Published:Updated:

ஆசனவாயில் தங்கம்... சித்ரவதை அனுபவித்த குருவி... தெரிந்தே கோட்டைவிடுகிறதா சுங்கத்துறை?

தங்கக் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
தங்கக் கடத்தல்

ஒரு குருவி ஏமாற்றப்பட்டதாலும், மற்றொரு குருவி ஏமாற்றியதாலும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஆசனவாயில் தங்கம்... சித்ரவதை அனுபவித்த குருவி... தெரிந்தே கோட்டைவிடுகிறதா சுங்கத்துறை?

ஒரு குருவி ஏமாற்றப்பட்டதாலும், மற்றொரு குருவி ஏமாற்றியதாலும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Published:Updated:
தங்கக் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
தங்கக் கடத்தல்

துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டி தங்கள் கைகளுக்குக் கிடைக்காததால், கடத்தலில் குருவியாகச் செயல்பட்ட நபரை ஒரு மாதத்துக்கும் மேலாக அடைத்துவைத்து கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறது ஒரு கும்பல். சம்பந்தப்பட்ட குருவியோ, ஆசனவாயில் தங்கத்தை மறைத்துவைத்திருந்த நிலையில் ரத்தம் கொட்டியதால், அதை மற்றொரு குருவியிடம் கைமாற்றிவிட்டதாகச் சொல்கிறார். மொத்தத்தில் இந்த விவகாரத்தில் கடத்தல் தங்கத்தைக் கோட்டைவிட்டிருக்கிறார்கள் அகமதாபாத் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு செட்டுவாக்கோட்டையைச் சேர்ந்த செல்லப்பா, துபாயில் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். 2022, ஜனவரி 29 அன்று துபாயிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்பிய செல்லப்பாவிடம், துபாயில் வேலை பார்க்கும் அருண்பிரசாத் என்பவர் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டியைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். அதை இந்தியாவின் அகமதாபாத்துக்குக் கடத்தி வர ஒரு லட்சம் ரூபாய் தருவதுடன், விமான டிக்கெட் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அருண்பிரசாத் கூறியிருக்கிறார். இதையடுத்து, தங்கக்கட்டியை ஆசன வாயிலில் மறைத்துவைத்த செல்லப்பா, துபாய் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு திடீரென்று ஆசன வாயிலிருந்து ரத்தம் கொட்டியதால், அதிர்ச்சியடைந்த செல்லப்பா, அதே விமானத்தில் அகமதாபாத் செல்வதற்காகக் காத்திருந்த கேரளாவைச் சேர்ந்த அனீஸ்குமாரிடம் விவரத்தைச் சொல்லியிருக்கிறார். அனீஸ்குமார் குருவியாகச் செயல்பட சம்மதித்ததை அடுத்து, கழிவறையில் வைத்து தங்கம் கைமாறியுள்ளது. இருவரும் துபாயிலிருந்து அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கியபோது, தங்கக்கட்டியோடு எஸ்கேப் ஆகிவிட்டார் அனீஸ்!

ஆசனவாயில் தங்கம்... சித்ரவதை அனுபவித்த குருவி... தெரிந்தே கோட்டைவிடுகிறதா சுங்கத்துறை?

அகமதாபாத் ஏர்போர்ட்டில் செல்லப்பாவுக்காகக் காத்திருந்த ஹக்கீம் என்பவர் தலைமையிலான டீம், அவரிடம் தங்கக்கட்டியைக் கேட்டது. நடந்த விஷயத்தை செல்லப்பா கூறியதும், அதை அந்த டீம் நம்பவில்லை. தொடர்ந்து அகமாபாத் ஏர்போர்ட் அருகிலுள்ள ஹோட்டல் அறையில் செல்லப்பாவை இரண்டு நாள்கள் அடைத்துவைத்து, ஆசனவாயைப் பிளந்து சோதனையிட்டு, கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறது அந்தக் கும்பல். தொடர்ந்து அவரை நிர்வாணப்படுத்தியவர்கள், அவர்மீது சிறுநீர் கழித்தும், மலத்தை உண்ணவைத்தும் கொடுமைப்படுத்தினார்கள். அவரிடம் தங்கம் இல்லை என்பது தெரிந்ததும், கடத்திச் சென்றவரைத் தேடும் நோக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என மூன்று மாநிலங்களில் உள்ள ஹோட்டல்களில் ஜனவரி 30 தொடங்கி மார்ச் 6-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கும் மேலாக அடைத்துவைத்து செல்லப்பாவைக் கடுமையாக அடித்து, துன்புறுத்தியது அந்தக் கும்பல். இறுதியாக சென்னை மண்ணடியிலுள்ள ஒரு விடுதியிலும் செல்லப்பா அடைத்துவைக்கப்பட்டார். தொடர்ந்து தஞ்சாவூரிலுள்ள செல்லப்பாவின் அக்கா ராதிகாவைத் தொடர்புகொண்ட அந்தக் கும்பல், 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அதன் பிறகுதான், இது குறித்து தஞ்சாவூர் திருவோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ராதிகா.

இது பற்றி விசாரணை நடத்திய போலீஸாரிடம் பேசினோம்... “செல்லப்பாவை ஒரு மாதத்துக்கும் மேலாக அடைத்துவைத்துத் தாக்கியதில் அவருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவரை சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது கடத்தல் கும்பல். ராதிகா போலீஸில் புகார் கொடுத்த விஷயத்தை அறிந்ததும், மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டது கடத்தல் கும்பல். செல்லப்பா கூறிய தகவலை அடுத்து மண்ணடி விடுதியில் செல்லப்பாவை அடைத்து வைத்திருந்த விடுதி உரிமையாளரின் மருமகன் இம்தியாஸ் என்பவரைக் கைதுசெய்துள்ளோம்... மற்றவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

ஆசனவாயில் தங்கம்... சித்ரவதை அனுபவித்த குருவி... தெரிந்தே கோட்டைவிடுகிறதா சுங்கத்துறை?

ஒரு குருவி ஏமாற்றப்பட்டதாலும், மற்றொரு குருவி ஏமாற்றியதாலும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விமான நிலையத்தின் அத்தனை சோதனைகளிலிருந்தும் தப்பி குருவி ஒருவர் தங்கத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். ``அகமதாபாத் விமான நிலையம் என்றில்லை... தமிழகத்தின் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இதுபோல தங்கத்தை சுங்கத்துறையினர் கோட்டைவிடுவது அதிகம்; பிடிபடுவது குறைவுதான்’’ என்கிறார்கள் இது பற்றிய உள்விவரங்களை அறிந்தவர்கள்.

அவர்கள் கூறுகையில், ``துபாய் - இந்தியா தங்கக்கடத்தல் நெட்வொர்க் மிகப்பெரிய அளவில் செயல்பட்டுவருகிறது. ஆசனவாய், செருப்பு, தங்கப்பசை என்று விதவிதமாக தங்கத்தைக் கடத்துகிறார்கள். தங்கக்கட்டியை கேப்சூல்களில் விழுங்கியும் சிலர் எடுத்துவருகிறார்கள். சொற்ப பணத்துக்காக ஆசைப்படும் குருவிகள் சிலர் இப்படித் தங்கக்கட்டியை எடுத்துவந்து, உடல் உறுப்புகளிலிருந்து தங்கத்தை வெளியே எடுத்த பிறகு உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. குருவிகள் சிலர் எஸ்கேப் ஆகிவிடும்பட்சத்தில், அவர்களைத் தேட கடத்தல் கும்பலுடன் காவல்துறையும் கைகோத்துச் செயல்படுகிறது. எஸ்கேப் ஆகும் குருவிகளைத் தேடிப்பிடித்து அவர்களிடமிருந்து தங்கத்தை மீட்பதற்காகவே திருச்சியில் பெரிய ரெளடிக் கும்பலே செயல்படுகிறது. கடத்தப்படும் தங்கத்தில் சுமார் 25 சதவிகிதம் மட்டுமே சுங்கத்துறையினரிடம் பிடிபடுகிறது. 75 சதவிகித தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வந்துவிடுகிறது.

மார்ச் 25 அன்று சார்ஜாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த வந்த 32 வயதான ஆண் பயணி ஒருவரைச் சோதித்தபோது அவர் மின்னணு சாதனத்தில் 300 கிராம் தங்கக்கட்டியை மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநாளில் துபாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த மற்றோர் ஆண் பயணி, உள்ளாடைக்குள் மறைத்துவைத்து 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கப்பசையைக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வெளியே தெரிந்தவை மட்டுமே. தங்கக் கடத்தல் கும்பல்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் டீல் பேசிக்கொண்டு மாத மாமூலாகப் பல லட்சங்களை வாரி இறைக்கின்றன. சொல்லப்போனால் தங்கம் கடத்துபவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் எப்போது பணியிலிருக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகே டிக்கெட் போடுகிறார்கள்” என்றார்கள்.

கடத்தல்கள் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கடத்தல் கழுகுகளுக்கு செல்லப்பா போன்ற குருவிகள் இரையாவது தொடர்கதையாகிவிடும்!