Published:Updated:

தென்காசி: பெண் பயணியைச் செருப்பால் அடிக்கப் பாய்ந்த ஓட்டுநர்! - பரவும் அதிர்ச்சி வீடியோ

பெண் பயணியை அடிக்கப் பாய்ந்த டிரைவர்
பெண் பயணியை அடிக்கப் பாய்ந்த டிரைவர்

பேருந்திலிருந்த பெண் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர், ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை அடிக்கச் செருப்பைக் கழற்றினார். சக பயணிகளும், நடத்துநரும் டிரைவரின் அத்துமீறலைக் கண்டித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பெண்கள் இலவசமாகப் பயணம் செய்துவருகிறார்கள். ஆனால் சில இடங்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பெண்களை டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்பவர்கள்போல் எண்ணி அவ்வப்போது அத்துமீறிப் பேசும் சம்பவங்கள் நடக்கின்றன.

`3 மணிநேரத்துக்கே முடியல... அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்

பேருந்து பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் ஓட்டுநரும் நடத்துநரும் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்கூட பேருந்தில் நடக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையாகிவிடுகின்றன. அத்தகைய ஒரு சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம்-கடையம் இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தில் (27 ஏ) குத்தப்பாஞ்சான் என்ற கிராமத்தில் சேர்மக்கனி என்ற பெண் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஏறிய அவர் டிரைவரிடம், ஓரிரு நிமிடங்கள் நிறுத்தினால் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் குழந்தையும் வந்துவிடுவார்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பெண் பயணி சேர்மக்கனி
பெண் பயணி சேர்மக்கனி

ஆனால் பேருந்தை நிறுத்த மறுத்த டிரைவர் முப்பிடாதி முத்து என்பவர் அந்தப் பெண்ணிடம், `நான் வேண்டுமானால் அவங்க வீட்டுக்குப் போய் கூட்டிட்டு வரட்டுமா’ என அநாகரிகமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சேர்மக்கனி `ஏன் இப்படி அநாகரிகமாகப் பேசுகிறீர்கள்?’ எனக் கேட்டு டிரைவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோபத்திலிருந்த டிரைவர் முப்பிடாதி முத்து, டிரைவர் சீட்டைவிட்டு எழுந்து வந்து சேர்மக்கனியின் கையை முறுக்கியதுடன், அவரைச் செருப்பால் அடிக்கவும் பாய்ந்திருக்கிறார். அதைப் பார்த்துக் கோபமடைந்த பயணிகள், டிரைவரின் செயலைக் கண்டித்ததுடன் சேர்மக்கனிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள். கண்டக்டரும் வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார்.

பஸ் டிரைவர் முப்பிடாதி முத்து
பஸ் டிரைவர் முப்பிடாதி முத்து

அதன் பின்னரே டிரைவர், தன் இருக்கைக்குச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தைப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்திருக்கிறார். சுதந்திர தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவியது. டிரைவரின் செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணும், டிரைவரும் கடையம் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்கள். பின்னர் இருவரும் அங்கேயே சமாதானமாகப் போவதாகத் தெரிவித்ததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அடிக்கப் பாயும் டிரைவர்
அடிக்கப் பாயும் டிரைவர்

இருப்பினும், இந்தச் சம்பவம் வைரலாகப் பரவியதால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி நிர்வாக இயக்குநர் ராஜேஸ்வரன் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசுப் பேருந்து டிரைவர் முப்பிடாதி முத்துவை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு