Published:Updated:

“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா ஆண்ட்ராய்டு போன்!” - பாலியல் டார்ச்சரால் கதறும் சிறுமி

சிறுமி
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுமி

காப்பாற்றுமா காவல்துறை?

``சார்... நான் ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ட். திருவொற்றியூர்ல இருக்குற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கிறேன். கொரோனா காலத்துல குடும்பக் கஷ்டம் அதிகமாகிடுச்சு. அப்பாவுக்கும் வேலையில்லை. அதனால என்னைத் தவறான வழிக்கு எங்கம்மா போகச் சொல்றாங்க. போலீஸ்ல புகார் கொடுத்தாலும் ஏத்துக்க மாட்டேங்கறாங்க.” - அடிபட்ட பறவையைப்போலிருந்த அந்தச் சிறுமி, கண்களில் கண்ணீர் ததும்பப் பேசியதைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.

அந்தச் சிறுமியை நம்மிடம் அழைத்துவந்தார் குழந்தைகள்நலச் செயற்பாட்டாளர் ஷெரின் போஸ்கோ. “என்ன நடந்தது?” என்று கேட்டோம். தயங்கியபடியே பேசினார் சிறுமி. “எங்க அப்பா வெங்கடேசன் பொழுதன்னிக்கும் குடிச்சிட்டு வந்து படுத்துக் கெடப்பாரு. வீட்டுல என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல அக்பர் என்பவர் குடிவந்தார். அவருக்குக் கல்யாணமாகி மூணு குழந்தைகள் இருக்காங்க. அவர் எங்கம்மாகிட்ட பேச ஆரம்பிச்சார். அம்மாவும் அவர்கிட்ட பழகினார். கொஞ்ச நாள்ல பாரிமுனையில இருக்குற முனி என்பவரிடம் அம்மாவை அறிமுகப் படுத்தியிருக்கார் அக்பர்.

ஒருநாள் அப்பா வீட்டுல இல்லை. நான் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தப்போ, அக்பரும் அம்மாவும் தப்பான கோலத்துல இருந்தாங்க. அதிர்ச்சியடைஞ்ச நான் சத்தம் போட்டதும் அக்பர் ஓடிட்டார். அம்மாவும் என்கிட்ட, ‘இதை வெளியே சொன்னா கொன்னுருவேன்’னு மிரட்டினாங்க. அன்னிலருந்து என் நிம்மதியே போச்சு. அழுகையா வந்துச்சு.

கடந்த ஜூலை மாசம் அக்பர் எங்க வீட்டுக்கு வந்தார். அம்மாகிட்ட, `உன் பொண்ணைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். ஏன் அவ வர மாட்டேங்கறா?’னு அதட்டலா கேட்டார். அதுக்கு அம்மா, `எவ்வளவு கூப்பிட்டாலும் வர மாட்டேங்கறா. அவளைத் திட்டியும் பார்த்துட்டேன்; அடிச்சும் பார்த்துட்டேன்’னு சொன்னாங்க. எனக்குக் கடுமையான கோபம் வந்துருச்சு. எதையும் சொல்லாம அழுதுக்கிட்டு இருந்தேன். இதுக்கு நடுவுல அக்பர்கிட்ட அம்மா பழகுறதைவெச்சு, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தினமும் சண்டை வரும்.

ஆகஸ்ட் மாசம் 5-ம் தேதி காலையில அக்பர், அம்மாவுக்கு போன் பண்ணிப் பேசினார். அம்மா போனை என்கிட்ட கொடுத்தார். அப்போ அக்பர், `உங்க அம்மா சொல்றதைக் கேட்க மாட்டியா... என்ன ஓவரா பண்ற... பாரீஸுக்கு வா... உனக்கு 40,000 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர்றேன். புது டிரெஸ் எடுத்துத் தர்றேன்’னு சொன்னார். பதிலுக்கு நான், `நீ ஒண்ணும் வாங்கித் தர வேண்டியதில்லை’னு சத்தம் போட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். உடனே அம்மாவும் என்கிட்ட, `நீ ராணி மாதிரி இருக்கணும்னா நான் சொல்றதைக் கேளு’னு சத்தம் போட்டார்.

அம்மாவோட தொல்லை அதிகமாகவே, அப்பாவை அழைச்சுக்கிட்டுப்போய் திருவொற்றியூர் மகளிர் போலீஸில் புகார் கொடுத்தோம். அங்கே எங்க புகாரைக் கண்டுக்கவே இல்லை. அதனால செப்டம்பர் 17-ம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்தோம். செப்டம்பர் 23-ம் தேதி ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டாங்க. அங்கே அக்பரும் வந்தார். அங்கேவெச்சு, `நான்தான் இந்தப் பொண்ணுக்கு ஃபீஸ் கட்டினேன்’னு பொய் சொன்னார். எங்க அம்மாவும், `என் பொண்ணு ஸ்கூல்ல 10 பேரை லவ் பண்ணுது’னு வாய் கூசாம பொய் சொன்னாங்க. இன்ஸ்பெக்டர் சுகுணா மேடம் அவங்க பேச்சை நம்பி, என் புகாரை விசாரிக்கவே இல்லை.

இதனால நொந்துபோன நான் அக்டோபர் 2-ம் தேதி கமிஷனர் ஆபீஸுக்கு ஆன்லைனில் புகார் பதிவு பண்ணினேன். திரும்பவும் ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டாங்க. மறுபடியும் புகாரை எழுதி வாங்கினவங்க, இப்போ வரைக்கும் விசாரணை நடத்தலை. இப்பவும் அக்பர் எனக்கு டார்ச்சர் கொடுத்துட்டு இருக்கார். நான் சின்னப் பொண்ணு... இதுக்கு மேல என்னால என்ன பண்ண முடியும்?” என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழத் தொடங்கினார்.

