கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

தேவ வாத்தியம் மானாமதுரை கடம்!

ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரமேஷ்

தொழில்

“முதல்ல ஒரு உருண்டை மண்ணு எடுத்து நாக்குலவெச்சு ருசி பார்ப்பேன்... உப்பு இருக்கக் கூடாது. உப்புத்தன்மை இருந்தா மண்ணு புடி கொடுக்காது...” - மண்ணின் ருசியையும் இயல்பையும் அவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் மண்பாண்ட கலைஞர் யூ.வி.கே.ரமேஷ். உலகெங்கும் இருக்கும் கடம் இசைக்கலைஞர்களுக்கு ரமேஷ் பெயர் பரிச்சயமானது. ரமேஷ் கைபட்டு உருவாகும் கடம், எல்லா ஸ்வரங்களுக்கும் பொருந்திப்போகும்.
தேவ வாத்தியம் மானாமதுரை கடம்!

சிவகங்கை மாவட்டத்தில் வைகைக் கரையோரம் இருக்கும் புண்ணிய நகரம் மானாமதுரை. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதுபோல மானாமதுரையிலும் அழகர் ஆண்டுதோறும் அருள்பாலிக்கிறார். மானாமதுரையில் மண்வளம், நீர்வளம் சிறப்பாக இருப்பதால் கை ஓடு, செங்கல் தயாரிப்பு, மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட மண்சார்ந்த தொழில்கள் நெடுங்காலம் தொட்டே நடந்துவருகின்றன. காலத்தி்ன் வேகத்தில் பல்வேறு நவீன பொருள்கள் வந்தாலும் பாரம்பர்யம் விரும்புபவர்கள், தற்போதும் மானாமதுரை பொருள்களை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். கார்த்திகை சுட்டி விளக்கு முதல் பிரமாண்ட சாமி சிலைகள் வரை மண்ணில் செய்து, வெளிநாட்டுப் பயணிகளையும் அசரவைத்துவருகின்றனர் மானாமதுரை மக்கள்.

தேவ வாத்தியம் மானாமதுரை கடம்!

மானாமதுரையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள குலாலர் தெருவில் பலரது வீடுகளுக்கு வெளியில் சின்னஞ்சிறு மண்பாண்ட பொருள்கள் காய்ந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

கடம் என்ற இசைக்கருவிக்கும் பேர்போனது மானாமதுரை. ரமேஷின் குடும்பம் பாரம்பர்யமாக கடம் தயாரித்துவருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளி்லுள்ள முக்கிய கடம் இசைக்கலைஞர்கள் பலரும் ரமேஷைத் தேடி வந்து தங்கள் வசதிக்கேற்ப கடம் வாங்கிச் செல்கின்றனர்.

ரமேஷ்
ரமேஷ்

“தொடக்கத்துல அஞ்சு குடும்பங்கள் மட்டும்தான் இந்த மண்பாண்ட தொழிலை நம்பியிருந்துச்சு. இப்போ 400 குடும்பங்களுக்கு மேல இந்தத் தொழில்ல இருக்காங்க. ஊரும், தண்ணியும் எங்களுக்கு உகந்ததா இருப்பதால உற்பத்தி பண்ற பொருள் நல்லாயிருக்கு. மானாமதுரை சுத்துவட்டாரத்துல இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள்ல தரமான மண் கிடைக்குது. அதைக் கொண்டுவந்துதான் மண்பாண்டப் பொருள்களைச் செய்றோம். எடுக்குற ஒவ்வொரு இடத்துலயும் உப்பு இல்லாம இருக்கான்னு ஒரு உருண்ட மண்ணை தின்னு பார்த்துதான் எடுப்போம்.

இந்தப் பகுதியில விதவிதமா மண்பாண்டங்கள் செஞ்சாலும் கடம் நாங்க மட்டும்தான் செய்றோம். இது பஞ்சபூதங்களையும் பயன்படுத்திச் செய்யிற கருவி. அதனால `தேவ வாத்தியம்'னு சொல்வாங்க. எங்க பாட்டனார் `உலக வேளார்’தான் இதை விதைபோட்டு ஆரம்பிச்சுவெச்சவர். அதுக்கப்புறம் தாத்தா வெள்ளச்சாமி வேளார், அப்பா கேசவன் எல்லாரும் இசை ஆர்வத்தால கடம் செஞ்சு குடுத்தாங்க. அதே ஆர்வத்துல எங்க அம்மாவும் கடம் செய்வாங்க. இப்போ நான் மட்டும் செய்றேன். தாத்தாவும் அப்பாவும் ஆர்மோனியம் உட்பட நிறைய இசைக்கருவிகளை வாசிப்பாங்க. எனக்கு இசையில் கேள்வி ஞானம்தான். அப்பா கடம் செய்யும்போது அதை வாங்க வர்ற கலைஞர்களிடம் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்.

