Published:Updated:

“நமக்கும் நாலு பேரு இருக்காங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு!”

அஞ்சாஞ்சேரி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சாஞ்சேரி

இந்த அஞ்சாஞ்சேரிதான் ‘ஜெய்பீம்’ படத்தில் வரும் கோனைமலைக் குடியிருப்பு. படத்துல பாத்தீங்கல்ல... அதுதான் எங்க வாழ்க்க.

“நமக்கும் நாலு பேரு இருக்காங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு!”

இந்த அஞ்சாஞ்சேரிதான் ‘ஜெய்பீம்’ படத்தில் வரும் கோனைமலைக் குடியிருப்பு. படத்துல பாத்தீங்கல்ல... அதுதான் எங்க வாழ்க்க.

Published:Updated:
அஞ்சாஞ்சேரி
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சாஞ்சேரி

செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் மேல் எடையாளம் கிராமத்தின் எல்லையில், மலையடிவாரத்தில் இருக்கிறது அஞ்சாஞ்சேரி. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த புதர்க்காடாகப் பார்வைக்குப் படும் இந்தப் பகுதிக்கு மத்தியில் சிதைந்தும் உடைந்துமாக இருக்கின்றன 20 பனையோலைக் குடிசைகள்.

மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த இருளர் குடியிருப்பில்தான் ‘ஜெய்பீம்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் நடித்த பலரும் இந்தப் பகுதியைச் சுற்றி வாழும் இருளர் சமூக மக்கள்தான்.

தீபா
தீபா
சின்ராசு
சின்ராசு

‘ஜெய்பீம்’ படத்தின் நாயகர்களை அவர்களின் ஊரிலேயே சென்று சந்தித்தோம். கிராமத்திலிருந்து விலகி வேலிக்கருவை மரங்களுக்குள் மறைந்திருக்கும் சாலையில் நுழைந்தால் மெல்லக்குறுகி அது ஒற்றையடிப் பாதையாக மாறுகிறது. அடைமழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, கரம்பற்றி அந்தப்பக்கம் அழைத்துச்செல்கிற சின்ராசுதான் ‘ஜெய்பீம்’ படத்தில் காவல் வன்முறைக்கு உள்ளாகிற மூவரில் ஒருவரான இருட்டப்பன்.

‘‘இந்த அஞ்சாஞ்சேரிதான் ‘ஜெய்பீம்’ படத்தில் வரும் கோனைமலைக் குடியிருப்பு. படத்துல பாத்தீங்கல்ல... அதுதான் எங்க வாழ்க்க. அப்படியே ரத்தமும் சதையுமா எடுத்திருக்காங்க’’ என்கிற சின்ராசிடம் படத்தில் நடித்ததைப் பற்றிக் கேட்டால் முகத்தில் பெருமிதம் ததும்புகிறது.

ஜெய்பீம் படத்தில் நடித்த இருளர் நடிகர்கள்
ஜெய்பீம் படத்தில் நடித்த இருளர் நடிகர்கள்
 “நமக்கும் நாலு பேரு இருக்காங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு!”
 “நமக்கும் நாலு பேரு இருக்காங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு!”

‘‘இப்பவரைக்கும் என்னால நம்பமுடியல சார். எங்கூரு, பக்கத்துல இருக்குற பழம்பூண்டி. செங்கல் அறுக்கிறது, மரம் வெட்டுறதுன்னு கெடைக்கிற வேலைக்குப் போவேன். ஊருக்கு ஒதுக்குப்புறமா பதினோரு குடும்பங்கள் இருக்கு. காதலிச்சுக் கல்யாணம் கட்டியிருக்கேன். எனக்கும் ஒரு கல்லு வீடு கட்டுறதுதான் பெரும் கனவா இருக்கு. எங்க சங்கத்தில இருந்து சினிமாவுல நடிக்கிறதுக்கு ஆர்வமுள்ளவங்களைக் கூப்பிட்டாங்க. ஏதோ கூட்டத்துல நிக்க வைக்கத்தான் கூப்பிடறாங்கன்னு நெனச்சேன். ஆனா ‘முக்கியமான மூணு பேர்ல நீ ஒருத்தன்’னு சொன்னாங்க. இதுமாதிரி ஒரு சினிமாவுல நடிப்போம்னு கனவுலகூட நெனச்சுப் பாக்கல. ‘எனக்கு நடிக்க வராது’ன்னு சொன்னேன். ‘நீ இப்ப எப்படி இருக்கியோ அப்படியே இரு, போதும்’னு சொல்லிட்டாங்க. எங்களுக்காகத்தான் இந்தப் படத்த எடுக்கிறாங்க. இதுக்காக உசுரையே கொடுக்கலாம்னு தோணுச்சு.

எங்கூர்ல மத்தவங்க எங்களைப் பாத்தா ஓரடி தள்ளிப் போயிருவாங்க. இங்க எங்கள அப்படியே அரவணைச்சுக்கிட்டாங்க. விதத்துக்கு ஒரு சாப்பாடு, தங்குறதுக்கு ரூம்னு அப்படி பாத்துகிட்டாங்க’’ என்கிற சின்ராசு, காவல் சித்திரவதை பற்றிப் பேசினால் மிரண்டுதான் போகிறார்.

கீதா
கீதா
காவேரி - தேவசேனா
காவேரி - தேவசேனா

‘‘நடிக்கும்போது தெரியல, படத்துல பாக்கும்போது பயமா இருக்கு. ஒருமுறை போலீஸ்காரங்க என்னை அடிக்கும்போது லத்தில இருந்த கம்பி பட்டு நெத்தியில ரத்தம் வந்துருச்சு. இயக்குநரும், அடிச்ச போலீஸ்காரங்களும் பதறிட்டாங்க. எல்லோரும் சுத்தி நின்னு மருந்துபோட்டு ரெஸ்டு எடுக்க அனுப்பிட்டாங்க. கருணையோடவும் கனிவோடவும் எங்கள பாத்துக்க இவ்வளவு பேரு இருக்காங்கன்னு நெனக்கிறப்போ கண்ணீர் வருது’’ நெகிழ்கிறார் சின்ராசு.

நல்லான் பிள்ளை பெற்றாள் கிராம இருளர் குடியிருப்பைச் சேர்ந்த தீபா, இருட்டப்பனுக்கு மனைவியாக நடித்தவர். அத்தனை இயல்பாக நடித்திருக்கும் தீபா பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

‘‘கண்ணீர், கஷ்டமெல்லாம் எங்களுக்குப் புதுசில்லை. ஊருக்கு வெளியில எங்க குடியிருப்பு. பைப்புக்குத் தண்ணீர் புடிக்கப் போனா மத்தாளுக புடிக்கிற வரைக்கும் கிட்ட போக முடியாது. சமீபத்தில கூட தண்ணீர் புடிக்கப் போனப்ப என்னை அடிச்சிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன் போனா சமாதானப் பேச்சுதான் நடத்துறாங்களே ஒழிய, வழக்குப்பதிவு செய்யல. நாங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற கொடுமைகள அப்படியே ‘ஜெய்பீம்’ படத்துல காட்டியிருக்காங்க’’ என்கிற தீபா டிக்டாக்கில் பிரபலமாம்.

‘‘நிறைய வீடியோ போட்டுருக்கேன். ஆனா சினிமாவுல நடிப்பேன்னு நெனச்சுக்கூட பாத்ததில்ல. ஆரம்பத்துல ரொம்ப தயக்கமாக இருந்துச்சு. லிஜோமோல் அக்கா, மணிகண்டன் மாமான்னு எல்லோரும் ஒரு குடும்பமா ஆயிட்டோம். ரெண்டு வருஷம் போனதே தெரியல. சினிமாவுல நடிக்கணும்னு சொன்ன உடனே ‘அதெல்லாம் வேண்டாம்’னு எங்க உறவுல சில பேர் சொன்னாங்க. ஆனா என் கணவர்தான் ‘நீ போ, நான் பாத்துக்கிறேன்’னு அனுப்பி வச்சார். அவருக்குத்தான் நன்றி சொல்லணும்’’ - கண் கலங்குகிறார் தீபா.

