Published:Updated:

அரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! - ஒரு விறுவிறு அலசல்

அரசு நிதியுதவி
பிரீமியம் ஸ்டோரி
அரசு நிதியுதவி

`நீண்டகால தொலைநோக்குப் பார்வை நடப்பு காலத்தில் நம்மைச் சரியாக வழி நடத்தாது!’

அரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! - ஒரு விறுவிறு அலசல்

`நீண்டகால தொலைநோக்குப் பார்வை நடப்பு காலத்தில் நம்மைச் சரியாக வழி நடத்தாது!’

Published:Updated:
அரசு நிதியுதவி
பிரீமியம் ஸ்டோரி
அரசு நிதியுதவி
லரும் அச்சப்பட்டதுபோலவே, கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மருத்துவ பாதிப்புகளை விடப் பொருளாதார பாதிப்புகள் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கின்றன.

`இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு காலாண்டின் ஜி.டி.பி 45% வரை வீழ்ச்சியடையும்’ எனப் பன்னாட்டு ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரித்திருக்கிறது.

அரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! - ஒரு விறுவிறு அலசல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஜி.டி.பி 1% வளர்ச்சியடைந்தால், ஏறக்குறைய 30 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு மேலே வருவார்கள்’ என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துவரும் நிலையில், கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பின்படி பொருளாதாரம் 45% வீழ்ச்சியடைந்தால், எத்தனை கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்களோ!

இந்த நிலையில், கொரோனா பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை நிதியமைச்சர் ஐந்து தவணைகளாக அறிவித்திருக்கிறார். வங்கிக் கடன் உதவி, கொஞ்சம் நேரடி உதவி, சில சீர்திருத்த நடவடிக்கைகள் எனப் பன்முகப்பட்ட அறிவிப்புகளைக் குறித்துப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொன்னது ஒன்று, கிடைத்தது வேறு!

ஊரடங்கு விலக்கல் நடவடிக்கை தொடர்பாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘பொருளாதார முடக்கத்திலிருந்து விடுபட ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்படும்” என்று சொன்னவுடன், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உட்படப் பலரும் பரபரப்பானார்கள். எனவே, நிதியமைச்சர் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறாரோ என ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நிதியமைச்சர் ஒவ்வோர் அறிவிப்பாக வெளியிடவும் அனைவரின் ஆர்வமும் குறையவே செய்தது. சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1.70 லட்சம் கோடிக்கான அறிவிப்பையும் இதில் சேர்த்து கணக்குக் காட்டினார். ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்திருந்த சில திட்டங்களையும் இந்த ரூ.20 லட்சம் கோடியுடன் கணக்கில் கொண்டு வந்ததால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் ஏமாந்துபோன நிலையில் பேசத் தொடங்கினர். ரூ.20 லட்சம் கோடிக்கான கணக்கு தெளிவாகச் சொல்லப்பட்ட கணக்குப் போலத் தோன்றினாலும், இந்தக் கணக்கை சரியாகப் புரிந்துகொள்வது மெத்தப் படித்த பொருளாதார வல்லுநர்களாலேயே முடியாத செயலாக இருந்தது ஆச்சர்யமான விஷயம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கொஞ்சம் மானிட்டரி, கொஞ்சம் பிஸ்கல்..!

பொருளாதார மந்தநிலைக்கு மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருப்பதுதான் காரணம். அதிகப்படியான பணத்தைக் குறைந்த வட்டியில் வங்கிக் கடனாக தருகிறமாதிரி சந்தையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணத்தைப் புழங்கவிடுவதுதான் ‘மானிட்டரி ஸ்டிமுலஸ்’ (Monetary Stimulus). ரிசர்வ் வங்கி சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த `நீண்டகால சிறப்பு ரெப்போ திட்டம்’ (TLTRO) இந்த மானிட்டரி ஸ்டிமுலஸுக்கு நல்லதொரு உதாரணம். ஆனால், பிஸ்கல் ஸ்டிமுலஸ் (Fiscal Stimulus) என்பது வேறு வகை. பொருளாதார மந்தநிலையில் மக்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை என்கிறபோது, நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களுக்குப் பணத்தை வழங்குவதுதான் பிஸ்கல் ஸ்டிமுலஸ். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 தரப்படுவதும் இதற்குச் சிறந்த உதாரணம்.

