ஆசியா எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றத்தை விளக்கும்படி இரண்டு சம்பவங்கள் ஆகஸ்ட் மாதத்தில் நடந்துள்ளன.

ஆகஸ்ட் 18-ம் தேதி, சிங்கப்பூர்ப் பிரதமர் லீ செயின் லூங் அந்நாட்டின் கடலோர நகரத்தைக் காப்பாற்றுவதற்காக, அது கடலில் மூழ்குவதைத் தடுப்பதற்காகக் கடற்கரையில் 72 பில்லியன் டாலர் செலவில் தடுப்புச்சுவர் கட்டப்போவதாக அறிவித்தார். ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதே காரணத்தால், தன் நாட்டின் தலைநகரத்தையே மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.

இரண்டு பேருமே பருவநிலை மாற்றத்தின் விளைவால் மூழ்கிக்கொண்டிருக்கும் தங்கள் கடலோர நகரத்தைக் காப்பாற்றத்தான் செயல்படுகிறார்கள். ஒருவர் இயற்கையை எதிர்த்துச் சண்டையிடுகிறார். இன்னொருவர் இயற்கையிடம் இயைந்து சமாதானம் செய்துகொள்ள முயல்கிறார். இதில் இந்தோனேசியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளச் சில பாடங்கள் இருக்கின்றன.

இயந்திரவியலில் டொமினோ விளைவு (Domino effect) என்று ஒன்றுண்டு. நாம் செய்யக்கூடிய ஏதாவது ஒரு செயல் அது சம்பந்தப்பட்ட விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, சங்கிலித் தொடராக அடுத்தடுத்து பல விளைவுகளை உருவாக்கிக் கொண்டே யிருக்கும். உலக வெப்பமயமாதலையோ பருவநிலை நெருக்கடியையோ (Climate emergency) நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. தென்னமெரிக்காவில் அமேசான் காடு பற்றியெரிவதால் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்று ஒதுங்கி நிற்கமுடியாது.

பூமியின் எந்த மூலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு நடந்தாலும் அது பூமியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். அப்படியொரு டொமினோ விளைவுதான் இந்தோனேசியா அரசை, தன் தலைநகரத்தைக் கைவிட வைத்திருக்கிறது.

“இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தா மீது நாம் சுமத்திய சுமை அதன் சக்திக்கும் மீறியது. அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம்” - என்று இந்தோனேசிய அதிபர், ஜோகோ விடோடோ ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

ஜாவா தீவில் அமைந்துள்ள ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவுக்குத் தலைநகரத்தை மாற்ற அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக அரசியல் மற்றும் வர்த்தக மையமாகத் திகழ்ந்த ஜகார்த்தா ஆண்டுக்கு 20 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேராபத்திலிருந்து அந்நாட்டுப் பொருளாதாரத்தையும் அந்நகரத்து மக்களையும் காக்கவே இந்தக் கடினமான முடிவை வேறு வழியின்றி அதிபர் விடோடோவின் அரசு எடுத்துள்ளது.

பூமியில் வேகமாகக் கடலில் மூழ்கிக் கொண்டி ருக்கும் நகரங்கள் பட்டியலில் ஜகார்த்தாவுக்கே முதலிடம். இதுபோக சுற்றுச்சூழல் சீர்கேடுகள், பேரிடர்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் அந்த நகரம் ஏழு பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

சதுப்புநிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட மோசமான நகரத் திட்டமிடுதல், முறைப்படுத்தப்படாத வடிகால்கள் போன்ற அனைத்தும் அந்நகரத்தைச் சீரழித்துவிட்டது. பலகட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டேயிருந்தாலும் அவர்களால் இயற்கையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. வேறு வழியின்றி, தான் மிகுந்த ஏமாற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அதிபர் விடோடோ கூறியுள்ளார்.

ஜகார்த்தாவிலிருந்து 1,000 கி.மீ தொலைவில் போர்னியோ தீவில் அமைந்துள்ள காலிமன்டன் (Kalimantan) என்ற இடம்தான் புதிய தலைநகரம் ஆகப்போகிறது. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த ஆண்டே காலிமன்டனில் 40,000 ஹெக்டேர் பரப்பளவில் புதிய தலைநகரம் அமைக்கும் வேலை நடைபெறும். 2024-ம் ஆண்டுக்குள் அரசாங்கத்தின் தலைமையிடம் காலிமன்டனுக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக, சுமார் 1.5 மில்லியன் குடிமைப் பணியாளர்கள் புதிய தலைநகரத்திற்கு இடம் மாற்றப்படுவார்கள். 17,000 தீவுகளை உள்ளடக்கிய, இந்தோனேசியாவின் தீவுக்கூட்டத்திற்கு நடுவே, அந்த நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நடுவே இந்தப் புதிய தலைநகரம் அமையவிருக்கிறது.

காலிமன்டன், ஜகார்த்தாவைவிட நான்கு மடங்கு பெரியதாக இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜகார்த்தாவைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்குதான் உள்ளது. ஆனால் மக்கள்தொகையில் 38மடங்கு குறைவுதான். அதனால்தான் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், போர்னியோ காட்டுத் தீவில் உருவாகவிருக்கும் இந்தப் புதிய நகரம் இந்தோனேசியச் சுற்றுச்சூழலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அரசு உறுதியளித்துள்ளது. “இங்குள்ள காடுகளை நாங்கள் துளியளவும் தொந்தரவு செய்யமாட்டோம். அதற்கு மாறாக நாங்கள் அதை மேலும் வளப்படுத்துவோம்” என்று கூறுகிறார், அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பாம்பேங்க் ப்ரோஜொனெகோரோ (Bambang Brodjonegoro).

போர்னியோவுக்கு வரக்கூடிய புதிய குடியேற்றங்களும் புதிய மனிதர்களும் அங்கு வாழும் மழைக்காட்டுக் குரங்கு இனமான உர்ராங்குட்டான்களின் வாழ்வை பாதித்துவிடுமோ என்று ஒருபக்கம் காட்டுயிர் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கெனவே அங்கு நடந்து கொண்டிருக்கும் சுரங்க வேலைகளைத் தடுத்து நிறுத்தி உர்ராங்குட்டான்களின் வாழிடங்களைக் காப்பாற்ற வேண்டும். அதேசமயம், அவற்றின் வாழிடங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுத்த மாட்டோமென்று இந்தோனேசிய அரசு உறுதியளிக்க வேண்டும். ஏனென்றால், பூமியில் உர்ராங்குட்டான்கள் இயற்கையான வாழிடங்களோடு வாழும் மிகச் சில மழைக்காடுகளில் போர்னியோ மிகவும் முக்கியமானது.

ஒரு நகரத்தைக் கட்டமைப்பது அவ்வளவு எளிய காரியமல்ல. 1.5 மில்லியன் மக்கள் தங்கும் அளவுக்கு ஒரு நகரத்தை ஆரம்பத்திலிருந்து கட்டமைக்க வேண்டும். அதுவும் முறையான பசுமை நகரமாக இருக்க வேண்டும். அதற்கு, சுமார் 33 பில்லியன் டாலர் செலவாகுமென்று கணிக்கப்படுகிறது. இந்தப் புதிய நகரத்தின் உருவாக்கத் திட்டத்தை அரசு, அரசுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் ஒப்பந்தத்தில் செயல்படும் நிறுவனங்கள் என்று அனைவரின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்படும். கடந்த 40 ஆண்டுகளுக்குள் போர்னியோ காடுகளில் 30 சதவிகிதம் அழிந்துவிட்டன. ஆனால், இந்த 33 பில்லியன் டாலர் செலவு செய்து நடைபெறும் இடமாற்றம் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எந்தவிதத் தவறும் நடந்துவிடாமலும் நிறைவுபெற வேண்டும். இல்லையேல், நன்மையைச் செய்வதற்குப் பதிலாக இதுவே மற்றுமொரு சூழலியல் பேரழிவுக்கு வழி வகுத்துவிடும்.

வரலாற்றில் பல நாடுகள் தங்கள் தலைநகரங்களை மாற்றியுள்ளன. இருப்பினும், பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பேரிடர்களால் மாற்றப்படுவது இதுதான் முதல்முறை. இந்தோனேசியா இதைச் செய்யவில்லை, செய்யவேண்டிய கட்டாயத்தை இயற்கை அவர்களுக்கு உருவாக்கியது. இந்தோனேசியாவின் தலைநகரம் என்னென்ன பிரச்னைகளால் இப்போது மாற்றப்படுகிறதோ அதே பிரச்னைகளை இந்தியாவின் தலைநகரமான டெல்லியும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையும் பல ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இயற்கை எப்போது வேண்டுமானாலும் நம்மையும் பணிய வைக்கலாம். அப்படிப் பணிய வைக்கும்போது நாம் அதனிடம் சமாதான உடன்படிக்கை செய்வோமா, இல்லை, எதிர்த்துச் சண்டையிட்டு மேலும் சேதமடைவோமா? அதை நாம்தான் முடிவு செய்யவேண்டும், உடனடியாக!