Published:Updated:

பண்ணை வீடு, கொடைக்கானல் தோட்டம், ஜெமினி நினைவுகள்...

கமலா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கமலா செல்வராஜ்

டாக்டர் கமலா செல்வராஜின் பசுமை அனுபவங்கள்!

பண்ணை வீடு, கொடைக்கானல் தோட்டம், ஜெமினி நினைவுகள்...

டாக்டர் கமலா செல்வராஜின் பசுமை அனுபவங்கள்!

Published:Updated:
கமலா செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
கமலா செல்வராஜ்

நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சோதனைக் குழாய் கருத்தரிப்பு மருத்துவத்தில் தமிழகத்தின் முன்னோடி மருத்துவர். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடற்கரையை ஒட்டிய அந்த ஒரு ஏக்கர் நிலத்தை, பலவகையான தாவரங்கள் வளரும் சோலையாக மாற்றியிருக்கிறார். வாரக்கடைசியில் தவறாமல் இங்கு ஆஜராகும் கமலா, கொடைக்கானலிலுள்ள மற்றொரு பண்ணை வீட்டை முன்மாதிரியான பூந்தோட்டமாக நேர்த்தியாகப் பராமரிக்கிறார். விடுமுறை தினம் ஒன்றில், ஈஞ்சம்பாக்கம் தோட்டத்தில் டாக்டர் கமலா செல்வராஜை சந்தித்தோம்.

“எங்கம்மாவுக்குத் தோட்டப் பராமரிப்புல ரொம்பவே ஆர்வம். சின்ன வயசுல ஒருமுறை என் அக்காவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. நாங்க பிராமின் குடும்பம்னாலும், வீட்டுல நாட்டுக்கோழிகளை வளர்த்து, அதோட முட்டைகளை அக்காவுக்கு எங்கம்மா சாப்பிடக் கொடுப்பாங்க. பால், நெய் தேவைக்காகப் பசுக்களையும் வளர்த்தோம். எங்க வீட்டுத்தோட்டத்துல மல்லிகைப்பூ ரொம்பவே ஸ்பெஷல். மாட்டுச்சாணத்தை மட்டும்தான் உரமா பயன்படுத்துவோம். அதனால, ஒவ்வொரு செடியிலும் மல்லிகை பூத்துக்குலுங்கும்.

பண்ணை வீடு, கொடைக்கானல் தோட்டம், ஜெமினி நினைவுகள்...

ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அம்மாவுக்கு உதவியா உட்கார்ந்தா, முழம் கணக்கா பூமாலைத் தொடுப்பேன். கல்யாணத்துக்கு அப்புறமா, என் வீட்டுலயும் சின்னதா தோட்டம் வெச்சிருந்தேன். என் கணவரும் டாக்டர்தான். எங்க ரெண்டு பேருக்கும் 50 வயசான அப்புறமா, உடலுக்கும் மனசுக்கும் இனி போதுமான முக்கியத்துவமும் ஓய்வும் கொடுத்தாகணும்ங்கிற கட்டாயத்தை நாங்க உணர்ந்தோம்” என்றவர், அதுக்கான தேடலில்தான், 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது ஒருசில வீடுகளுடன், சுற்றுவட்டாரத்தில் காடுகள் சூழ்ந்திருந்த இந்த இடத்தைப் பசுமையான சோலையாக மாற்றிய கதையை, தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

“என் கூடப்பிறந்த ரெண்டு சகோதரிகள், என் பையன் தீபு ராஜ்கமல், பொண்ணு ப்ரியா உட்பட குடும்பத்துல பலரும் டாக்டர்கள்தான். ஆளாளுக்கு பிஸியா வேலை செஞ்சாலும், முக்கியமான நேரங்கள்ல நாங்க எல்லோருமே ஒண்ணா சந்திக்க ஏதுவா, இந்த வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டி னோம். வீட்டைச் சுத்தி பசுமை படர்ந்திருந்தா மனசுக்கு இதமா இருக்குமேன்னு பலவிதமான பூச்செடிகளை வளர்த்தேன். ஒருகட்டத்துல ஆஸ்பத்திரி நிர்வாகத்தை என் மககிட்ட ஒப்படைச்சுட்டேன். வார நாள்கள்ல ஆஸ்பத்திரி வேலை, வாரக்கடைசியில ரெண்டு நாள்கள் முழுக்கவே எனக்கான இந்தத் தோட்ட வேலைனு பிரிச்சுக்கிட்டேன்.

கடற்கரை மணற்பாங்கான இந்த நிலத்துல பழ மரங்களும் காய்கறிகளும் பெரிசா வளரா துனு சிலர் சொன்னாங்க. ஆனாலும், நிறைய எரு கொட்டி நிலத்தை ஓரளவுக்குப் பக்குவப்படுத்தினேன். கொய்யா, மா, நெல்லி, பலானு பலவிதமான பழ மரங்களை வளர்த்தேன். இந்தத் தோட் டத்துல கிடைக்கிற துளசி யிலேருந்து மாலை தொடுத்து, தினமும் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க. இங்க 30 தென்னை மரங்களுக்கு மேல இருக்கு. சமையல் தேவைக்குப் போக, மீதமிருக்கிற தேங்காய்கள்ல எண்ணெய் எடுப்போம். நீச்சல் குளத்தோட பராமரிப்பை வெச்சே வீட்டோட பராமரிப்பை கணிக்கலாம்னு சொல்லு வாங்க. அதன்படி, எந்த நேரத்துலயும் ஸ்விம் பண்ண ஏதுவா, நீச்சல் குளத்தை எப்பயுமே தூய்மையா பார்த்துப்போம். ஸ்விம் பண்றது எனக்குப் பிடிச்ச ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்கிற கமலா, குழந்தைகளைப் போலவே செடிகளுடன் செல்லம் கொஞ்சுகிறார்.

பண்ணை வீடு, கொடைக்கானல் தோட்டம், ஜெமினி நினைவுகள்...
பண்ணை வீடு, கொடைக்கானல் தோட்டம், ஜெமினி நினைவுகள்...

பலா, மா, எலுமிச்சை, சப்போட்டா, திராட்சை, சீத்தா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, நாவல், நெல்லி, தேக்கு, கறிவேப்பிலை, வெற்றிலை, நாகலிங்கம், ருத்ராட்சம், வில்வம், மனோரஞ்சிதம், தவசி முருங்கை, வெண்டை, தக்காளி, கத்திரி, கீரை வகைகள், சுண்டைக்காய், வாழை, கொடுக்காப் புளி, தேக்கு, ஏராளமான பூச்செடிகள் உட்பட இந்தத் தோட்டம் செழுமைக்கான அடையாளமாகக் காட்சி யளிக்கிறது.

“அப்பாவோட கடைசிகாலத்துல அடிக்கடி இந்தப் பண்ணைக்கு வருவார். தோட்டத்திலிருந்து காய்கறிகளைப் பறிச்சு நானே அவருக்குச் சமைச்சுக் கொடுப்பேன். என்னோட அக்கா டாக்டர் ரேவதி சுவாமிநாதன் அமெரிக்காவுல வசிக்கிறாங்க. பெரிய தங்கச்சி நாராயணி, டெல்லி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில சீஃப் எடிட்டரா இருக்காங்க. கடைசி தங்கை டாக்டர் ஜெயா ஸ்ரீதர் (ஜி.ஜி) சென்னையில இருக்காங்க. நாங்க நாலு பேரும் அடிக்கடி இந்த வீட்டுல சந்திப்போம். மனசையும், உடலையும் பாசிட்டிவ்வா வெச்சுக்க தோட்ட வேலைகள் எனக்கு அளவு கடந்த உற்சாகத்தைத் தருது. அதனால, இந்தத் தோட்டம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என்பவரின் வார்த்தைகளை ஆமோதிப்பதுபோல அசைகின்றன தோட்டத்துச் செடிகளும் மரங்களும்.

*****

கொடைக்கானலில் மினி பூங்கா!

கொடைக்கானலில் மூன்றரை ஏக்கரில் பிரமாண்டமான பண்ணைத் தோட்டத்தில், ஒரே காம்பவுண்டுக்குள் சகோதரிகள் நால்வருக்கும் தனித்தனி வீடுகள் இருக்கின்றன. அதில் ஓர் ஏக்கர் கமலாவுடையது. 250-க்கும் அதிகமான ரோஜா மலர்கள் உட்பட பலவிதமான பூச்செடிகளுடன் மினி தாவரவியல் பூங்காவைப்போல அங்குள்ள தோட்டத்தை நிர்வகிக்கிறார் கமலா. “கொடைக்கானல் தோட்டத்துக்கு யாராச்சும் புதுசா வந்தாங்கன்னா, திரும்பிப்போக மனசே வராது. அவ்ளோ ரம்மியமா இருக்கும். கொடைக்கானல்ல ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடக்குறப்போ, சிறந்த வீட்டுத் தோட்டத்துக்கான முதல் பரிசை தொடர்ந்து பல வருஷமா என்னோட பூந்தோட்டம்தான் வாங்குது. மருத்துவத்துறைக்கு அடுத்தபடியா தோட்டப் பராமரிப்புல நான் அதிகமா அக்கறை காட்டுறதாலதான், இதைச் சாத்தியப்படுத்த முடியுது!” என்று பூரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism