Election bannerElection banner
Published:Updated:

வயிற்றுவலியால் உயிரிழப்பு - தவறான சிகிச்சை காரணமா? சிவகங்கையில் தொடரும் மரணங்கள்

உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகார்
உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகார்

மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஏரியூரை அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி செல்லப் பிரியா பிப்ரவரி 3-ம் தேதி தலை பாரமாக இருக்கிறதென்று மதகுப்பட்டியிலுள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார் அவரது கிளினிக்கில் தலைவலிக்கு சிகிச்சை அளித்து, மூன்று ஊசிகள் போட்டிருக்கிறார். ஊசி போட்ட சில நிமிடங்களில் செல்லப்பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.

சிவகங்கை நகர் காவல் நிலையம்
சிவகங்கை நகர் காவல் நிலையம்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மாதம் கடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியிருக்கிறது. சிவகங்கை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். டூ வீலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும், இவருக்கு திவ்யஸ்ரீ என்ற மகளும், கதிர்வேல் என்ற மகனும் இருக்கிறார்கள்.

திவ்யஸ்ரீ சிவகங்கையில் 11-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், நேற்று காலை சுமார் 11:30 மணியளவில் இவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து திவ்யஸ்ரீயை அவருடைய தந்தை கணேசன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரம்புகள் மூலம் ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. திவ்யஸ்ரீக்கு ஊசி போட்ட சில நிமிடங்களில், அவர் சுயநினைவு இழந்து, மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகார்
உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகார்

ஆனால், அரசு மருத்துவமனையில் சோதித்தபோது, திவ்யஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் தங்கள் மகள் திவ்யஸ்ரீ மரணத்துக்கு, மருத்துவர்தான் காரணம் என சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு