Published:Updated:

நாய்கள் ஜாக்கிரதை! - அதிகரிக்கும் நாய்க்கடி... அலட்சியம் காட்டும் அரசு...

நாய்
பிரீமியம் ஸ்டோரி
நாய்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவ தாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

நாய்கள் ஜாக்கிரதை! - அதிகரிக்கும் நாய்க்கடி... அலட்சியம் காட்டும் அரசு...

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவ தாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Published:Updated:
நாய்
பிரீமியம் ஸ்டோரி
நாய்

திடீரென எங்கிருந்தோ வரும் நாய், தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களை, நடந்து செல்லும் பொதுமக்களைக் கடித்துக் குதறும் வீடியோக்களைப் பார்த்து, பதைபதைத்துப் போயிருப்போம். சமீபகாலமாக தமிழ்நாடு முழுக்க இப்படியான சம்பவங்கள் நடப்பதுதான் வேதனை!

கடித்துக் குதறிய வெறிநாய்!

கடந்த ஜூலை 27-ம் தேதி, திண்டிவனம் அருகே ஒலக்கூரில் ஐந்து வயது சிறுவனைக் கடித்துக் குதறிய வெறிநாய், காப்பாற்ற முயன்ற அவனுடைய தந்தையையும் கடித்தது. தெருவில் நடந்து சென்ற மேலும் மூவரையும் பதம் பார்த்தது. அதே வாரத்தில் கிருஷ்ணகிரி அருகே அரசம்பட்டி அரசுப் பள்ளிக்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை விரட்டி விரட்டிக் கடித்தது. கோவை உக்கடம் அருகேயுள்ள கரும்புக்கடை பகுதியில் கடந்த ஜூலை 23-ம் தேதி ஆறு வயது சிறுவன் உட்பட 11 பேரைக் கடித்துக் குதறியது தெருநாய்.

தேனி தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டி பகுதியில் ஜூலை 22-ம் தேதி, ஐந்து பேரை விரட்டி விரட்டிக் கடித்தது, ஒரு வெறிநாய். மனிதர்களை மட்டுமின்றி, இரண்டு வளர்ப்பு நாய்களையும், ஆடுகளையும் அந்த வெறிநாய் கடித்திருப்பதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியும்கூட விதி விலக்கில்லை. சன்னதி தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அங்கிருந்த சுற்றுலாப் பயணி களைக் கடித்துவைத்திருக்கிறது. இப்படித் தமிழ்நாடு முழுக்க வெறிநாய்க்கடி அதிகரித்திருப்ப தால், ரேபிஸ் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

நாய்கள் ஜாக்கிரதை! - அதிகரிக்கும் நாய்க்கடி... அலட்சியம் காட்டும் அரசு...

அரசின் மெத்தனம்!

இப்படி வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மக்களும், தெருநாய்த் தொல்லையால் அவதிப்படுபவர்களும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், நாயைப் பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை உக்கடத்தில் 11 பேரை வெறிநாய் கடித்த விவகாரத்திலும் இதே கதைதான். அந்தப் பகுதியில் தெருநாய் தொல்லை குறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தயாரானார்கள் அப்பகுதி மக்கள். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் காயப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போராட்டக்காரர் களைச் சமாதானப்படுத்தினர்.

2018-ம் ஆண்டு கணக்குப்படி, தலைநகர் சென்னையில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமான தெருநாய்கள் இருக்கின்றன. தற்போது அந்த எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க கணக்கெடுத்தால், பல லட்சங்களைத் தாண்டும். வாகன ஓட்டிகளை இந்த நாய்கள் துரத்திச் செல்வதால், விபத்துகள் ஏற்படுகின்றன. குப்பைகளைத் தெரு முழுக்க இழுத்துப் போடுவதாலும், கண்ட கண்ட இடங்களில் அவை மலம் கழிப்பதாலும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.

கருத்தடையும்... பொய்க் கணக்கும்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவ தாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். ரேபிஸ் நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 20,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றார்கள். இவர் களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பதுதான் வேதனைக்குரிய செய்தி. “தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2018-19 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் 14.57 கோடி ரூபாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி வாங்கியிருக்கிறது. இந்தத் தொகையில் சிறிய பகுதியைத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த செலவு செய்திருந்தால்கூட இத்தனை லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ``நாய் இனக்கட்டுப்பாடு சட்டம் 2001-ன்படி, தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும், வெறிநாய் தடுப்பூசியும் போட்ட பிறகு, அவற்றைப் பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும். சென்னையில், மூன்று இடங்களில் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் மையங்கள் இருக்கின்றன. மாநகராட்சியின் பயிற்சிபெற்ற ஊழியர்கள் மூலம் நாய்களைப் பிடித்து, இந்த மையங்களுக்குக் கொண்டு வந்து கருத்தடை செய்வோம். இப்படி, கடந்த 2020-21-ம் ஆண்டு மட்டும் 10,193 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டிருக்கிறது. 2021-22-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 3,012 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டிருக்கிறது. தெருநாய் தொல்லை அதிகம் இருந்தால் `1913’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

ஆனால், மாநகராட்சி சொல்வது பொய்க் கணக்கு என்றும், அவர்கள் சொல்லும் எண்ணிக் கையில் பத்தில் ஒரு பங்கு நாய்களுக்குக்கூட கருத் தடை செய்யப்படவில்லை என்றும் சொல்கிறார் கள் சமூக ஆர்வலர்கள். சமீபத்தில் சென்னை 15-வது மண்டலத்தில் நடைபெற்ற ஆய்வில், 30 சதவிகித நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்ற தகவல் அதற்குச் சான்று.

அலட்சியம் காட்டும் அரசு மருத்துவமனைகள்!

கடந்த ஜூலை 7-ம் தேதி சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தெரு நாய் கடித்துவிட்டது. உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த செவிலியர்கள், ஒரு தடுப்பூசியின் விலை 3,000 ரூபாய், ஒரு பாட்டிலை உடைத் தால் நான்கு பேருக்கு உடனடியாகப் போட வேண்டும். ஒருவருக்காக மட்டும் பாட்டிலை உடைத்தால் மீதமுள்ள மருந்து வீணாகிவிடும்” என்று சொல்லி ஊசி போடாமல் திருப்பியனுப்பி யிருக்கிறார்கள். “இதற்காக அந்த நாயை இன்னும் மூன்று பேரைக் கடிக்கவா சொல்ல முடியும்?” என்று நொந்து போனவர், வேறொரு மருத்துவ மனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்.

நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் ஒருவனுக்குத் தடுப்பூசி போடுவதற்காக சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் பெற்றோர். “இங்கே தடுப்பூசி கிடையாது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்றிருக்கிறார்கள் செவிலியர்கள். அங்கே சென்றால், “இங்கே பெரியவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடுவோம். சிறுவனை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று திருப்பியனுப்பியிருக் கிறார்கள். பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள் கிறார்கள். மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால், தடுப்பூசி போட முடியாமல் தவிக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன், தடுப்பூசி போடாததால் ரேபிஸ் நோயால் சமீபத்தில் உயிரிழந்திருக்கிறான்.

தெருநாய் தொல்லை குறித்து புகார் அளித்தாலும் கண்டுகொள்ளாத உள்ளாட்சி ஊழியர்கள் ஒரு பக்கம், அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் இன்னொரு பக்கம் என்று அல்லாடுகிறார்கள் மக்கள்.

என்ன செய்யப்போகிறது அரசு?