ரமேஷ்
ரமேஷ்

இந்தியா முழுவதுமிருந்து நிறைய பேர் என்னிடம் கடம் வாங்குறாங்க. வெளிநாட்டுக் கலைஞர்கள் இதுக்காகவே என்னைத் தேடி மானாமதுரைக்கு வருவதுண்டு. கடம் செய்ய கண்டிப்பா இசை பற்றிக் கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அப்பதான் கலைஞர்களை திருப்திப்படுத்த முடியும். எனக்குப் பின்னாடி என் தங்கச்சி மகன் ஹரிகரன் இந்தத் தொழிலை விடாமச் செய்வான்னு நம்புறேன். அவன் இப்ப இசைக் கல்லூரியில் படிச்சுக்கிட்டே கடம் செய்யவும் கத்துக்கிறான்” என்கிறார் ரமேஷ்.

கடம் என்றால் நம் கண்முன் விரியும் பெயர் விக்கு விநாயக்ராம். அவர் ரமேஷ் குடும்பத்தின் பிரதான வாடிக்கையாளர். மானாமதுரை கடத்தை ஐ.நா சபைக்குக் கொண்டு சென்று வாசித்துக்காட்டி பெருமைப்படுத்தியவர்.

“கடம் கார்த்தி, சுரேஷ், உமாசங்கர், சுகன்யா ராம்கோபால்னு நிறைய கலைஞர்கள் குறிப்பிட்ட இடைவெளியில வந்து கடம் வாங்கிட்டுப் போவாங்க. எங்க அம்மா, மீனாட்சி, சிறந்த கலைஞர்ங்கிற அடிப்படையில ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் தேசிய விருது வாங்கியிருக்காங்க. எங்க அப்பா கேசவனும் முதலமைச்சர் விருது வாங்கியிருக்கார்.

இப்போ ஒரு கடம் 800 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை செய்றோம். கடம் கத்துக்க நினைக்கிறவங்களுக்கு விலை குறைவாவோ இலவசமாவோ கொடுக்கிறதும் உண்டு.

பார்க்க பானை மாதிரி இருந்தாலும் கடத்தை தட்டும் போது ஒலி மாற்றம் இருக்கும். பானையைவிட உறுதியா இருக்கணும். அப்பதான் கலைஞர்கள் எளிமையா இசைக்க முடியும். ஒவ்வொரு கடமும் 7 முதல் 9 கிலோ வெயிட் இருக்கும்.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்புனு பஞ்ச பூதங்களும் கடத்துல இருக்கு. அதனாலதான் இதை தேவ வாத்தியம்னு சொல்வாங்க. பக்க வாத்தியமா இருந்த கடம் இப்போ மூல வாத்தியமாவும் இசைக்கப்படுது. ஜலதரங்கம்போல் கடதரங்கமும் நடத்துவாங்க.

கடம் மட்டுமில்லாம, திருவிழாக் காலங்கள்ல தீச்சட்டி செய்வோம். கோடைக்காலத்துல கூஜா, பானையும் செய்வோம். கார்த்திகை மாசத்தில் விளக்கு செய்யறதுண்டு. எங்க அப்பா காலத்துல கோயில் கலசங்களைக்கூட மண்பாண்டத்துல செஞ்சு கொடுத்திருக்கார்...” என்கிற ரமேஷ், கடம் செய்முறையையும் விளக்குகிறார்.

ரமேஷ்
ரமேஷ்

“செய்குளத்தூர், குருந்தங்குளம், மஞ்சிகுளம், சுந்தர நடப்பு, கல்குறிஞ்சி உள்ளிட்ட ஊர்கள்ல எடுக்குற களிமண் கடத்துக்கு பொருத்தமா இருக்கும். அதுல வைகை ஆற்றுப்படுகையில கிடைக்கிற நைசான குறுமணல் எடுத்து சேர்த்துக்குவோம். குறிப்பிட்ட அளவுக்கு மண் எடுத்து வெயிலில் உலர்த்தி சேமிச்சுவெச்ச மழைத் தண்ணிவிட்டு பக்குவப்படுத்திக்குவோம். வலுவுக்கு கிராபைட், ஈயசெந்தூரம், அயாக்சைடு சேர்த்து மண்ணை பரோட்டோ மாவு மாதிரி பிசைவோம். ரெண்டு மூணு நாள் கழிச்சு திருகையிலவெச்சு கடம் சைஸுக்கு செஞ்சுருவோம். அதுக்கப்புறம் நாலு நாளைக்கு உள்கூடா கல்லுவெச்சு வெளிய கட்டையால தட்டுவோம். 2,000 அடியாச்சும் வாங்கிரும். அதுக்கப்புறம் பதினைஞ்சுல இருந்து இருபது நாள் வரைக்கும் நிழல் காய்ச்சல்ல இருக்கும். போதுமான அளவு காய்ஞ்சதும் சூளையில வேக்காட்டுக்கு போட்ருவோம்” என்கிறார் ரமேஷ்.

உலகெங்கும் தமிழிசையின், தமிழ் கலைநுட்பத்தின் பெருமையை உரக்க இசைத்துக்கொண்டிருக்கிறது மானாமதுரை கடம்.