பொதுவாக, இந்த இரண்டும் வெவ்வேறான வழிமுறைகளில் இருந்தாலும், ஒரு நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப இவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும்போதுதான் அந்த நாட்டின் உற்பத்தி மற்றும் தேவை ஆகிய இரண்டும் அதிகரித்து, பொருளாதாரம் வளர்வதற்கு வழிபிறக்கும். ஆனால், நிதியமைச்சரின் சமீபத்திய அறிவிப்பில் எது மானிட்டரி, எது பிஸ்கல் எனக் கண்டுபிடிக்க முடியாதபடி கலந்துகட்டி இருந்தது சாதாரண மக்களை மட்டுமல்ல, பொருளாதாரம் நன்கு தெரிந்தவர்களையும் திணறப்படிப்பதாக இருந்தது.

ஜி.டி.பி-யில் எவ்வளவு?

‘ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். இது நமது ஜி.டி.பி-யில் 10%’ எனப் பிரதமர் சொன்னபோது, `உலகின் வேறெந்த நாடும் செலவழிக்காத தொகை இது’ என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், `நேரடியாகச் செய்யப்படும் கூடுதல் செலவினங்கள் வகையிலான அறிவிப்புகளின் மதிப்பு, நமது ஜி.டி.பி-யில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-2 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும்’ என்கிறார்கள். அரசிடமிருந்து நேரடியாகப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த விஷயத்திலும் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சியது. நேரடியாகப் பணம் தர வேண்டுமென்றால், அரசாங்கம் எக்கச்சக்கமாகக் கடன் வாங்க வேண்டும். அப்படிக் கடன் வாங்கினால், நம் நாட்டின் ரேட்டிங் குறையும். இதனால் மிக அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன், வெளிநாட்டு நிறுவனங்களும் நம் நாட்டில் முதலீடு செய்யத் தயங்கும் என்பதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை என்பது சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத உண்மை.

அரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! - ஒரு விறுவிறு அலசல்

கூடுதல் கடனுக்கு அனுமதி..!

நிதியமைச்சரின் அறிவிப்புகளில் சில நல்ல அறிவிப்புகளும் இருந்தன என்பதற்கு நல்லதோர் உதாரணம், மாநில அரசுகளின் வருடாந்தரக் கடன் அளவை மூன்று சதவிகித்திலிருந்து ஐந்து சதவிகிதமாக உயர்த்தியிருப்பது. ஏறக்குறைய எல்லா மாநிலங்களும் இதை வரவேற்றன. இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி சில நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசு. உதாரணமாக, `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரக் கூடாது’ என்று மத்திய அரசாங்கம் விதித்த நிபந்தனையைத் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும், குறைந்த வட்டியில் கடன் வாங்கப் பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே அமையும்.

அரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! - ஒரு விறுவிறு அலசல்

நடுநடுவே வந்த சீர்திருத்த அறிவிப்புகள்..!

பொருளாதார முன்னேற்றத்துக்கான நிதியுதவித் திட்டங்களை அறிவிக்கவந்த நிதியமைச்சர், பல்வேறு சீர்திருத்தங்களை நடுநடுவே கொண்டுவந்தது ஆச்சர்யப் படுத்தியது. ‘தற்சார்பு பாரதம்’ என்ற புதிய முழக்கத்துடன் இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்களின் முதலீட்டு உச்ச வரம்பை உயர்த்தியதும், விவசாயத்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததும் பரவலான வரவேற்பைப் பெற்றன. பாதுகாப்பு தடவாளங்கள் உற்பத்தித்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 74 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதால், இறக்குமதித் தேவையைக் குறைப்பதுடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும். ஆனால், மின் விநியோகம், அணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படுவது குறித்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்புமான கருத்துகள் வந்திருக்கின்றன.

`நீண்டகால தொலைநோக்குப் பார்வை நடப்பு காலத்தில் நம்மைச் சரியாக வழி நடத்தாது’ என்பது பொருளாதார நிபுணரான கெய்ன்ஸ் விடுக்கும் எச்சரிக்கை.

`கொந்தளிப்பான நேரங்களில் உடனடித் தீர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார். நிதியமைச்சரின் அறிவிப்பால், நீண்டகாலத்தில் நல்ல மாற்றங்கள் நடக்கும் என்றாலும், ‘இன்றைக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே!’ என்ற கவலை மக்கள் மனதில் படர்ந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

- நாணயம் விகடன் டீம்