`குறைந்த விலைக்கு நகை வாங்கலாம் என்ற ஆசையைத் தூண்டி, பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிவிட்டது ஒரு மோசடிக் கும்பல்’ என்ற புகாரோடு வந்து குவியும் மனுக்களால் ராமநாதபுரம் எஸ்.பி ஆபீஸே திணறிக்கொண்டிருக்கிறது.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கல்யாணராமன் நம்மிடம், ‘‘காருகுடியைச் சேர்ந்த வளர்மதி என்பவர், ‘நான் குறைந்த விலைக்கு நகை வாங்கிக் கொடுக்கும் தொழில் செய்யுறேன். உங்கள் உறவினர்களுக்குக்கூட அப்படி நகைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்’ என்று நம்பிக்கையாகப் பேசினார். முதலில் எனக்கும் தயக்கமாக இருந்தது. ஆனால், ரூ.37,000 மதிப்புள்ள ஒரு பவுன் நகையை, வெறும் 25,000 ரூபாய்க்குக் கொடுத்தார். உடனே ஐந்து பவுன் நகை வாங்கினேன். அதிகமாக வாங்க வாங்கத்தான் லாபம் என்று ஆசையைத் தூண்டினார். அவரை நம்பி 16 லட்சம் ரூபாய்வரை கொடுத்தேன். பல மாதங்களாகியும் நகையையும் கொடுக்கவில்லை... பணத்தையும் திருப்பித் தரவில்லை.

வளர்மதியின் சொந்த ஊரான காருகுடிக்கே போனேன். அப்போதுதான் என்னைப்போலவே பலரும் ஏமாந்திருப்பது தெரியவந்தது. பணத்தைத் திருப்பிக் கேட்கும் பெண்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதோடு, ‘எஸ்.பி-யில் இருந்து உள்ளூர் போலீஸ் வரை எனக்கு எல்லோரையும் தெரியும்’ என்றும் பயமுறுத்துகிறார்” என்றார் பரிதாபமாக.
வளர்மதி கும்பலிடம் 36 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்து விட்டு பரிதவிக்கும் லலிதா, ‘‘வளர்மதி என் உறவுக்கார பெண்தான். அவரின் சகோதரி காயத்திரி பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அங்கு ஏலத்துக்கு வரும் நகைகளைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகச் சொன்னார். நானும் அவரை நம்பி 36 லட்சம் ரூபாயைக் கொடுத்தேன். இப்போது பணத்தைக் கேட்டுச் சென்றால், ‘நான் பணம் வாங்கியதற்கு என்ன ஆதாரம் இருக்கு?’ என்று கேட்பதோடு எனக்குக் கொலை மிரட்டலும் விடுக்கிறார்” என்றார் வேதனையோடு.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு வளர்மதி, அவரின் கணவர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.
ராமநாதபுரம் குற்றப் பிரிவு ஆய்வாளர் உமாமகேஸ்வரனிடம் கேட்டபோது, ‘‘பணத்தை இழந்தவர்கள் தொடர்ச்சியாக புகார் கொடுத்துவருகின்றனர். ஆனால், சந்தனக்கூடு திருவிழா, உதவி ஆய்வாளர் தேர்வு என அடுத்தடுத்த வேலைகள் இருப்பதால் விசாரணை நடத்தப்படாமல் இருக்கிறது. விரைவில், அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரிப்போம். புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில், அவரைக் கைதுசெய்து, பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.