Published:Updated:

பாழடைந்த கட்டடம்; ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள்! - வைரல் புகைப்படம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மின்சாரத்துறை ஊழியர்
மின்சாரத்துறை ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணி புரிந்து வருகின்றனர். மின்சார அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. ஊழியர்கள் அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது. அலுவலகத்தின் கான்கீரிட் கூரைகள் விரிசல் விட்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கான்கிரீட் கூரைகள் விழும் அபாயம் இருப்பதால் ஊழியர்கள் தங்கள் நலனுக்காக ஹெல்மெட் அணிந்து பணிபுரிகின்றனர்.

உத்தரப்பிரதேசம் அரசு அலுவலகம்
உத்தரப்பிரதேசம் அரசு அலுவலகம்

அந்த அலுவலகத்தின் அறையின் நடுவே உள்ள தூண்தான் மேற்கூரையைத் தாக்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் போதிய அலமாரிகள் இல்லாததால் ஆவணங்கள் அனைத்தும் அட்டைப்பெட்டிகளில்தான் வைத்துள்ளனர். மழைக்காலங்களில் இன்னும் மோசம் என்கிறார்கள். மின்சாதனப் பொருள்கள் அனைத்தும் அந்த அலுவலகத்தில் போதிய பாதுகாப்பின்றி இருக்கிறது. இதுகுறித்து பேசிய மின்சாரத் துறை ஊழியர் ஒருவர் ``நான் இங்கு பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. நான் வந்த நாளில் இருந்து இந்த அலுவலகம் இப்படித்தான் இருக்கிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு நிறைய கடிதங்கள் எழுதிவிட்டோம். ஆனால், ஒரு பலனும் இல்லை’’ என்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல இடங்களில் அரசு அலுவலகங்களின் நிலை இதுதான் எனச் சிலர் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.