மாணவியின் தாய் தேவியிடம் பேசினோம். ``அது விவரம் தெரியாத குழந்தை. சில பேர் சொல்லிக் கொடுத்து, அது பொய் பேசுது. நாங்க ரொம்ப வறுமையில இருக்கோம். என் புருஷன் குடிக்கு அடிமையாகி ரோட்டுலயே விழுந்து கிடப்பார். திருவொற்றியூர்ல என் மாமனாருக்குச் சொந்தமான வீட்டை அபகரிக்கிறதுக்காக என் புருஷனோட உறவினர்கள் சிலர் இப்படியெல்லாம் பேசவெக்கிறாங்க. அக்பர் நிறைய பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கான். அவன்கூட என்னைச் சேர்த்துவெச்சு என் வீட்டுக்காரர் பேசுறார். வீட்டு வேலைக்குப் போனேன். அதுக்கும் புகார் கொடுத்து என்னை அசிங்கப்படுத்திட்டாங்க. நான் அப்படிப்பட்ட பொம்பளை கிடையாது. அக்பரும் முனியும் ரொம்ப நல்லவங்க” என்றார்.

மாணவியின் தந்தை வெங்கடேசனோ, ``என் மனைவி சொல்றது பொய். இவ்வளவு நாளா வீட்டுல என்ன நடந்ததுனு எனக்கு லேட்டாத்தான் தெரியவந்துச்சு. அதான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா ஆண்ட்ராய்டு போன்!” - பாலியல் டார்ச்சரால் கதறும் சிறுமி

அக்பரிடம் பேசினோம். ``தேவி எனக்கு அக்கா மாதிரி. அவங்களோட வீட்டுக்காரர் தினமும் குடிச்சுட்டு வருவார். அதனால அந்தக் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டுச்சு. நான் கொஞ்சம் உதவி செஞ்சேன். `போன் வாங்கித் தர்றேன், டிரெஸ் வாங்கித் தர்றேன்’னுல்லாம் சொல்லலை. ஒருநாள், `உன் பொண்ணு, பையனைக் கூட்டிட்டு வா. முனி சார்கிட்ட பணம் வாங்கித் தர்றேன்’னு சொன்னேன். இதைத் தவிர தவறாக நான் வேற எதுவும் பேசலை” என்றார்.

முனியை நேரில் சந்தித்துப் பேசினோம். ``என்னிடம் உதவி கேட்டு வருகிறவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன். ஒருநாள் அந்தப் பெண்ணின் குடும்பம் பற்றி அக்பர் சொன்னார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் அம்மாவும் பாட்டியும் ஆபீஸுக்கு வந்து, `குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டப் பணமில்லாம தவிக்கிறோம்’னு சொன்னாங்க. நான் 2,000 ரூபாய் கொடுத்துவிட்டேன். இப்போது சம்பந்தமே இல்லாமல் என்மீது புகார் சொல்கிறார்கள்” என்றார்.

திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணாவிடம் பேசினோம். ``மாணவி கொடுத்த புகாரின் பேரில் அனைவரிடமும் விசாரித்தேன். அந்தப் பெண்ணின் அம்மாவை, `அக்கா’ என்றுதான் அக்பர் கூப்பிடுகிறார். அந்த மாணவிதான் மாற்றி மாற்றிப் பேசுகிறார். முனி என்பவர், மாணவர்களின் கல்விக்காக உதவக்கூடியவர். அவர் இந்தப் பெண்ணின் பெற்றோரிடம், `குடும்பத்தோட வந்து உதவி கேளுங்க’ என்று கூறியதை, அந்த மாணவி திரித்துக் கூறிவிட்டார். மாணவி கொடுத்த புகார் தவறானது” என்றார். இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு துணை ஆணையர் ஜெயலட்சுமி யிடம் எடுத்துக் கூறினோம். பொறுமையாக விவரங்களைக் கேட்டுக் கொண்டவர், “இது தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

ஷெரின் போஸ்கோ - ஜெயலட்சுமி
ஷெரின் போஸ்கோ - ஜெயலட்சுமி

மாணவிக்காகச் சட்ட உதவிகளை மேற்கொண்டுவரும் குழந்தைகள்நலச் செயற் பாட்டாளரான ஷெரின் போஸ்கோ, “கொரோனா கால கட்டத்தில் இந்த மாணவியின் குடும்ப வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் பாலியல்ரீதியாக டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். போக்சோ சட்டப்பிரிவு 18, `குற்றம் நடக்க வேண்டும் என்றில்லை. அதற்கான முயற்சி நடந்தாலே அது குற்றம்தான்’ என்கிறது. ஒரு மைனர் பெண் காவல்நிலையத்துக்கே போய், ‘என் அம்மா தவறாகப் போகச் சொல்கிறார்’ என்று கதறியபோதும் பெண் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்சோ சட்டப்பிரிவு 21-ல் இடமிருக்கிறது. சிறுமி விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால், நீதிமன்றம்தான் ஒரே தீர்வு” என்றார் உறுதியாக.

மைனர் வயதுடைய சிறுமியொருவர் துணிச்சலாகக் காவல்நிலையத்தின் படியேறுவதே பெரிய விஷயம்... அப்படி வருபவர்களை உதாசீனப்படுத்தினால், அதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை. ஒருவேளை பாலியல் கொடுமை நடந்தால்தான், நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லவருகிறார்களா அல்லது தங்கள் வீட்டு பெண் பிள்ளைக்கு இப்படி நடந்தால், இதேபோல்தான் நடந்துகொள்வார்களா?