Published:Updated:

ராதாபுரம் யூனியன் பொறியாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை - ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் நெருக்கடி காரணமா?!

ராதாபுரம் யூனியன் பொறியாளர் தற்கொலை
News
ராதாபுரம் யூனியன் பொறியாளர் தற்கொலை

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்யாத அரசு வேலைக்கு ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அரசியல்வாதிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக பொறியாளர் தற்கொலை செய்ததாகப் புகார் எழுந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்துப் பகுதியில் அரசுப் பணிகளை மேற்கொண்டதாக போலியாக பில் போட்டு, லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதாகச் சர்ச்சை கிளம்பியது. ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கு நெருக்கமான பஞ்சாயத்துச் செயலர் பாலசுப்பிரமணியன் என்பவர் சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக எடுக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாயத்து செயலர் பாலசுப்பிரமணியன்
பஞ்சாயத்து செயலர் பாலசுப்பிரமணியன்

பஞ்சாயத்து செயலர் பாலசுப்பிரமணியன் மோசடியாக இந்தப் பணத்தை அரசு ஒப்பந்ததாரர்களான இசக்கிமுத்து, சுப்பையா ஆகியோரின் வங்கிக் கணக்கில் வரவுவைக்க முயன்றிருக்கிறார். பின்னர் அவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என முடிவுசெய்திருக்கிறார். ஆனால், அச்சமடைந்த இசக்கிமுத்து இது பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோசடி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே பஞ்சாயத்துச் செயலாளரான பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவான அவரை மீண்டும் பணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

சந்தோஷ் குமார்
சந்தோஷ் குமார்

இந்த நிலையில், ராதாபுரம் பஞ்சாயத்து ஒன்றியத்தில் பொறியாளராகப் பணியாற்றிவரும் சந்தோஷ்குமார் என்பவரிடம், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் பழைய அரசு வேலைகளைச் செய்ததற்காக அந்தப் பணத்தை ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைத்ததாக போலியாக பில்களைத் தயாரிக்குமாறு நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொறியாளரான சந்தோஷ்குமார் அதற்கு மறுத்திருக்கிறாராம். அதனால் அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக அவருடன் பணியாற்றும் சிலர் தெரிவிக்கிறார்கள். அதனால் சில தினங்களாகக் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.

தற்கொலை செய்த சந்தோஷ்குமார் சென்ற பைக்
தற்கொலை செய்த சந்தோஷ்குமார் சென்ற பைக்

இந்த நிலையில், நேற்று (7-ம் தேதி) இரவு அவரை நேரில் சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவர், இந்த விவகாரத்தில் அனைத்தும் சரியாக நடந்ததுபோல கணக்கைச் சரிசெய்யுமாறு நெருக்கடி கொடுத்திருக்கிறார். அதனால் மன அழுத்தம் ஏற்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். இன்று (8-ம் தேதி) மதியம் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக அலுவலகத்திலிருந்து வெளியே சென்றபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

இதற்கிடையே காவல்கிணறு பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிய அவர், திடீரென திருவனந்தபுரத்திலிருந்து திருச்சிக்குச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தண்டவாளத்தில் கிடக்கும் உடல்
தண்டவாளத்தில் கிடக்கும் உடல்

பொறியாளர் சந்தோஷ்குமார் மரணத்தின் பின்னணியில் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான இன்பதுரை, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் பொறியாளர் சந்தோஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக யாருடன் பேசினார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சந்தோஷ்குமார் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னை ஏதாவது காரணமா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.