அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“உயிர்ப்பலி கேட்குது... காவு வாங்கப்போகுது!” - போலீஸையே மிரட்டிய ஆரணி குடும்பம்

தசராபேட்டை கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
News
தசராபேட்டை கிராமம்

தவமணியின் பெரிய பையன் பூபாலன் சென்னையில போலீஸ் வேலை பார்க்கிறான். கூட வேலை செய்யுற பெண் ணையே காதலிச்சு, ஒரு வருஷத் துக்கு முன்னாடி கல்யாணமும் பண்ணிக்கிட்டான்

மூட நம்பிக்கையால் கேரளாவில் நடந்த இரட்டை நரபலிக் கொலைகள் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அப்படியொரு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு குடும்பம்!

நரபலி சர்ச்சை!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகிலிருக்கிறது தசராபேட்டை கிராமம். இந்தக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் வீடு தவமணி என்பவருடையது. இங்கே அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, மூன்று நாள்களாகக் கதவை உள்புற மாகப் பூட்டிக்கொண்டு பூஜை செய்திருக்கிறார்கள் தவமணி குடும்பத்தினர். வீட்டுக்குள்ளிருந்து திடீர் திடீரென விநோத சப்தங்கள் எழவே, பயந்துபோன ஊர் மக்கள், அந்த வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். ஆனால், உள்ளிருந்தவர்கள், ‘‘டேய், யாராக இருந்தாலும் ஓடிப்போயிடுங்க. வீட்டு முன்னாடி நிக்காதீங்க. ஆபத்து வருது. உயிர்ப்பலி கேட்குது. காவு வாங்கிடும்’’ என்று கத்தவே மொத்தப் பேரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

“உயிர்ப்பலி கேட்குது... காவு வாங்கப்போகுது!” - போலீஸையே மிரட்டிய ஆரணி குடும்பம்

இந்த நிலையில், அந்த வீட்டுக்குள் ‘நரபலி’ பூஜை நடப்பதாகத் தகவல் பரவியதையடுத்து ஆரணி தாசில்தார் ஜெகதீசன் தலைமையிலான வருவாய்த்துறையினரும், போலீஸாரும் வீட்டுக்குள் இருப்பவர்களை மீட்கும் முடிவில் ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் கதவை உடைத்தனர். அப்போதும் உடைக்கப்பட்ட கதவுக்கு முட்டுக்கொடுத்து, போலீஸாரை உள்ளே நுழையவிடாமல் வீட்டுக்குள் இருந்தவர்கள் தடுத்தனர்.

கையை நுழைத்த ஒரு காவலரையும் கடித்துவைத்தனர். ஒருகட்டத்தில் போலீஸாருடன் மல்லுக்கட்ட முடியாத அந்தக் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வீதிக்கு வந்து, ‘‘இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால், எல்லாம் முடிஞ்சிருக்கும். தப்பு பண்ணிட்டீங்களேடா... இவள், உங்களை சும்மாவிட மாட்டாள். பூஜையைத் தடுத்த மொத்தப் பேரையும் பழி தீர்ப்பாள்’’ என்று ஆக்ரோஷமாகக் கத்தினர். மிரட்சியடைந்த அதிகாரிகளும் போலீஸாரும், ‘‘அவர்கள் நரபலி கொடுக்கவில்லை. யாரையும் தொந்தரவும் செய்யவில்லை. வீட்டுக்குள்தான் பூஜை செய்திருக்கிறார்கள். ஆறு பேரை மீட்டுவிட்டதால், எங்கள் வேலையும் முடிந்து விட்டது’’ என்று கிளம்பிச் சென்றனர்.

பேய் வீடு... பயத்தில் கிராமம்!

இதையடுத்து கிராமத்தின் சூழலை அறிய கடந்த 16-ம் தேதி நாம் தசராபேட்டை கிராமத்துக்குச் சென்றோம். வீதிகள் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. அவரவர் வீடுகளிலிருந்து மட்டும் சிலர் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். நாம் நேராக தவமணி வீட்டுக்குச் சென்றோம். நாம் யாரென்ற விவரத்தைச் சொல்லி பேச முயன்றதும், ‘‘எல்லாம் முடிஞ்சுபோச்சு. நீங்க கிளம்புங்க’’ என்று கடுகடுத்து, உக்கிரமாக முறைத்துப் பார்த்தது தவமணியின் குடும்பம்.

இதையடுத்து ஊர் மக்களிடம் பேசினோம். ‘‘தவமணியின் பெரிய பையன் பூபாலன் சென்னையில போலீஸ் வேலை பார்க்கிறான். கூட வேலை செய்யுற பெண்ணையே காதலிச்சு, ஒரு வருஷத் துக்கு முன்னாடி கல்யாணமும் பண்ணிக்கிட்டான். இப்போ, அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த வாரம் மனைவியுடன் பூபாலன் வீட்டுக்கு வந்திருந்தான். அந்தச் சமயத்தில்தான் அவன் தங்கச்சி கோமதியும், அவள் கணவர் பிரகாஷும் வந்தனர். குடும் பமே யாரிடமும் பேசாமலிருந்த னர். அவர்களின் நடவடிக்கை யிலும் சந்தேகம் இருந்தது. காரணம் கேட்டதற்கு, ‘மகள் கோமதிக்கு பேய் பிடித்துவிட்ட தாகவும், மந்திரவாதி ஒருவரின் ஆலோசனையின்படி பேயை விரட்டப்போவதாகவும்’ கூறிக்கொண்டிருந்தனர். இதனால், நாங்கள் அச்சப்பட்டு அந்த வீட்டுப் பக்கம் போகாமலிருந்தோம்.

“உயிர்ப்பலி கேட்குது... காவு வாங்கப்போகுது!” - போலீஸையே மிரட்டிய ஆரணி குடும்பம்

திடீரென கதவைப் பூட்டிக்கொண்டு மந்திர பூஜை செய்யத் தொடங்கினர். கர்ப்பிணியாக இருந்த மருமகள், அவர்களிடமிருந்து தப்பித்து பதற்றத்தோடு வெளியே ஓடிவந்து, யாரிடமும் பேசாமல் சென்னைக்குச் சென்றுவிட்டார். வேறு ஏதோ திட்டத்துடன் பூஜை நடத்தியிருக்கிறார்கள். கதவை உடைத்த அதிகாரிகளே, வீட்டுக்குள் மாந்திரீகப் பொருள்கள் சிதறிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மஞ்சளும் குங்குமமும் கலந்த தண்ணீர் வீடு முழுவதும் தெளிக்கப்பட்டிருந்தது. மனதளவில் அந்தக் குடும்பத் தினர் பாதிக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்திருக்க வேண்டும். வேறு ஏதாவது நரபலி திட்டத்துடன் அவர்கள் பூஜை செய்திருந்தால், காவல்துறையினர் மூலம் சரியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இரண்டுமின்றி, ‘அம்போ’ என்று விட்டுச் சென்றதால், ஊர் மக்களான நாங்கள்தான் பயத்தில் இருக்கிறோம். அந்த வீட்டைப் பார்த்தாலே, எந்த நேரத்தில் என்ன மாந்திரீகம் செய்யப் போகிறார்களோ என்று குலை நடுங்குகிறது. அதனால் இருட்டி விட்டால் யாரும் வீட்டைவிட்டு வெளிவருவதில்லை’’ என்றனர் அச்சத்தோடு.

அரசு ஊழியர்களுக்கு ஆபத்து!

ஆரணி தாசில்தார் ஜெகதீசனிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘அந்தக் குடும்பத்தினர் வெறியில் இருக்கிறார்கள். மற்றபடி மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போலத் தெரியவில்லை. அந்த வீட்டில் ஒருவர் போலீஸ்காரர், இன்னொருவர் மின்வாரியத்துறை ஊழியர். கையில் கத்தி, கத்தரிக் கோல் வைத்து எங்களையே குத்தப் பார்த்தார்கள். மெடிக்கல் டீமை அனுப்பினால், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும். ‘மூன்று நாள் தவம் போச்சு. ஒரு மணி நேரம் டைம் கொடுத்திருந்தால் எல்லாத்தையும் முடிச்சிருப்போம்’ என்று அவர்கள் எங்களிடம் சொன்னபோதே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் ஆறப்போட்டு, காவல்துறையினர் உதவியுடன் அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து விசாரிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றுகிறது இந்தச் சம்பவம்!