Published:Updated:

ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்ட நகை வியாபாரி... கட்டடத் தொழிலாளியாக கூலி வேலைக்குச் செல்லும் பரிதாபம்!

பணம் மோசடி செய்த இசக்கியப்பன், ஏ.பி.ராஜ்

இரிடியத்தை விற்பனை செய்தால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். அதனால் 5 லட்சம் கொடுப்பவர்களுக்கு 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற ஆசை வார்த்தையை நகை வியாபாரி நம்பிவிட்டார்.

ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்ட நகை வியாபாரி... கட்டடத் தொழிலாளியாக கூலி வேலைக்குச் செல்லும் பரிதாபம்!

இரிடியத்தை விற்பனை செய்தால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். அதனால் 5 லட்சம் கொடுப்பவர்களுக்கு 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற ஆசை வார்த்தையை நகை வியாபாரி நம்பிவிட்டார்.

Published:Updated:
பணம் மோசடி செய்த இசக்கியப்பன், ஏ.பி.ராஜ்

கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இருப்பதையும் இழந்து தவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இது தொடர்பான செய்திகளைப் படித்த பின்னரும்கூட ஏமாறும் நபர்கள் இருக்கவே செய்கிறார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரி, கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்து இன்று கட்டடம் கட்டும் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்.

நகை வியாபாரி நாகராஜன்
நகை வியாபாரி நாகராஜன்

திசையன்விளை அருகே உள்ள மணலிவிளைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன். இவர் நகை வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு நாகதேவதை அறக்கட்டளை நடத்தும் இசக்கிமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் குங்குமம், சந்தனம் பூசிய நிலையில் சாமியார் போல வலம்வந்த இசக்கிமுத்து, நகை வியாபாரியான நாகராஜனிடம் பண ஆசையைத் தூண்டும் விதமாகப் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இசக்கிமுத்து என்ன சொன்னாலும் நம்பும் அளவுக்கு நகை வியாபாரி நாகராஜன் வந்துவிட்டார். அதைப் புரிந்துகொண்ட இசக்கிமுத்து, ``என் நண்பர் ஏ.பி.ராஜ் என்பவர் மதுரையில் பாஸ்டராக இருக்கிறார். அவரிடம் இரிடியம் இருக்கிறது. அதை விற்றால் 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். அந்தப் பணம் நமது அறக்கட்டளைக்கு வந்ததும் உங்களுக்கு வட்டி இல்லாமல் 5 கோடி ரூபாய் கொடுக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

பணம் மோசடி செய்த இசக்கியப்பன், ஏ.பி.ராஜ்
பணம் மோசடி செய்த இசக்கியப்பன், ஏ.பி.ராஜ்

அதற்காக அறக்கட்டளையில் சேர கட்டணமாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றதை ஒப்புக்கொண்ட நாகராஜன், உடனடியாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து அறக்கட்டளை உறுப்பினராகிவிட்டார். இதே போல, திசையன்விளை பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரிடமும் ஐந்து லட்சம் வீதம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார்.

நகை வியாபாரி நாகராஜன் தொழிலில் கவனம் செலுத்தாமல் இசக்கிமுத்து அறக்கட்டளைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தியதால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் வாங்கியதால், கடன்காரர்கள் தொல்லை அதிகரித்ததால், சொந்த ஊரில் இருந்து வெளியேறி அருகில் உள்ள திருமலாபுரம் என்ற கிராமத்தில் குடியேறியுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்ட இசக்கிமுத்து
பண மோசடியில் ஈடுபட்ட இசக்கிமுத்து

கடன் தொல்லை அதிகமானதால், நாகராஜன், தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார். அவரோ, ``நம்மிடம் இருக்கும் இரிடியத்தை வெளிநாட்டில் இருந்தெல்லாம் நிறைய பேர் விலைக்குக் கேட்கிறார்கள். அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் அதிக விலைக்கு விற்கலாம்” எனத் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.

கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி, தொழில் நஷ்டம் என மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன், தன் பணத்தைக் கேட்டு பலமுறை நேரிலும் தொலைபேசியிலும் இசக்கிமுத்து மற்றும் பாஸ்டர் ஏ.பி.ராஜ் ஆகியோரிடம் கேட்டும் பணம் கிடைக்க வில்லை. அதனால் அவர் நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் மோசடி செய்த பாஸ்டர் ஏ.பி.ராஜ்
பணம் மோசடி செய்த பாஸ்டர் ஏ.பி.ராஜ்

இதனிடையே, ஐந்து கோடி ரூபாய் கிடைக்கும் என்கிற நப்பாசையில் இருக்கும் பணத்தை இழந்ததுடன் தொழிலையும் கைவிட்ட நாகராஜன், தற்போது குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி கட்டுமான கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்.

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் நகை வியாபாரி நாகராஜன் இருப்பதை இழந்து தவிக்கும் நிலையில், அவரைப் போலவே ஏமாற்றப்பட்ட நபர்கள் யார் என்பது பற்றியும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.