Published:Updated:

பழனி உட்பட 7 இடங்கள்... அமலுக்கு வரவிருக்கும் `வழிபாட்டுத் தல பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’

ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி
ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கப் புதிய திட்டம் ஒன்று நடைமுறைக்கு வர உள்ளதாகத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி சிறார் வதைக்கு ஆளாகி, பிரசவத்தின்போது உயிரிழந்தது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

Child crime
Child crime

இந்நிலையில், ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (07.05.2021) தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய ஆணையத் தலைவர் சரஸ்வதி, ``சிறுமி பிரசவத்தின்போதுதான் இறந்துள்ளார். சிறுமி கர்ப்பமுற்றது பாலியல் வன்கொடுமையால் இல்லை. சிறுமி காதல் விவகாரத்தினாலே கர்ப்பம் தரித்துள்ளார். டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய உள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க புதிய திட்டம் ஒன்று நடைமுறைக்கு வர உள்ளது. பழனி முருகன் கோயில், கோவை மருதமலை முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா ஆகிய ஏழு வழிபாட்டுத் தலங்களில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம், வழிபாட்டுத் தலங்களில் பெண் குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது தடுக்கப்படும்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)

பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதமே இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு