சினிமா
தொடர்கள்
Published:Updated:

நிராகரிப்பவரை நிரந்தரமாக அழிப்பதல்ல காதல்!

நிராகரிப்பவரை நிரந்தரமாக அழிப்பதல்ல காதல்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிராகரிப்பவரை நிரந்தரமாக அழிப்பதல்ல காதல்!

இன்று ஆண்-பெண் உறவு மிகவும் இளைய வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சிகரெட் பிடிப்பவனை, முரட்டுத்தனமான ஆண்களை சினிமாக்கள் ஹீரோக்களாக்குகின்றன.

ரயிலேறக் காத்திருந்த அத்தனை பயணிகளும் பதறிப்போனார்கள். கண் முன்னால் அந்த இளம்பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு, குற்ற உணர்வே இல்லாமல் அந்த இடத்திலிருந்து தப்பித்திருக்கிறான் ஓர் இளைஞன். காதல் கொலைகளின் பட்டியலில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது.

காதல் நிராகரிப்பால் நிகழும் கொலைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பேஷினா, சூளைமேடு சுவாதி, திருச்சி மோனிஷா, கோவை தன்யா, மதுரவாயல் அஸ்வினி வரிசையில் இப்போது ஆதம்பாக்கம் சத்யபிரியா. இந்தியாவில் கொலைக்கான முக்கிய நோக்கங்களில் காதல் மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2020-ல் மட்டும் காதல் காரணமாக மூன்றாயிரத்துக்கும் அதிகமான கொலைகள் நடந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது.

பரஸ்பர நம்பிக்கையிலும் புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் துளிர்க்கும் காதல் இப்படிக் கொலையில் முடிவது ஏன்? எந்தப் புள்ளியில் இந்தக் கொடூர முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்? நேற்றுவரை தன்னை நேசித்த ஒரு பெண்ணை ரயிலில் தள்ளித் துள்ளத்துடிக்கக் கொன்றுவிட்டுப் புன்முறுவலோடு ஓர் இளைஞனால் எப்படி நடக்கமுடிகிறது..?

‘‘இதுமாதிரியான சம்பவங்களுக்குப் பல கோணங்கள் உண்டு. இன்றுள்ள இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்கள். நிதானமோ, பொறுமையோ, பக்குவமோ, சகிப்புத்தன்மையோ அவர்களிடம் இல்லை. காரணம், அவர்கள் வளரும் விதம். நியூ ஏஜ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மிகவும் பாதுகாப்பாகப் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். எந்தப் பிரச்னையும் பிள்ளைகளை பாதித்துவிடாதவாறு தாங்களே அரணாக நின்றுகொள்கிறார்கள். தோல்வியோ, ஏமாற்றமோ பழகாமல் பிள்ளைகள் வளர்கிறார்கள். அதன் விளைவு, சமூகத்தில் தோல்வியையோ, ஏமாற்றத்தையோ எதிர்கொள்ளும்போது விபரீதமான எல்லைக்குச் சென்றுவிடுகிறார்கள். இன்றுள்ள இளைஞர்களால் உணர்வுபூர்வமான எந்த விஷயத்தையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை...’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

நிராகரிப்பவரை நிரந்தரமாக அழிப்பதல்ல காதல்!

‘‘இன்று ஆண்-பெண் உறவு மிகவும் இளைய வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சிகரெட் பிடிப்பவனை, முரட்டுத்தனமான ஆண்களை சினிமாக்கள் ஹீரோக்களாக்குகின்றன. அதைப் பார்க்கிற வளர் இளம் பருவத்துப் பெண்கள், இயல்பு வாழ்க்கையில் அதேமாதிரி இளைஞர்கள்மீது வயப்படுகிறார்கள். அந்த ஆண் எப்படிப் பழகுகிறான், பிறருக்கு எப்படி மரியாதை கொடுக்கிறான் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எப்படி பைக் ஓட்டுகிறான், எப்படி சிகரெட் பிடிக்கிறான் என்பதுதான் ஈர்ப்புக்கான காரணி. பின்னால் அவனிடமிருந்து விலகிப்போக நினைக்கும்போது, அவனுடைய இயல்பான குணம் வெளிப்படுகிறது’’ என்கிறார் அவர்.

நம் குடும்பக் கட்டமைப்பில் இருக்கும் ஆணாதிக்க மனோபாவமும் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் சிவபாலன்.

‘‘நம் குடும்பக் கட்டமைப்பே பெண்களின் உணர்வுகளை மதிக்காத வகையில்தான் செயல்படுகிறது. ‘பெண்களுக்கு முடிவெடுக்கத் தெரியாது, அவர்களின் முடிவையும் நாம்தான் எடுக்கவேண்டும்' என்று ஆண்கள் நினைக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் வளரும் ஓர் இளைஞன், வெளியில் வரும்போது தன் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தனிப்பட்ட அவமானமாகக் கருதி விரக்திக்குள்ளாகிறான். இவளைத் தட்டி வைக்கவேண்டும் என்று கருதுகிறான். ‘அதற்காக எந்த எல்லைக்கும் போகலாம், தவறில்லை’ என்று நம் குடும்ப அமைப்பு போதித்திருக்கிறது.

இன்றுள்ள சினிமாக்கள், பெண்களைப் பின்தொடர்வதை நியாயப்படுத்துகின்றன. நிராகரிக்கும் பெண்ணின் பின்னால் அலைந்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் மனமிரங்கிக் காதலித்துவிடுவாள் என்று போதிக்கின்றன. அதைப் பார்க்கிற இளைஞர்கள் அதை உண்மையென்று நம்புகிறார்கள். அவர்களுக்கு அது குற்றம் என்று புரிவதில்லை. ‘அடிடா அவளை', ‘குத்துடா அவளை', ‘கொல்றா அவளை' என்றெல்லாம் பாடல்கள் எழுதுகிறார்கள். அந்தப் பாடல்கள் ஹிட் ஆகின்றன. நம் சமூகத்தில் இதெல்லாம் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன.

மொத்தமாகப் பார்த்தால் இது, விழுப்புரம் செந்தில், ராமநாதபுரம் உதயகுமார், தூத்துக்குடி கீகன், மதுரவாயல் அழகேசன், ஆதம்பாக்கம் சதீஷின் பிரச்னை மட்டுமல்ல, நம் சமூகத்தின் பிரச்னை. சமூகத்தில் பெண்களுக்கு எதிரான எண்ணங்களே மிகுந்திருக்கின்றன. ஒரு பெண்ணைத் துன்புறுத்துவது சாதாரணமாக நடக்கிறது. அதைப் பார்த்து வளரும் இளைஞன், சினிமாக்கள், மீடியாக்கள் ஏற்படுத்துகிற உத்வேகத்தால் மேலும் தூண்டப்படுகிறான்.

சத்யாவை ரயிலில் தள்ளிவிட்ட சதீஷ் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து தப்பித்திருக்கிறான். சதீஷை ஒட்டுமொத்த இளைஞர்களின் உதாரணமாகச் சொல்லமுடியாது. ஆனால், சதீஷ் போன்ற இளைஞர்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர வேணடும்.

இன்று உறவுகளே மிகவும் மேலோட்டமாகத்தான் இருக்கின்றன. இன்று சேருவதும் எளிது. பிரிவதும் எளிது. பெண்ணிடம் பேசுவதும் பழகுவதும் அன்பின் வெளிப்பாடாக இல்லாமல் மதிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது. முழுமையான புரிதலில் அது தொடங்குவதோ நிறைவுறுவதோ இல்லை. ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வதுமில்லை. அதுவும் இதுமாதிரியான நிகழ்வுகளுக்குக் காரணம்’’ என்கிறார் சிவபாலன்.

நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய இன்னொரு விஷயம், போதைப்பழக்கம். இன்று சர்வசாதாரணமாக போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. மது தெருவில் விற்கிறது. எவரும் வாங்கலாம், குடிக்கலாம். காதல் கொலையில் சிக்கிய இளைஞர்கள் பலர் போதையில் இருந்திருக்கிறார்கள். போதையை பெருங்கவனமெடுத்துத் தடுக்க வேண்டிய தருணம் இது.

‘‘முன்பெல்லாம் ஒருவரை விரும்பினால் அவரைத் தவிர வேறு உலகமே இல்லை என்ற நிலை இருந்தது. இன்று ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே வேறு வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால்தான் பிரேக்-அப்பைப் போலவே திருமணத்துக்குப் பிந்தைய விவாகரத்துகளும் அதிகரித்துள்ளன. பிரேக் அப், விவாகரத்து இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விஷயங்கள். காதலில் நடக்கக்கூடிய விவாகரத்துதான் பிரேக்-அப்.

பிரேக்-அப்பை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்வதுதான் அடிப்படையான மனித இயல்பாக இருக்கமுடியும். ஆனால் இங்கு காதல் என்பது அதீதமாக சிலாகிக்கப்படுகிறது. இன்னொன்று, ‘பெண் என்பவள் தான் கைப்பற்றுகிற உடைமை’ என்ற எண்ணம் ஆண்களுக்குள் வேரூன்றியிருக்கிறது. ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக, பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். அதேநேரம், வன்முறையை நிறைவேற்றும் அளவுக்கு மிருகபலத்தோடு செயல்படுகிறார்கள்...’’ என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

பிரிவதிலும் சேர்வதிலும் பெண்கள் மிகவும் பக்குவமாகவே செயல்படுகிறார்கள் என்கிற மனுஷ்யபுத்திரன், ‘எல்லா உறவுகளும் தற்காலிகமானவை என்ற உண்மையை இளைஞர்கள் உணரவேண்டும்’ என்கிறார்.

‘‘விலகுதல் என்பதை வாழ்க்கையின் நியதிகளுக்கு உட்பட்டதாகவே பெண்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படிப் பார்ப்பதில்லை. இன்னொன்று, உறவுகள் விஷயத்தில் கடந்த காலத்தின் வழியாக நாம் நிகழ்காலத்தை நிச்சயிக்க முடியாது. உறவுகள் நிரந்தரமானவை என்ற நம்பிக்கையை முதலில் மனதிலிருந்து அகற்ற வேண்டும். எல்லா உறவுகளுமே தற்காலிகமானவைதான். ஆண், பெண் உறவுகளை விடுங்கள். இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவேகூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இல்லாமல்போகிறது. இதை உளவியலாளர்கள் obsessive disorder என்று சொல்வார்கள். இது நிறைய பேரிடம் இருக்கிறது. கண்மூடித்தனமாக ஒன்றை நம்புபவன் இறுதியில் வன்முறையில் வந்து நிற்பதுதான் obsessive disorder. இது தனிமனிதப் பிரச்னையில்லை. தமிழ் மனதின் ஒட்டுமொத்தப் பிரச்னை என்றே நான் கருதுகிறேன்.

சாந்தகுமாரி,  ரவி, மனுஷ்யபுத்திரன், சிவபாலன்
சாந்தகுமாரி, ரவி, மனுஷ்யபுத்திரன், சிவபாலன்

நட்பு, உறவு, காதல்... இதற்கெல்லாம் இருக்கும் எல்லைக்கோடுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. இன்று ‘ஐ லவ் யூ’ என்பதை சர்வசாதாரணமாக குட்மார்னிங் போல சொல்லமுடியும். அதேநேரம் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் சொல்ல முடியும். சொல்பவர்களும் கேட்பவர்களும் அதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சேர்ந்து வாழ்வதும் திருமண உறவில் இணைவதும் மிகப்பெரிய வாழ்நாள் கமிட்மென்ட். அதையும், எமோஷனலாக வரும் உணர்வையும் ஒன்றெனப் புரிந்துகொள்ளக்கூடாது. பலர் இயல்பாகப் பழகும் ஒரு நட்பையோ உறவையோ கமிட்மென்ட்டாக மாற்ற முயல்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான ஈடுபாடும் இருந்தால்தான் அந்த உறவுக்குள் செல்லமுடியும். சென்றபிறகும்கூட எத்தனையோ திருமண உறவுகள் முறிந்துபோகின்றன.

இதுமாதிரியான சூழலிலிருந்து நம் இளைஞர்களை விடுவிப்பதென்பது மிகப்பெரிய சவால். மாற்றுப் பண்பாட்டை, பாலினச் சமத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தால் மட்டும்தான் அவர்கள் கொஞ்சமேனும் விடுபடுவார்கள். பிரிவின் வலி துயரம்தான். ஆனால் அதைக் கண்ணியமாக, இன்னொருவரின் உரிமைகளை மதிக்கக்கூடிய வகையில் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒருவர் வாழ்க்கையை அழிக்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய வாழ்க்கையையும் நிரந்தரமாக அழித்துக்கொள்வார்கள். உங்கள் வாழ்க்கையையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு எந்த உறவும் மதிப்புமிக்கதில்லை என்பதே என் கருத்து’’ என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

‘‘அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு, ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பப்படி துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குகிறது. பெற்றோரோ, காதலனோ யாரும் நிர்பந்திக்க முடியாது. நிர்பயா சட்டத்துக்குப் பிறகு பின் தொடர்தலையும் (stalking) குற்றமாகச் சேர்த்துள்ளார்கள். பெண்ணின் விருப்பமின்றி, நேரடியாகவோ சமூக ஊடகங்களின் வாயிலாகவோ எப்படிப் பின் தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டம் 354/D பிரிவின்படி குற்றம். அந்தக் குற்றத்துக்கு மூன்று வருடம் வரையிலான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்...’’ என்கிறார், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் ஏ.டி.ஜி.பி-யாகப் பணியாற்றியவரும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ரவியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘காதலித்த பெண் நிராகரித்துவிட்டால் பிளாக்மெயில் செய்கிறவர்கள் இயல்பான மனிதர்கள் இல்லை. சைக்கோக்கள். அதனால், அவர்கள் சிறையில் இருக்கும்போதே மனநல ஆலோசனைகள் வழங்கவேண்டும். சிறையிலிருந்து வெளி வந்ததும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். குறிப்பாக, பெண்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக காவல்துறைத் தலைமை சுற்றறிக்கை அனுப்பவேண்டும். புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள்மீது உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்கவேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகளின் 112, 181, 1091 அவசர உதவி எண்கள் செயல்பட்டுவருகின்றன. அந்த எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். காவலன் ஆப்பையும் பயன்படுத்தலாம்’’ என்கிறார் ரவி.

ஆணோ, பெண்ணோ எவருக்கும் ஒரு காதலை, பிடிக்காத ஓர் உறவை, மூச்சை இறுக்கும் ஒரு திருமணத்தை நிராகரிக்கும் உரிமை உண்டு. சட்டமும் அதை ஏற்கிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை, பிடிக்காத ஒருவனை நிராகரிக்கும் துணிச்சலைப் பெண்கள் பெறுவதற்கே இத்தனை தலைமுறைகள் ஆகியிருக்கிறது. அந்த உரிமையைக் கொலைகளின் வழியாக மறுதலிப்பது கற்காலக் கொடூரம்.

பெண்கள் ஆண்களின் தனிப்பட்ட சொத்தல்ல. ரத்தமும் சதையுமான, சிந்திக்கும் ஆற்றல் பெற்ற சம உணர்வும் உரிமையுமுள்ள உயிர். அடுத்த தலைமுறைக்கேனும் இதைக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். மாற்றம் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். கல்விக்கூடங்கள், பணித்தலங்கள், பொதுவெளிகளிலும் பெண்கள் சரிக்குச்சமமாக மதிக்கப்பட வேண்டும்.

சத்யா விவகாரத்தில் காவல்துறை தவறிழைத்திருக்கிறது. புகார்மீது உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மீண்டு்ம் மீண்டும் நவீனாக்களும் சோனாலிகளும் அஸ்வினிகளும் சத்யாக்களும் ஆண்களின் காதல் வெறிக்கு பலியாகாமல் இருக்க சமூகம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!

****

ரயில் நிலையத்திலோ ரயிலில் பயணிக்கும்போதோ ஆபத்து ஏற்பட்டால் 044-25353999, 9003161710, 9962500500 ஆகிய எண்களில் ரயில்வே காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் செய்யலாம்.

குடும்பத்திலோ, பொதுவிடத்திலோ, பணியிடத்திலோ, கல்விக்கூடங்களிலோ ஆண்களால் துன்புறுத்தல் ஏற்பட்டால் 044-28551155 என்ற எண்ணில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தைத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.

எந்த நேரத்திலும் ஆண்களால் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அல்லது யாரேனும் பின்தொடர்ந்தால் 9500099100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம். உடனடியாக காவல்துறையின் உதவி கிடைக்கும்.