Published:Updated:

குப்பைமேனி சோப் முதல் கற்றாழை ஹேர் ஆயில் வரை... இயற்கை தயாரிப்பு பொருள்களில் ரூ.25,000 லாபம்!

செங்குன்றம் சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
செங்குன்றம் சித்ரா

- செங்குன்றம் சித்ரா

``நம்மகிட்ட திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்துறதும் முக்கியம்’’ என்கிறார் சித்ரா. மூலிகை சோப், கேச வளர்ச்சி எண்ணெய், ஆரோக்கிய சத்துமாவு என வீட்டிலேயே பல இயற்கைப் பொருள்கள் தயாரித்து மாதம் 25,000 ரூபாய் லாபம் பார்க்கும் தொழில்முனைவோர்.

``என்னோட சொந்த ஊரு தேனி மாவட்டம், உத்தமபாளையம். அப்பா தாசில்தார் என்பதால சின்ன வயசுல கஷ்டம்னா என்னன்னு தெரியல. காலேஜ் படிக்கும்போது எங்கப்பா இறந்துட்டாரு. அதுக்கப்புறம் குடும்பச் சூழல் ரொம்ப மோசமாயிடுச்சு. டிகிரி முடிக்கவே பெரும்பாடுபட்டேன். எனக்குள்ள அப்போவே தொழில்முனைவோர் கனவு இருந்ததால, கடன் வாங்கி எம்.பி.ஏ படிச்சு முடிச்சேன். காலேஜ் படிக்கும்போதே நிறைய தொழில்முனைவோர் பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டு பலவகையான சிறு தொழில்களைக் கத்துக்கிட்டேன். அதுல என்னை ரொம்ப ஈர்த்தது, இயற்கை முறையிலான உணவுப் பொருள்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி.

சத்து மாவு
சத்து மாவு

பொதுவா பதின்பருவத்துல இருந்தே தலைக்கு சீயக்காய், முகப்பருக்களுக்கு மூலிகைப் பொடி, கேச ஆரோக்கியத்துக்கு மூலிகை தேங்காய் எண்ணெய்னு எனக்கு எல்லாத்தையும் நானேதான் தயாரிச்சு பயன் படுத்துவேன். அதை என்னோட உறவினர் களுக்கும் தோழிகளுக்கும் கொடுப்பேன். எல்லாருமே ‘சூப்பர்’னு சொல்லுவாங்க. எம்.பி.ஏ முடிச்சப்போ, அதையே தொழிலா செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, கேம்பஸ் இன்டர்வியூல சென்னையில ஒரு வங்கியில வேலை கிடைச்சிருந்தது.

வேலையில சேர்ந்த சில மாதங்கள்ல வீட்டுல எனக்குத் திருமணத்தை முடிச் சாங்க. செங்குன்றத்துல குடியேறினோம். கணவருக்கு பி.பீ.ஓ வேலை. குழந்தை பிறந்த பிறகு, நான் வேலையை விட்டுட்டேன். இப்படி, ஒரு பொண்ணோட வாழ்க்கையில சராசரியா நடக்குற எல்லாம் என் வாழ்க்கை யிலயும் நடந்து, பல பெண்களையும் போல நானும் அம்மா ஆனதுக்கு அப்புறம் ‘ஜாப் லெஸ்’ஆகிட்டேன்’’ என்றவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகுதான், திசை எட்டியிருக்கிறது.

குப்பைமேனி சோப்
குப்பைமேனி சோப்

“என்னோட ரெண்டாவது பையன், உடம்புல சத்து சேராமல் இருந்தான். அதனால், அவனுக்கு சிறுதானியங்களைக் கொண்டு பாரம்பர்ய முறையில சத்துமாவு தயாரிச்சுக் கொடுத்தேன். அது அவனோட ஆரோக்கியத்தை நல்லா மேம்படுத்துச்சு. அவன் ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் அவ னோட மாற்றத்தைப் பார்த்துட்டு, என் கிட்ட விசாரிச்சு, நான் தயாரிச்ச அந்த புரோட்டீன் பவுடரை ஸ்கூல்ல பல பசங்களோட அம்மாக்களிடமும் பரிந்துரை செஞ்சாங்க. எல்லாருக்கும் அது நல்ல ரிசல்ட் கொடுக்க, இப்போவரை அவங்க எல்லாரும் என் ரெகுலர் கஸ்டமர்ஸ். மேலும், நான் செய்யக்கூடிய மற்ற இயற்கை முறை பொருள்கள் பற்றியும் டீச்சர்ஸ்கிட்ட சொல்ல, என் பையனோட ஸ்கூல்ல என் னோட தயாரிப்புகளுக்காகவே தனியா ஒரு விற்பனை நிகழ்வு ஏற்பாடு செஞ்சு கொடுத்து உதவினாங்க.

சத்து மாவு, உடல் எடை குறைக்க பவுடர், மூலிகை எண்ணெய், கேழ்வரகு லட்டு, கம்பு லட்டுன்னு ஸ்கூல் ஸ்டால்ல என்னோட தயாரிப்புகளுக்கு செம வரவேற்பு கிடைச்சது. அந்த நிகழ்வுதான், எனக்குப் பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. அந்தப் பெற்றோர்கள் எல்லாம் என்னோட திடமான வாடிக்கையாளர்கள் வட்டமா அமைய, தொடர்ந்து என்னோட இயற்கை முறை தயாரிப்புப் பொருள்கள் உற்பத்தியை அதிகப் படுத்தினேன். குப்பைமேனி சோப், சார்கோல் (கரித்தூள்) சோப், நலங்கு மாவு சோப்னு புதுசா அறிமுகப்படுத் தினேன். 500 ரூபாய் மட்டும்தான் முதலீடு போட்டேன். விற்பனையில கிடைக்கிற லாபத்துலதான் அடுத் தடுத்து மூலப்பொருள்கள் வாங்கி, கொஞ்சம், கொஞ்சமா தொழிலை விரிவுபடுத்தினேன்’’ என்பவர், தனக்குக் கைகொடுத்த மார்க்கெட் டிங் வழிகள் பற்றி பகிர்ந்தார்.

மூலிகை எண்ணெய்
மூலிகை எண்ணெய்

‘‘வீட்டுத் தோட்டத்துலேயே குப்பைமேனி, துளசி, கீழாநெல்லி, செம்பருத்தினு எனக்குத் தேவையான செடிகளை வளர்க்குறேன். என் பொருள்களோட தரத்தால, தொழி லுக்குத் தானாகவே புரொ மோஷன் கிடைச்சது. ஆரம்பத்துல, பாடிய நல்லூர்ல இருக்குற பிரபல சித்த மருத்துவர் ஒருத்தர், குப்பை மேனி சோப், சார்கோல் சோப், சத்து மாவுனு என் தயாரிப்புப் பொருள் களை வாங்கிப் பயன்படுத்திட்டு, நல்லா இருந்ததால அவரோட கிளினிக்குக்கு வர்ற மக்களுக்குப் பரிந்துரை செஞ்சாரு. அதுதான் என்னோட முதல் பல்க் ஆர்டர்.

மாநகராட்சியில லைசென்ஸ் வாங்கி, ‘ஆருத்ரா ஆர்கானிக் நேச் சுரல்ஸ் ஹோம்மேடு புராடக்ட்ஸ்’ என்ற பெயர்ல பொருள்களை தயாரிச்சு, எங்க பகுதியில இருக்குற சூப்பர் மார்கெட்களுக்கும் சப்ளை செய்ய ஆரம்பிச்சேன். ஆர்கானிக் பொருள்களுக்கு மக்கள்கிட்ட வரவேற்பு இருக்குறதால, கடைக் காரங்க உடனே என்னோட பொருள் களுக்கு ஓ.கே சொல்லிடுவாங்க. கடைகள்ல வாங்கி வெச்சதும் காலி யாகிடுச்சுனு கடைக்காரங்க சொல் லும்போது ரொம்ப உற்சாகமா இருக்கும்’’ என்ற சித்ரா, வருமானம் பற்றிப் பகிர்ந்தார்.

‘‘தொழிலை ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆகுது. இப்ப நான் சார் கோல் சோப், குப்பைமேனி சோப், நலங்குமாவு சோப், நலங்குமாவு, உடல் எடை குறைப்பு மாவு, சத்து மாவு, கற்றாழை ஹேர் ஆயில், மூலிகை ஹேர் ஆயில்னு எட்டு வகையான இயற்கை தயாரிப்புப் பொருள்களை விற்பனை செய்றேன். பகுதி நேரமா செஞ்சாலும், அதுலேயே எனக்கு மாசத்துக்கு 25,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது. இந்தத் தொழில்ல ஆர்வமா இருக்குறவங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் எடுத்துட்டு இருக்கேன். என்னை நானே வெற்றியாளரா உணர்ற தருணமெல்லாம், இறக்கை முளைச்ச மாதிரி இருக்கும்’’ - சித்ராவிடம் பொங்குகிறது மகிழ்ச்சி.

‘`இப்ப என்னோட பொருள்கள் செங்குன்றம் பகுதி முழுவதும் எல்லா கடைகளிலும் கிடைக்குது. இதே மாதிரி, சென்னை முழுக்க என்னோட தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்கணும், அதுக்கு அடுத்தகட்டமா வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யணும். இன்னிக்குக் காலகட்டத்துல வேப்பங்குச்சியைக் கூட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செஞ்சுட்டு இருக்காங்க. நாமளும் நம்ம தொழில் மேல நம்பிக்கை வெச்சு இறங்குவோம்.

குப்பைமேனி சோப் முதல் கற்றாழை ஹேர் ஆயில் வரை... இயற்கை தயாரிப்பு பொருள்களில் ரூ.25,000 லாபம்!

ஆண்களுக்கு அவங்களோட கனவை துரத்திப் பிடிக்கும் வாய்ப்பையும் நேரத்தையும் அதிகமா கொடுக்குற உலகம், பெண்களுக்கு அப்படி கொடுக்குறதில்ல. நம்ம கனவு, லட்சியம் எல்லாம் கல்யாணம், குழந்தை, குடும்பம்னு ஆகும்போது தேய்ந்துகொண்டே வரும்தான். இருந்தாலும், அதை எப்போ வேணா லும் நம்மால மீட்க முடியும்... நானே சாட்சி’’ என்று சிரிக்கிறார் சித்ரா.

வெற்றிச் சிரிப்பு!