தீபாவின் மகள் மூன்று வயது ஹாசினியும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இருட்டப்பனைக் காவலர்கள் அடித்து இழுத்துச்செல்லும்போது தீபா கதறி அழுவார். அவர் பின்னாலேயே அழுதபடி செல்வார் ஹாசினி. அந்தக் காட்சி காண்போரைக் கலங்க வைக்கும்.

சரசு
சரசு
ராஜு
ராஜு
அஞ்சாஞ்சேரி இருளர் குடியிருப்பு
அஞ்சாஞ்சேரி இருளர் குடியிருப்பு

வன்முறைக்கு உள்ளாகும் மூவரில் மொசக்குட்டியின் மனைவியாக நடித்தவர் காவேரி. போந்தை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த காவேரியின் குடும்பம் செங்கல் சூளையில் வேலைசெய்கிறது.

‘‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே எனக்குக் கல்யாணம் ஆயிருச்சு. செங்கல் சூளையில அட்வான்ஸ் வாங்கிட்டு குடும்பத்தோட தங்கி வேலை செய்வோம். ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தப்போ சில பேரு வந்து போட்டோ எடுத்தாங்க. திரும்பவும் நாங்க சூளைக்குப் போயிட்டோம். திடீர்னு ஒருநாள் ஊர்ல இருந்து போன் பண்ணி ‘நீ சினிமாவுல நடிக்க செலக்ட் ஆகிட்டியாம், உடனே கெளம்பி வா’ன்னு கூப்பிட்டாங்க. நாங்க அப்பதான் சூளையில அட்வான்ஸ் வாங்கியிருந்தோம். அதனால சினிமால்லாம் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா என் கணவர்தான், ‘நாம ஆசப்பட்டாகூட கெடைக்காத வாய்ப்பு உனக்குக் கெடச்சிருக்கு. தயங்காமப் போ’ன்னு அனுப்பி வச்சாரு. சூரி மாஸ்டர், மணி அண்ணால்லாம் சொந்தக்காரங்க மாதிரி பாத்துக்கிட்டாங்க. ஊருக்குள்ள மத்தவங்க எங்கள நிமிந்து பாத்துக்கூடப் பேசினது இல்ல. இப்போ எல்லோரும் ‘நீயா அது’ன்னு ஆச்சரியப்படுறாங்க’’ விழிவிரியப் பேசுகிறார் காவேரி.

மொசக்குட்டியைக் காவல்துறை அழைத்துச்செல்லும்போது உண்மையாகவே காவேரி கதறி அழ, அவரது குட்டி மகள் தேவசேனாவும் அழுதுகொண்டே அம்மாவின் பின்னால் ஓடியிருக்கிறாள். அதையும் காட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

சரசுவும் போந்தை இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்தான். இவரை பட யூனிட்டே ‘புரொபசர்’ என்றுதான் அழைத்திருக்கிறது. லிஜோ, மணிகண்டனின் சகோதரியாக நடித்துள்ள சுமித்ரா என்று பலருக்கும் இருளர் உடல்மொழியைக் கற்றுத்தந்தவர் இவர்தான்.

‘‘இங்க இருக்கிற யாருகிட்ட பேசினாலும் கண்ணீரோட சொல்ல ஒரு கதை இருக்கும். குனிஞ்சு குனிஞ்சே எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு முதுகு வளைஞ்சுபோச்சு. படத்துல சூர்யா சாரும் பிரகாஷ்ராஜ் சாரும் எங்க கஷ்டத்தக் கேக்க வருவாங்க. அவங்ககிட்ட எங்காளுங்க சொல்ற செய்திகள் எல்லாமே நூறு சதவிகிதம் உண்மை. திருக்கோவிலூர் சுப்பிரமணியம் அண்ணன செய்யாத திருட்டுக் குற்றத்துக்காக ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் உயிர் போற மாதிரி அடிச்சிருக்காங்க. அவரோட கதையதான் படத்துல நான் சொல்லுவேன். இந்தப் படம் மூலமா நாங்க பட்ட கஷ்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கு’’ என்கிறார் சரசு.

ராஜாகண்ணு, இருட்டப்பன் இருவருக்கும் மாமாவாக நடித்திருப்பவர் ஆனாங்கூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ராஜு. ‘‘வழக்கமா வெறகு உடைக்கப் போவேன். செங்கல் சேம்பர்லயும் வேலை செய்வேன். இந்தப் படத்துல நடந்ததுதான் எங்க வாழ்க்கையிலும் நடந்திருக்கு. ஓடி ஓடி ஒளிஞ்சே எங்க வாழ்க்கையில பாதி கழிஞ்சிருச்சு’’ என்கிறார் அவர்.

கீதாவும் ஆனந்தியும் இதே அஞ்சாஞ்சேரியைச் சேர்ந்தவர்கள். ஊதாம்பானையை வைத்து எலி பிடிப்பது முதல் காவல் வன்முறைக் காட்சிகள் வரை படம் முழுக்க வந்துபோகிறார்கள் இருவரும்.

‘‘சுத்திலும் ஓடைக்கு நடுவுல இருந்தாலும் சுடுகாட்டுலதான் போயி தண்ணி பிடிக்கணும். இங்கதான் இப்படின்னா நான் வாக்கப்பட்டுப் போன வணக்கம்பாடியில வேற கொடுமை. அங்க மொத்தமே நாங்க ஆறு குடும்பம்தான். பக்கத்துலதான் தண்ணி டேங்க். அதைப் போடறதும் அணைக்கிறதும்கூட நாங்கதான். ஆனா நாங்க தண்ணி பிடிக்க முடியாது. பட்டா வேணும்னு மனு கொடுத்தா அதிகாரிங்க வந்து விசாரிப்பாங்க. அத பாத்துட்டு ஊர்க்காரங்க ‘உங்கள பாக்க அதிகாரிங்கள்லாம் வராங்க. அந்த அளவுக்கு ஆளாகிட்டீங்களா? இடத்த காலிபண்ணுங்க’ன்னு கூரைய பிய்ச்சுப் போடுவாங்க. எங்க மாமனார் இறந்தப்ப பிணத்தைக் கொண்டு போக விடாம ரோட்டுலேயே நிறுத்திட்டாங்க. இப்ப படத்துல நடிச்சபிறகு, நமக்கும் நாலு பேரு இருக்காங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு’’ என்று வழியும் கண்ணீரைத் துடைக்கிறார் கீதா.

தொடக்கக் காட்சியில் சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் சிறைக்குச் செல்லும் பழங்குடி இளைஞர்கள், ராஜாமணிக்கு இறுதிச்சடங்கு செய்யும் கன்னியம்மா பூசாரி, சூளையில் ராஜாகண்ணுவை வம்பிழுக்கும் பாட்டி, கலாய்க்கும் பெரியவர், செங்கல் சூளை மேஸ்திரி என நினைவில் நிற்கும் முகங்கள் பல என் முன் இருக்கின்றன. புறக்கணிப்பு, அலைக்கழிப்பு, மிரட்டல், அவமானம், தாக்குதல் என அவர்கள் பெருந்துயர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘ஜெய்பீம்’ படம் அவர்கள் நிமிர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்த உரையாடல் உணர்த்தும் செய்தி இதுதான்.