Published:Updated:

“என்மீதே எனக்கு விமர்சனம் இருந்திருக்கு!”

கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
கோபிநாத்

டிவியில பார்த்து ஒவ்வொன்னையும் கவனிச்சு அதை ஷோவுல பண்றது ஒரு நெருக்கடி.

“என்மீதே எனக்கு விமர்சனம் இருந்திருக்கு!”

டிவியில பார்த்து ஒவ்வொன்னையும் கவனிச்சு அதை ஷோவுல பண்றது ஒரு நெருக்கடி.

Published:Updated:
கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
கோபிநாத்
’நீயா நானா’ - நிகழ்ச்சி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். சாதனைதான்! எத்தனையோ விவாதங்கள், உணர்வுப் பரிமாற்றங்கள், கருத்துப் பகிர்தல்கள், நெகிழ்வின் கணங்கள்... தமிழ் மக்களின் விருப்பத்துக்குரிய விஜய் டிவி நிகழ்ச்சியின் பயணத்துக்காக, அதன் தொகுப்பாளர் கோபிநாத்தைச் சந்தித்து வாழ்த்துகளோடு பேட்டியைத் தொடங்கினேன்.
 “என்மீதே எனக்கு விமர்சனம் இருந்திருக்கு!”

`` ‘நீயா நானா’ன்னு ஒரு ஷோ பண்ணப்போறோம். அதை நீங்கதான் தொகுத்து வழங்கப்போறீங்கன்னு விஜய் டி.வி-ல சொன்ன நாள் ஞாபகம் இருக்கா? முதல் தலைப்பு என்ன?’’

“நாள் ஞாபகமில்லை. கோபியை இன்னும் பெட்டரா பயன்படுத்தணும் அப்படிங்கிற எண்ணம் சேனலுக்கு இருந்தது. ஏன்னா, என்னை நம்பி அதுக்கு முன்னாடி ‘மக்கள் யார் பக்கம்’னு ஒரு நிகழ்ச்சி கொடுத்தாங்க. இதுக்குப் பிறகு, எனக்கு மக்களோடு உரையாடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்ணணும்னு இருந்தது. அப்படித்தான், ‘நீயா நானா’ தொடங்கியது. ‘எதிரெதிர்த் தரப்புகள் ஒரு இடத்துல சந்திச்சா எப்படியிருக்கும்’ அப்படிங்கிறதுதான் இதனுடைய ஐடியா. ரெண்டு வேறுபட்ட கருத்துகளை உடைய மக்களை ஒரே நேரத்துல கையாள நான் சரியா இருப்பேன்னு சேனல்ல நம்பினாங்க. ‘ஆட்டோ டிரைவர்களும் பொது மக்களும்’, ‘ரசிகர் மன்றங்களில் இருப்பவர்களும் அவரது குடும்பத்தினரும்’ இந்த ரெண்டு ஷோவுல ஏதாவது ஒண்ணுதான் முதல்ல ஷூட் பண்ணுன தலைப்புன்னு நினைக்கிறேன். என்னுடைய பழைய ஷோக்களில் நான் எப்படி இருந்திருக்கேன்னு போட்டோ எடுத்து என் மனைவியும் பொண்ணும் கிண்டல் பண்றதுண்டு.”

``ஒவ்வொரு எபிசோடிலும் உங்களுடைய பங்களிப்பு எப்போதிலிருந்து தொடங்கும்?’’

“இந்த நிகழ்ச்சி வெவ்வேறு லேயர்களில் இயங்குது. வெளியே இருந்து பார்க்கும்போது, நெறியாளரின் பங்களிப்பு பெரிதா இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதனுடைய முழு கிரெடிட் பின்னாடி இருந்து அந்த நிகழ்ச்சியை நடத்துற டீமுக்குத்தான். மூன்று தலைமுறையைச் சார்ந்த நபர்கள் இதுக்குப் பின்னாடி வேலை செய்றாங்க. ஒரு ஆங்கருடைய முக்கியமான பங்களிப்பு என்னன்னா, அந்த நிகழ்ச்சியைக் கெடுக்காமல் இருக்கிறதுதான். பல பேருடைய உழைப்பு இதுல இருக்கு. அதை நான் நல்லபடியா வெளியே கொண்டு வர்றேன். அதுக்கு என்னை நான் தயார்படுத்திக்கணும். தலைப்பு முடிவான நாளிலிருந்து, அதைப் பத்தின சிந்தனை மனசுல ஓடிட்டிருக்கும். அந்தத் தலைப்பு சார்ந்த தகவல்களைத் திரட்டிக்கிட்டே இருக்கணும். இன்னொண்ணு, ஓபன் மைண்டடா வெச்சுக்கணும். மனசை காலியா வெச்சுக்கிறதுதான் இதுல இருக்கிற பெரிய தயாரிப்பு. அப்படி இருந்தால்தான், ஒருத்தருடைய பார்வையை கவனிச்சு அடுத்து நிகழ்ச்சியைக் கொண்டுபோக முடியும். அடுத்து, அது மக்களுக்கான களம்னு நினைக்கணும். இதைத்தான் என்னுடைய பங்களிப்பா நினைக்கிறேன்.”

``உங்களையே அறியாமல் ஒரு சாரருக்கு சாதகமாகப் பேசுறோம்னு என்றைக்காவது மனசுல தோணுனதுண்டா?’’

“அப்பப்போ தோணியிருக்கு. இல்லவே இல்லைன்னு சொல்லமுடியாது. சாதி, ஊழல், பொதுநன்மைக்கு விரோதமாகன்னு ஒருத்தர் பேசும்போது அவங்களை மறுத்துப் பேசுறதுல என்ன தப்பு இருக்குன்னு நினைச்சுக்குவேன். சில நேரங்கள்ல ஆங்கர் கோபிநாத் மேலேயே எனக்கு விமர்சனம் இருந்திருக்கு.”

``டிவியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைப் பார்ப்பீங்களா? அப்படிப் பார்க்கையில் இந்த இடத்துல நம்ம மேனரிசம் இப்படியிருந்திருக்கலாமேன்னு நினைச்சிருக்கீங்களா?’’

“பெரும்பாலும் பார்க்கிறதில்லை. டிவியில பார்த்து ஒவ்வொன்னையும் கவனிச்சு அதை ஷோவுல பண்றது ஒரு நெருக்கடி. அங்க கவனம் இருக்கும்போது, இப்போ நாம சரியா நிக்கிறோமா, உட்காருறோமா, வயிறு தெரியுதான்னு யோசிக்க முடியாது. என்னுடைய அனுபவத்துல எனக்கு ஒரு உடல்மொழி இருக்கு. அது உலகத்தின் ஆகச்சிறந்ததான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அது என்னுடையது. ரெண்டு விஷயங்களைப் பத்தி நான் கவலைப்படமாட்டேன். ஒண்ணு, இந்த ஃப்ரேம்ல நான் அழகா இருக்கேனா இல்லையான்னு பார்க்கமாட்டேன். இன்னொண்ணு, நான் பேசினது எல்லாம் டிவியில வந்துச்சான்னும் பார்க்கமாட்டேன். அது அந்த நிகழ்ச்சியை நடத்துறதுக்காகப் பேசினது. ஷோவை முடிச்சுக் கீழே இறங்கிட்டா, எனக்கும் அதுக்கும் தொடர்பில்லை. அது இயக்குநருடையது. ஒரு சமூகம் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு துருத்திக்கிட்டு எதுவும் முயற்சி பண்ணக்கூடாது. நாம பண்றதைக் கச்சிதமா, நேர்மையாப் பண்ணணும், அவ்ளோதான்.”

``15 வருடங்களாக ‘நீயா நானா’ வெற்றிகரமாக நடந்திட்டிருக்க, இதுதான் முக்கிய காரணம்னு நீங்க நினைக்கிறது என்ன?’’

“மக்களோடு கனெக்டடா இருக்கு. சமூகத்துல நடக்கிற சிறு சிறு அசைவுகளையும் டீம் கவனிக்குது. இப்போ சமீபமா ‘நமது அடுப்படியை மறு சீரமைப்பு செய்யணுமா?’ தலைப்புல ஒரு ஷோ பண்ணினோம். காரணம், இந்த லாக்டெளன்லதான் பல ஆண்கள் சமையலறைக்குள்ளேயே போய் ரொம்ப நேரம் இருந்திருக்காங்க. ‘ஏசி வைக்க வேண்டிய இடமே கிச்சன்தான்டா’ன்னு தோணுச்சு. முட்டை மசாலா பண்ணி வெளியே வர்றதுக்குள்ளே மூணு ‘நீயா நானா’ பண்ணுன மாதிரி இருக்கு. வேர்த்து வேர்த்து உடம்பெல்லாம் நனைஞ்சு வெளியே வந்தேன். அப்போ நம் வீட்டுல இருக்கிற பெண்களின் நிலைமையை உணர முடியுது. ‘அடுப்படியை மறு சீரமைப்பு பண்ணணுமா?’ - என்னாங்கடா பெரிய தேசியப் பிரச்னை மாதிரி பேசுறீங்கன்னு தோணும். அது பிரச்னைதான். இந்த ஷோ பண்ணும்போது அவ்ளோ விஷயங்கள் தெரிய வந்தது. சாதாரண தலைப்பா இருக்கலாம். ஆனா, அதுக்குள்ள அவ்ளோ பெரிய அரசியலோ, கஷ்டங்களோ இருக்கும். அப்படி எங்கிருந்து எங்களுக்கு ஐடியா கிடைக்குதோ, அதையும் அந்த ஷோவுல சொல்லிடுவோம்.”

``திருநங்கைகள் பத்தின தலைப்புதான் உங்க மனசுக்கு ரொம்ப நெருக்கமானதுன்னு ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி ஒரு பேட்டியில சொல்லி யிருந்தீங்க. இப்போவும் அதுதான் உங்களுடைய பதிலா?’’

“நிஜமா திருநங்கைகள் பத்தின ஷோ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அதைப் பார்த்துட்டு எத்தனையோ திருநங்கைகள் என்கிட்ட பேசினாங்க. ரோட்டுல பார்த்தா, அவ்ளோ பிரியமா பேசுவாங்க. நான் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில முக்கியமா நினைக்கிறது என்னன்னா, இந்த நிகழ்ச்சி சமூக உரையாடலை ஏற்படுத்தணும்கிறதுதான். அதைத் திருநங்கைகள் எபிசோடு ஏற்படுத்துச்சு. அதற்குப் பிறகு, எனக்கு ரொம்ப நெருக்கம்னா, ‘குழந்தையின்மை பற்றி என் மனைவியிடம் கேட்காதீர்கள். என்னிடம் கேளுங்கள்’னு ஆண்கள் வந்து பேசின நிகழ்ச்சி, மாமியார் மருமகள்களுக்கிடையே உண்மையிலேயே சண்டைகள் இருக்கான்னு கண்டுபிடிச்ச ஒரு ஷோ, ஏன் பெற்றோர்கள் எல்லாவற்றிற்கும் நோ சொல்கிறார்கள்னு ஒரு ஷோ, மூத்த பிள்ளைகள் - இளைய பிள்ளைகள் இதெல்லாம்தான். தவிர, குழந்தைகளை வெச்சு பண்ற எபிசோடுகள் எப்பவும் மனசுல நிற்கும்.”

``ஏராளமான ஆளுமைகளைப் பேட்டி எடுத்திருக்கீங்க. அதை ‘நேர் நேர் தேமா’ புத்தகத்துல பதிவு பண்ணியிருப் பீங்க. அப்படி நீங்க பேட்டி எடுக்கணும்னு நினைச்ச, நினைக்கிற நபர்கள் யார்?’’

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். இவங்க ரெண்டு பேரையும் பேட்டி எடுக்கணும்னு நினைச்சு முடியாமல் போயிடுச்சு. இளையராஜா சார், சச்சின் டெண்டுல்கர், தோனி இவங்களை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப ஆசை.”

 “என்மீதே எனக்கு விமர்சனம் இருந்திருக்கு!”

``இந்த டயட், ஃபிட்னஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

“உடல் அமைப்புக்காக டயட் இருக்கணும்ங் கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. ஆரோக்கியத் திற்காக டயட்டைக் கடைப்பிடிக்கணும்னா ஓகேதான். சைஸ் ஜீரோதான் சரியான இடுப்புன்னு நான் ஏத்துக்கவே மாட்டேன். விளம்பர நிறுவனங்கள் என் உடலமைப்பைத் தீர்மானிக்க முடியாது. மக்களுக்கு உங்களைப் பிடிச்சுடுச்சுனா, நீங்க அழகுதான். அழகுங்கிறது குணத்தைப் பொறுத்தது. என்னை கவனிக்கிறவங்க என்னைவிட நான் என்ன பேசுறேங்கிறதைத்தான் கவனிக்கிறாங்கன்னு நம்புறேன். ஆனா, ஆரோக்கியத்துக்காக உடல் எடையை சரியா வெச்சுக்கணும் அப்படிங்கிறதை நம்புறேன். அதுக்கு அப்பப்போ முயற்சி பண்றேன்.”

``போண்டான்னா அவ்வளவு பிடிக்குமாமே!’’

“ரொம்பப் பிடிக்கும். கார போண்டா இல்லை, இனிப்பு போண்டா. இப்போவும் ஊருக்குப் போனா, திருச்சியில இறங்கினவுடன் நண்பன் சேகர் வருவான். அவன்கூட விடியக்காலையில சுடச்சுட போண்டா சாப்பிறதுண்டு. போண்டா சாப்பிடணும்னு டிரெயின்லேயே பல்லெல்லாம் துலக்கி ரெடியாகிடுவேன். இப்போவும் என் மனைவி, அண்ணன்னு வீட்ல யார் கண்ணுல போண்டா தெரிஞ்சாலும் எனக்கு வாங்கிட்டு வந்திடுவாங்க.”

``படங்கள் பார்க்கிறதுக்கு நேரமிருக்கா?’’

“நிறைய நேரமிருக்கு. சில நேரங்கள்ல பார்த்த படங்களையே விரும்பிப் பார்ப்பேன். ‘தர்மதுரை’, ‘தங்கமகன்’, ‘96’ இந்தப் படங்களெல்லாம் அடிக்கடி பார்ப்பேன். எனக்கு படத்திற்குப் படம் தனுஷுடைய நடிப்பைப் பார்த்து வியப்பா இருக்கும். சமீபமா, ‘சூரரைப் போற்று’ படத்தை ரொம்ப ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன். இப்போ வெப் சீரிஸ்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்.”

``சிவகார்த்திகேயன்கிட்ட அடிக்கடி பேசுறதுண்டா?’’

“அடிக்கடி பேசுவோம். ஆனா, சினிமாவைப் பத்தி இருக்காது. குடும்பத்தைப் பத்திதான் பேசுவோம். தம்பியுடைய படம் வரும்போது, தியேட்டர்ல போய் மக்களோடு மக்களா உட்கார்ந்து பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். அவங்க பெயர் வரும்போது மக்கள் கைதட்டி விசில் சத்தம் வரும்போது ரொம்பப் பெருமையா இருக்கும். அதெல்லாம் என்ஜாய் பண்ணுவேன்.”

``உங்களுடைய இலக்குன்னு நீங்க நினைக்கிறது என்ன?’’

“நான் Go with the flow டைப்தான். நாம ஒரு கணக்கு போட்டா, நம்ம சக்திக்கு உட்பட்டதைத்தான் போட முடியும். ஆனா, வாழ்க்கை அழைச்சுக்கிட்டு போற போக்குல போனா, நிறைய கத்துக்கொடுக்கும். எல்லோரையும் அப்படித்தான் போகச் சொல்றேன். திட்டமிடுதல் சரி. ஆனா, இப்படிப் போனா நிறைய விஷயங்களை கவனிக்க முடியும். அதுக்குன்னு அப்படியே கண்மூடித்தனமா ஓடணும்னு சொல்லலை. அடிப்படை பிளான்னு ஒண்ணு இருக்கணும்.’’ அப்படி என்னுடைய பிளான், Live at the moment.”