னையிலுள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை கனரா வங்கி சேர்மனும், பிரபல சார்ட்டடு அக்கவுன்டன்ட்டுமான டி.என்.மனோகரன் வெளியிட்டுப் பேசினார்.

எளிய தமிழில் பொருளாதாரப் புத்தகம்! - ஜி.டி.பி கணக்கீடு

“இந்தப் புத்தகம் மிகவும் எளிய நடையில் அனைவரும் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. பொருளாதாரத்தை எளிய முறையில் அனைவருக்கும் கொண்டுசேர்த்திருக்கும் இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் தற்போது பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அறிமுகம், வங்கித் துறையில் வாராக்கடன்களைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்ட மாற்றங்கள்... எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

இந்தச் சீர்திருத்தங்களால் நம் நாட்டின் கட்டமைப்பு மேலும் வலுவடைந்திருக்கிறது. விமான நிலைய ஓடுதளத்தில் ஓடத் தொடங்கிய விமானத்தின் சூழலில் தற்போதைய இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. விரைவில் ‘டேக் ஆஃப்’ ஆனதும், இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி நிலையை நோக்கிச் செல்லும்.

அதிக மக்கள்தொகை கொண்ட நம் இந்தியா, உலகின் வலிமையான வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளோடு போட்டியிடக்கூடிய கட்டமைப்பில் தற்போது இருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வல்லமையுள்ள நாடாக மாறும். `ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இன்னும் சில ஆண்டுகளில் மூன்று ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம். அடுத்தகட்டமாக ஐந்து ட்ரில்லியன் டாலரையும் தாண்டி வேகமாகப் பயணிப்போம். இந்த நூலின் ஆசிரியர், ஜி.டி.பி குறித்து எழுதியிருப்பதுபோலப் பல பொருளாதார விஷயங்களைப் பற்றியும் எளிய தமிழில் எழுதி வெளியிட வேண்டும்” என்றார்.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள்
புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றவர்கள்

‘நாடும் வளமும்’ என்ற தன் புத்தகத்தின் அவசியம் குறித்துப் பேசினார் அதன் ஆசிரியரான ஜி.சிதம்பரம். “பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வதில் பொதுமக்களில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், எழுதப்பட்ட மொழி அவர்களுக்குப் படிக்கத் தடையாக இருக்கும். ஆங்கில மொழியறிவு உள்ளவர்கள், பொருளாதாரம் குறித்த அறிவை ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் படித்து வளர்த்துக்கொள்கிறார்கள். அதற்கென பல்வேறு தினசரி ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கைகள் உள்ளன. ஆனால், தமிழ்மொழியை மட்டுமே வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு பொருளாதாரம் குறித்த அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே, பொருளாதாரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்படும். அவர்களை மனதில்கொண்டுதான் பொருளாதாரம் குறித்து எளிய தமிழில் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

பொருளாதாரம் என்பது மிகப் பெரிய துறை. அதை முழுமையாக ஒரே ஒரு புத்தகத்தில் சொல்லிவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தையாக, உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் குறிக்கும் `ஜி.டி.பி’ இருக்கிறது. எனவே, ஜி.டி.பி-யையே தலைப்பாக வைத்து, அது குறித்து விரிவாக இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெறும் கட்டுரைகளாக மட்டுமே எழுதாமல், ஜி.டி.பி குறித்து மக்களிடையே அடிக்கடி எழக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்விதமாக, வினா- விடை எழுத்து முறையில் விளக்கங்களை அளிக்க முயன்றிருக்கிறேன். யூகத்தின் அடிப்படையிலேயே மொத்தம் 88 கேள்விகளை உருவாக்கி, அவற்றுக்கு தெளிவான, விரிவான விளக்கங்களை கூடுமானவரை எளிமையாக விளக்கியிருக்கிறேன்.

‘ஜி.டி.பி என்ற ஒற்றை அளவுகோலை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை கணித்துவிட முடியுமா...’ என்று கேட்டால், முடியாது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு உண்டு. அவற்றை இணைத்து, `அரசியல் பொருளாதாரம்’ என்றே கூறுவார்கள். தற்போதுதான் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துவிட்டார்கள். எனினும், பொருளாதாரப் பிரச்னையை அலசி ஆராயும்போது அரசியல் கலப்பும் வந்துவிடுகிறது. இந்தப் புத்தகத்தை எழுதும்போதே எந்தவிதமான அரசியல் சாயமும் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதற்காகவே நம் நாட்டு ஜி.டி.பி வளர்ச்சி விவரங்களை ஆட்சிவாரியாகக் கணக்கில்கொள்ளாமல், ஒவ்வொரு பத்து ஆண்டுகளாகப் பிரித்து விளக்கியிருக்கிறேன். அதேபோல, ஒருவரின் ஆட்சிக்காலத்தில் ஜி.டி.பி வளர்ச்சி நல்ல முறையில் இருந்தால், அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களின் செயல்திறனும் அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜி.டி.பி
ஜி.டி.பி

`ஜி.டி.பி என்ற ஒற்றை அளவுகோலை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை கணித்துவிட முடியுமா...’ என்று கேட்டால், முடியாது என்றே சொல்வேன். ஆனால், நாட்டின் வளர்ச்சியை கணிப்பதில் ஜி.டி.பி-யும் ஓர் அளவுகோல் என்பதே உண்மை. ஜி.டி.பி-யால் எந்தெந்தத் துறையில் வளர்ச்சி என்பதைக் காட்ட முடியுமே தவிர, அந்த வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதைக் காட்ட இயலாது. எனினும், ஜி.டி.பி கணக்கிடும் முறை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான ஓர்அளவுகோல்தான். பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களை அடுத்தடுத்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. 90 வயதைத் தொட்டிருக்கும் எனக்கு உடல்நிலை ஒத்துழைக்கும்பட்சத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மை குறித்து அடுத்து எழுதுவேன்’’ என்று நம்பிக்கையுடன் பேசினார்.

அவரின் ஆசை நிறைவேறட்டும்! பொருளாதாரம் தொடர்பான இன்னும் பல புத்தகங்கள் கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு