Published:Updated:

`பிரதமருக்கு எதிராக அவதூறு ட்வீட்!’ - மூத்த விமானியைப் பணி நீக்கம் செய்த கோஏர் ஏர்லைன் நிறுவனம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

`எனது ட்விட்டர் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துகளே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ கோஏர் ஏர்லைன் நிறுவனத்துக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை!’

ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட மூத்த விமானியை கோஏர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) வி.வி.ஐ.பி படை விமானியாக 25 ஆண்டுகள் பணியாற்றிய பைலட், யூனிஷ் மாலிக் (Unish Malik - Miki Malik), 2010-ம் ஆண்டு குரூப் கேப்டன் (Group Captain) பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை கிரேட் நிக்கோபருக்கு அழைத்துச் சென்றவரும் மாலிக்தான்.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

தற்போது கோஏர் ஏர்லைன் விமானியாகப் பணியாற்றிவரும் மாலிக், கடந்த வியாழன், தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்துப் பெயர் குறிப்பிடாமல் அவதூறுக் கருத்துகளைப் பதிவிட்டார். ``பிரதமர் ஒரு முட்டாள். நீங்கள் என்னையும் முட்டாள் என்று அழைக்கலாம். பரவாயில்லை, இது எனக்கு ஒரு பொருட்டல்ல. காரணம், நான் பிரதமர் அல்ல. ஆனால், பிரதமர் ஒரு முட்டாள்" என்று மாலிக் ட்வீட் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகப்பட்டு விவாதப் பொருளாக மாறியது.

அதையடுத்து, விமானி மாலிக், ``பிரதமரைப் பற்றிய எனது ட்வீட்களுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது, சம்பந்தப்பட்ட யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருந்தால் என்னை மன்னியுங்கள். எனது ட்விட்டர் கருத்துகள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துகளே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ கோஏர் ஏர்லைன் நிறுவனத்துக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரினார். அதோடு, பிரதமர் குறித்த அவதூறு கருத்துகளைத் தன் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார் மாலிக்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இருப்பினும், இது போன்ற விஷயங்கள் முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாதவை என்று தங்கள் நிறுவனத்தின் கொள்கையை மேற்கோள் காட்டிய கோஏர் ஏர்லைன் நிறுவனம், மூன்று நாள்களுக்குப் பிறகு மாலிக்கைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.

``கோஏர் ஏர்லைன் நிறுவனம் ஸீரோ டாலரன்ஸ் கொள்கையைக் கொண்டது. கோஏர் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயம்" என்று கோஏர் ஏர்லைன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``எந்தவொரு தனிநபர் அல்லது விமானப் பணியாளர்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கும் விமான நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கோஏர் ஏர்லைன் நிறுவனத்தின் பிரதிநிதி கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு