Published:Updated:

அரசு சார்பில் ஆப்... ஜி.பி.எஸ் மீட்டர்... ஆட்டோ கட்டண விஷயத்தில் செய்யவேண்டியது என்ன?

ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றாமல் இருப்பதால்தானே தனியார் ஆப்கள் பக்கம் மக்கள் செல்கிறார்கள்

அரசு சார்பில் ஆப்... ஜி.பி.எஸ் மீட்டர்... ஆட்டோ கட்டண விஷயத்தில் செய்யவேண்டியது என்ன?

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றாமல் இருப்பதால்தானே தனியார் ஆப்கள் பக்கம் மக்கள் செல்கிறார்கள்

Published:Updated:
ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ

தமிழகம் முழுவதும் 3,20,000 ஆட்டோக்கள், அவற்றில் சென்னையில் மட்டும் 1,20,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன என்பது போக்குவரத்துத்துறையின் பதிவு கணக்கு. சிறுநகரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதீத கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வரும் அதேநேரத்தில், பெருநகரங்களில் ஆன்லைன் டாக்ஸி ஆப்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.

“பைக் இல்லாத ஆண்களும், பேருந்து கிடைக்காத பெண்களுமே எங்களின் பிரதான கஸ்டமர்கள். தற்போது, தனியார் டாக்ஸி ஆப் மூலம் இரண்டுக்கும் ஆப்பு வந்துவிட்டது. சிங்கிள் ஆண்கள் பைக் டாக்ஸிகளிலும், பெண்கள் இலவசப் பேருந்துகளிலும் போய்விடுகிறார்கள். ஷேர் ஆட்டோக்களும் புற்றீசல்போல முளைத்துவிட்டதால், ஆட்டோ ஓட்டுநர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது” என்பது ஆட்டோ ஓட்டுநர்களின் புலம்பல்.

அரசு சார்பில் ஆப்... ஜி.பி.எஸ் மீட்டர்... ஆட்டோ கட்டண விஷயத்தில் செய்யவேண்டியது என்ன?

இந்தப் பின்னணியில், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைப்பதற்கு முடிவெடுத்துள்ள அரசு, அதற்காக மே 13-ம் தேதி சென்னை கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. போக்குவரத்துத்துறை இணை ஆணையர் சிவகுமரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம்.

“ஆட்டோ தொழிற்சங்கம் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பில் குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடமும் அரசு பேசியிருக்கிறது. நாங்கள் ஒரு கட்டணம் சொல்வோம், மக்கள் சார்பில் ஒரு கட்டணம் சொல்வார்கள், இரண்டுக்கும் மத்தியில் ஒரு கட்டணத்தை அரசு இறுதி செய்யும். இதுதான் வாடிக்கையாக நடக்கிறது. தற்போதாவது, விஞ்ஞானரீதியாக வடிவமைக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை அரசு அறிவிக்க வேண்டும். அதாவது, எரிபொருள் விலை, வாகனத்தின் விலை, சென்னை உள்ளிட்ட நகரங்களின் பரப்பளவு, போக்குவரத்து நெருக்கடி இவற்றைக் கணக்கிட்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். முதல் 1.5 கிலோமீட்டருக்கு 50 ரூபாய், அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கும் தலா 25 ரூபாய் என்றவாறும், இரவுக் கட்டணத்தை ஒன்றரை மடங்கு அதிகமாகவும், காத்திருப்புக் கட்டணத்தை ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாயாகவும் நிர்ணயம் செய்யக் கோரியிருக்கிறோம்” என்றார்.

பாலசுப்ரமணியம்
பாலசுப்ரமணியம்

“ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றாமல் இருப்பதால்தானே தனியார் ஆப்கள் பக்கம் மக்கள் செல்கிறார்கள்?” என்று அவரிடம் கேட்டபோது, “பெரும்பாலான டிரைவர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த 2013-ல் கட்டண மாற்றம் செய்யப்பட்டபோது, ‘2014 பிப்ரவரி இறுதிக்குள் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட மீட்டரை இலவசமாகக் கொடுப்போம்’ என்றது அரசு. இதுவரை கொடுக்கவில்லை. தற்போதாவது அதை வழங்க வேண்டும். தினம் தினம் பெட்ரோல் விலை உயரும் இந்தக் காலத்திலும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கட்டணத்தை மாற்றியமைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது அரசு. இனியாவது விலைவாசி உயர்வுக்கேற்ப மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டண மாற்றம் செய்தால், கண்டிப்பாக ஓட்டுநர்கள் மீட்டர் ஆன் செய்து, அதற்குரிய கட்டணத்தைப் பெறுவார்கள்” என்ற பாலசுப்ரமணியம், “தனியார் ஆப்களில் 100-க்கு 30 ரூபாய் ஓட்டுநரிடமிருந்தும், 15 ரூபாய் பயணிகளிடமிருந்தும் கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள். அதே போன்று, அரசே ஒரு ஸ்மார்ட்போன் ஆப் உருவாக்கி, 100-க்கு 15 ரூபாய் அரசு கமிஷன் எடுத்துக்கொள்ளட்டும். அதில், 5 ரூபாயை ஆட்டோ ஓட்டுநர்களுக்கே இ.எஸ்.ஐ., பென்ஷன் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தினால், தனியாரிடம் ஓட்டும் அத்தனை பேரும் அரசிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள வந்துவிடுவார்கள்” என்ற யோசனையையும் அரசுக்குச் சொல்லியிருப்பதாகக் கூறினார்.

ஆட்டோவில் அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர் அப்துல் ரஜாக்கிடம் பேசினோம். “இன்றைய தேதியில் மும்பையில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 23 ரூபாய். கேரளாவில் 30 ரூபாய். அதை அவர்கள் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1.8 கிலோமீட்டர் தூரத்துக்கு 25 ரூபாய்தான் கட்டணம். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 முதல் 100 ரூபாய் வரை வாங்குகிறார்கள். மினிமம் 50 ரூபாய் என்று மாற்றினால், கண்டிப்பாக 100 ரூபாய்க்கு மேல்தான் வாங்குவார்கள். சென்னையில் ஒரு ஆட்டோகூட மீட்டரை ஆன் செய்வதேயில்லை. ஏறும்போது ஒரு தொகை கேட்டுவிட்டு, இறங்கும்போது சேர்த்துக் கேட்கிறார்கள். இதனால்தான், பைக் ஆப்கள், ஷேர் ஆட்டோக்கள் பக்கம் மக்கள் போய்விட்டார்கள். அதேபோல அரசு, கட்டணம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பு என்று ஏதோ ஓர் அபார்ட்மென்ட்டில் இருக்கும் நலச்சங்கத்தினரைக் கருத்து கேட்கிறார்கள். அவர்களெல்லாம் சொந்தக் காரில் செல்பவர்கள். சாமானிய மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

எஸ்.எஸ்.சிவசங்கர்
எஸ்.எஸ்.சிவசங்கர்

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் விளக்கம் கேட்டபோது, “முதற்கட்டமாக இணை ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அடுத்தகட்டமாக, ஆணையர் தலைமையில் இன்னொரு கூட்டம் நடைபெறும். அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் பெற்று, முதல்வரிடம் கலந்துபேசி நல்லதொரு முடிவெடுக்கப்படும்” என்றார் சுருக்கமாக.

மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர் களுக்கும் பாதிப்பில்லாத ஓர் முடிவை விரைந்து எடுக்க வேண்டியது அரசின் கடமை!