Published:Updated:

கொரோனா: `மாஸ்க் அணிவோம், உயிர்களை காப்போம்!' - கூகுளின் விழிப்புணர்வு டூடுல்

கூகுள்
கூகுள்

கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள்.

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த மனிதக் குலத்தின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாகப் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல மருந்துகள் 3-ம் கட்ட சோதனையில் உள்ள இன்னும் எந்த ஒரு மருந்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கொரோனா
கொரோனா

ஜனவரி மாதம் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியது முதல் இதைத் தடுக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதில் கைகழுவுதல், முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவையே மிக முக்கியமாகக் கூறிவருகிறது. பெரும்பாலான நாட்டுத் தலைவர்களும் தங்கள் மக்கள் கட்டாயமாக இவற்றைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா: `சரியான தடுப்பு மருந்து கிடைக்காமலும் போகலாம்!’ - எச்சரிக்கும் WHO

இந்நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூகுள், ஒரு அனிமேஷன் டூடுலை வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் எழுத்துகள் அனைத்தும் முகமூடி அணிந்தபடி சமூக இடைவெளியுடன் இருப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் ‘முகமூடி அணியுங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். கை கழுவுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்’ என்ற வழிகாட்டுதல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூகுள் மாஸ்க்
கூகுள் மாஸ்க்

கொரோனா பரவலைத் தடுக்க மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில், `உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். இருமும் போதும் தும்மும் போதும் பிறரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடியுங்கள். உடல்ரீதியான தூரம் சாத்தியமில்லாதபோது முகமூடியை அணியுங்கள். உங்கள் கண்கள், மூக்கு, வாயை ஒருபோதும் தொட வேண்டாம். உங்கள் உடல்நிலை சரியில்லாதபோது வீட்டிலேயே இருங்கள். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகவும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000-க்கும் அதிகமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு